Wednesday, December 11, 2024

உயிரின் அழைப்பு - கு. ப. ரா.

 1

அக்கா எழுந்து வாங்கோ!” என்று சீதாலக்ஷ்மி கெஞ்சின பாவனையாகக் கூப்பிட்டாள்.

“இன்னிக்கு இனிமே என் மனசு சமாதானப்படாது-நீ போய் எல்லாம் செய், போ?” என்றுவிட்டாள் அலமு.

“நீங்க வரணும். இல்லாட்டா நான் போகமாட்டேன்.”

“அதோ, பாட்டி கூப்படரா, போ, சொன்ன பேச்சுக் கேளு.”

“நீங்க வாங்கோ!” என்று சீதாலக்ஷ்மி பிடிவாதமாக நின்றாள்.

2

சீதாலக்ஷ்மியின் குழந்தை பாலுவுக்கு அன்று அக்ஷராப்பியாசம். ஆனால், அவளுக்கு நாத்தனார் அலமு தான் சகல காரியங்களையும் செய்து கொடுக்க வேண்டும். சுதாவாக அவளுக்கு ஒன்றும் செய்து வாடிக்கை கிடையாது; உலக வியவகாரமே தெரியாது. குழந்தைதான். குழந்தையாகவே இருந்துவிட்டாள். ஒவ்வொன்றிற்கும் நாத்தனார் தான் பைசல் அதிகாரி.

அலமு, குடும்பம் நடத்திய ஓரிரண்டு வருஷங்களில் புருஷனை இழந்தாள். தனக்கு ஜீவனாம்சமாகக் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு தம்பியுடன் வசித்துவந்தாள். அநேகமாகத் தம்பியின் குடும்பத்திற்குத் தேக உழைப்புக் கொடுப்பதிலும் தம்பி மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பண உதவி செய்வதிலும் தன் காலத்தைக் கழித்து வந்தாள். அந்த அலுவலும், பத்திரிகைகளும் அவள் தன் துயரத்தை மறக்கக் காரணமாயிருந்தன.

அவள் தாயாரைப் பெற்ற பாட்டிதான் வீட்டில் பெரியவள். பாட்டி பழைய காலத்தின் பரிபூரணப் பிரதிநிதி; அதாவது, ஹிந்துக் கூட்டுக் குடும்ப முறையிலும் சமூக மதப் பழக்க வழக்கங்களிலும் சாரத்தை மறந்து வெறும் சக்கையை வைத்துக் கொண்டு உயிரை வாங்கும் கோஷ்டியைச் சேர்ந்தவள். பேத்தி அலமு ‘இப்படியான பிறகு’ அவளுடைய வாழ்க்கையின் நன்னடத்தைப் பொறுப்பு முழுவதையும் தன்னிடம் அவள் புருஷன் ஒப்படைத்துச் சென்றுவிட்டதாக அவள் எண்ணினாள். கடுமையாகப் பேசுவதால்தான் ஒழுக்கம் தவறாது என்ற நம்பிக்கை அவளுக்கு.

“அலமு, வெறுமனே வாசத் திண்ணேலே என்ன வேலை? நாலுபேர் என்ன சொல்லுவா? உள்ளே முடங்கிண்டு கெடக்காமே என்ன பேச்சு வேண்டியிருக்கு ஒன் ஜன்மத்துக்கு?” என்பாள் ஒரு சமயம்.

“அதென்னடி, புருஷா வர சமயத்திலே கூடத்துலே போய்ப் படுத்துண்டிருக்கே? உன்னெ அடக்கரவா கெடயாது. ஒன்னெ சீனு ஏன்னு கேக்கறதில்லே!” என்பாள் மற்றொரு சமயம். இந்த மாதிரி சாட்டைகளை அடிக்கடி பிரயோகித்துப் பாட்டி தன் பொறுப்பைத் தாங்கி வந்தாள். முதலில் அலமு இந்தப் பாணங்களின் கீழ்ப் புழுