Wednesday, December 11, 2024

என்ன தைரியம்? - கு. ப. ரா.

ஊரோசை அடங்கிவிட்டது. ‘ராக்காலப் பிச்சை தாயே!’ என்று ராகம் போட்டுப் பிச்சை கேட்டவர்கள் கூடத் திரும்பிப் போய்த் தெருக்கோடியில் கிடைத்ததைச் சாப்பிட்டுவிட்டு உறங்க முயலும் வேளை. மூன்றாவது வீட்டில் கடிகாரம் பதினொன்று அடித்தது கேட்டது.

பகலெல்லாம் உத்தியோக அடிமைத்தனத்தில் ஆபீஸர் முன்பு நின்றுகொண்டே இருந்ததால் சிரமம் மேலிட்டுத் தூங்க ஆரம்பித்தேன். குழந்தையை எழுப்பும் சத்தத்தில் நானும் எழுந்திருக்க வேண்டுமென்று, என் மனைவி கொஞ்சம் உரக்க என் காதில் கேட்க வேண்டுமென்று பேசியது எனக்குக் கோபம் மூட்டியது.

“ராஜம், அடே ராஜம்! நல்ல தூக்கம்! இந்தா பாலைக் குடிச்சுட்டுப் படுத்துக்கோ” என்ற வார்த்தைகளை அவனுக்கும் எனக்குமாகப் பிரயோகம் செய்துவிட்டு, அவனை எழுப்பி உட்காரவைத்துப் பால் தம்ளரை அவன் கையில் கொடுத்தாள்.

அவனுக்கு நல்ல தூக்கம்; மூன்று வயசுக் குழந்தைதானே! தூக்கக் கலக்கத்தில் கையில் கொடுத்த தம்ளரை அவன் சரியாகப் பிடித்துக்கொள்ளவில்லை. ஆகையால் அது கை நழுவிப் படுக்கையில் விழுந்தது. மெத்தையில் கொட்டிப்போய்விட்டது பால்.

“அடே கட்டையிலே போறவனே!” என்று என் மனைவி (அவள் பெயர் கோகிலம் என்று சொன்னேனோ?) பல்லைக் கடித்துக்கொண்டு அவன் முதுகில் ஓர் அடி வைத்தாள். கோபம் அவன்மேல் மட்டும் இருந்தால் அடி அவ்வளவு பலமாக விழுந்திருக்காது. தான் வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு வருகிற வரையில்கூடப் பேச்சுத் துணைக்கு விழித்துக்கொண்டிருக்காத ஒரு புருஷன்மீது ஏற்பட்ட கோபமும் சேர்ந்து அதை வலுப்படுத்தியது.

தூக்கக் கலக்கத்தில் குழந்தைகள் தாமாகவே காரணமில்லாமல் அழ ஆரம்பிப்பார்கள்; அடியும் விழுந்துவிட்டால் கேட்க வேண்டுமா? அதிலும் எங்கள் ராஜம் இராக் காலங்களில் உரக்க அழுது அக்கம் பக்கங்களை அதிர்ச்சி செய்வதில் பரிசு பெறக்கூடியவன். ஒருவன் ஸ்வாரஸ்யமாகத் தூங்க ஆரம்பிக்கும் பொழுது காதில் சங்கூதியது போல் சத்தம் தலைமாட்டில் ஏற்பட்டால் அவனுக்கு எப்படி இருக்கும்? அதற்கு மனைவி காரணமாயிருந்தால்தான் என்ன?

திடீரென்று நான் படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டதுமே, தான் செய்தது பிசகு என்பதை என் மனைவி உணர்ந்துவிட்டாள் என்று நம்புகிறேன்.

ஆனால் என் கோபம் தூக்கம் கலைந்ததால் ஏற்பட்ட விஷயம் என்பதை மறைத்துவிட்டேன்.

“கழுதை! குழந்தை பனிரெண்டு மணி வரையில் முழித்துக்கொண்டிருக்க வேணுமோ? தம்ளரை நீயும் பிடித்துக்கொண்டிருப்பதற்கென்ன கேடு உனக்கு? ரொம்பக் கிழிக்கிறயோ இந்த வீட்டில்?” என்று (இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அர்த்தமில்லாமலிருப்பவையான) பல பிரயோகங்களை வாக்கால் செய்து, கையாலும் என் மனைவி முதுகில் ஓர் அடி வைத்து அதற்குப் பலம் கொடுத்தேன்.

என் கோபம் அந்த அடியுடன் சமாப்தியடைந்துவிட்டது. அசட்டு நிலைமையை மாற்றுவற்குப் பொதுவான அநேகக் குற்றங்களை அவள்மேல் சுமத்த ஆரம்பித்தேன். தற்காப்பு உணர்ச்சி மூளைக்கு வேகம் கொடுத்தது.

“எப்பொழுதும் இப்படித்தானா? அர்த்த ராத்திரி வரையில் சமையலறையில் ஏதாவது உபயோகமில்லாமல் பொழுதைப் போக்கிவிட்டு நல்ல சிரம வேளையில் என் பிராணனை வாங்குகிறாய். எங்கேயாவது தொலைந்து போய்விட்டாலும்...” என்ற கடைசிப் பாணத்தையும் பிரயோகம் செய்தேன். என் மனைவிக்கு அது உபயோகமாக இருந்தது.

“தொலைந்து போகணுமா? அப்பா, உங்கப்பா என்னைத் தொலைந்து போகச் சொல்றா; நான் போறேன்” என்று சொல்லிவிட்டு என் மனைவி சடக்கொன்று கூடத்து இருளில் மறைந்துபோனாள்.

பெண்ணின் சமயோசித ஞானத்துக்கும் இயற்கை அறிவுக்கும் ஆணின் திறமை உறைபோடக் காணாது என்பது நிச்சயம். சிறிய சிறிய விஷயங்களில், நாள்தோறும் குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களிலேயே இது விளங்கும் என்பதை ஆண்பிள்ளைகள் யாவரும் (மனைவிகளைப் படைத்தவர்கள்) ஒப்புக்கொள்வார்கள். உதாரணமாக, என் மனைவி இமைக்கும் நேரத்தில் செய்த காரியத்தின் பயன் என்ன?

நான் தொலைந்து போகிறேன்” என்று சொல்லிவிட்டு என் மனைவி வெளியேறினாளோ இல்லையோ, ராஜம், “அம்மா தொலைஞ்சு போயிட்டா!” என்று அழ ஆரம்பித்தான்.

அவனைச் சமாதனம் செய்ய முயன்றேன்.

“எங்கேயும் போகல்லேடா! கூடத்திலே இருக்காள், தூங்கு.”

“இல்லே, தொலைஞ்சு போயிட்டா ஆ - ஆ!”

“இல்லேடா, இருக்காள்; எங்கேயும் போகல்லேடா.”

“அம்மாவை அழைச்சுண்டு வா, ஆ - ஆ!”

“வருவாள், தூங்கு!”

என் மந்திரம் ஒன்றும் பலிக்கவில்லை என்று சொல்லவும் வேண்டுமா?

ஏய், இங்கே வா; இவன் தூங்கமாட்டேங்கிறான்” என்று ரேழியை நோக்கிக் கொஞ்சம் உரக்கச் சொன்னேன்.

பதில் இல்லை!

“என் தூக்கம் கெட்டுப் போகிறது!”

கொஞ்சநேரம் சும்மா இருந்து பார்த்தேன். ராஜம் தாய் தொலைந்து போனதைப் பல்லவியாக வைத்துக்கொண்டு சவுக்க காலத்தில் ரோதனம் ஆரம்பித்துவிட்டான்.

“இந்தா, சொல்றது காதிலே படல்லியா? வறயா இல்லையா?” என்று போலி ஆத்திரத்துடன் கர்ஜித்தேன்.

அதற்கும் பதில் இல்லை. எனக்கே கொஞ்சம் சந்தேகம் தட்டியது. கொல்லைப்புறம் போயிருப்பாளோ? கிணற்றில் ஒன்றும் சத்தம் கேட்கவில்லையே? தாம்புக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு-இந்த மாதிரி ஊகங்கள் ஓட ஆரம்பித்தன. இல்லாவிட்டால் இவ்வளவு தைரியமாகப் பதில் சொல்லாமல் இருக்கமாட்டாள். மற்றொரு பக்கத்தில், என்னை அவமானம் செய்யத்தான் இப்படிச் சும்மா இருக்கிறாளோ, நானாக அவளைத் தேடிக்கொண்டு போய்ச் சரண் அடைய வேண்டுமென்று? அப்படியானால் என்ன தைரியத்தால் இப்படிச் செய்கிறாள்? புருஷன், நான் கூப்பிடுகிறேன்! ராஜத்தின் பலமா அவளுக்கு இந்தத் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது? நிச்சயமாகத்தான் திரும்பாமல் அவன் தூங்கமாட்டான் என்று தீர்மானம்; அதற்காக நான் அவள் மோவாய்க்கட்டையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவேன் என்று எண்ணம்.

பக்கத்தில் எங்கிருந்தோ ஆந்தை குழறியது. எதிர் வீட்டில் சுவாஸ காசக்காரர் ஓயாமல் இருமிக்கொண்டிருந்தார். ராஜத்தின் அழுகையும் ஓயவில்லை. இன்னும் சிறிது நேரம் அவன் அழுதால் அக்கம் பக்கத்தார் எழுந்து வந்துவிடுவார்கள் போல் இருந்தது. என்னாலேயே அந்த ஸ்வரத்தைச் சகிக்க முடியவில்லையே!

இந்த எண்ணங்களுக்கெல்லாம் மேலே அந்த நள்ளிரவில் எழுந்த எண்ணம் மற்றொன்று. இரவின் மரண மௌனமும் தனிமையும் அதை வலுப்படுத்தின.

என்னை வெற்றிபெற எண்ணியிருந்தால் என் மனைவியின் இஷ்டத்தைத்தான் பூர்த்தி செய்தால் என்ன? அவள்தான் கொஞ்சம் மகிழ்ச்சி கொள்ளட்டுமே! மேடு பள்ளமற்ற சலிப்பு வாழ்க்கையில் ஒரு நாள் இரவு ஓர் அதிர்ச்சி, ஒரு மனஸ்தாபம்; மற்றது போலன்றி இன்பத்தில் முடிவது - என் மனைவி தன் இருதய எழுச்சியில் சமாதானம்; அவளுடைய வெற்றியிரவு.

“இருடா, அம்மாவைக் கூட்டிண்டு வர்றேன்” என்று ‘டார்ச்சை’ எடுத்துக்கொண்டு அறையை விட்டுக் கூடத்திற்கு வந்தேன். டார்ச்சின் வெளிச்சத்தில் மனைவி ரேழியில் முகத்தை மூடிக்கொண்டிருந்ததைக் கண்டேன். அழுதுகொண்டிருந்தாள் போல் தோன்றிற்று. என்றும் அறியாத ஒரு பச்சாதாபமும் இரக்கமும் என்னை உலுக்கி எடுத்தன. என் சுயமரியாதை எங்கோ சென்றது. பதறிச் சென்று அவள் பக்கத்தில் நின்று, “கோகிலம்!” என்றேன்.

அவளுடைய அழுகையை நிறுத்துவதற்காகக் குனிந்து முகத்தை மூடியிருந்த முன்றானையைப் பலாத்காராமாக அகற்றினேன்.

நீண்ட நேரமாகப் பொருமிக்கொண்டிருந்தவள் இனிமேல் தாங்க முடியாது என்பதுபோல, என் மனைவி பக்கென்று சிரித்தாள்.

அந்த நிமிஷம் என் மனசு ஒரு அபூர்வ நிம்மதியை அடைந்தது. நிதானமாகக் கையை ஓங்கி அவள் முதுகில் மற்றோர் அடி வைத்தேன்.

“இந்தாங்கோ, இனிமே இந்த மாதிரி அடிச்சாக்கே - !” என்று புன்னகையுடன் அவள் கொஞ்சி முடிப்பதற்குள் அவளைக் கழுத்தில் கைபோட்டு இழுத்துக்கொண்டு உள்ளே சென்றேன்.

“இந்தாடாப்பா, உன் அருமை அம்மா!” என்று அவளை அவன் பக்கத்தில் படுக்கையில் தள்ளினேன்.

ராஜம் கண்ணீருக்கிடையே சிரித்துக்கொண்டு தாயின் மடியில் பாய்ந்தான்.

“இவனாலே உனக்கு ரொம்பத் தைரியம் வந்துட்டுது இப்போ” என்றேன், அவள் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டே.

“தூக்கம் வரல்லியா?” என்றாள், என் கண்களைப் பொத்திக்கொண்டு.

“உன் போக்கிரித்தனத்தை-” என்று ஆரம்பித்தேன்; என் வாயை அவள் புதைத்துவிட்டாள்.

•••

மணிக்கொடி, 15-08-1937

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.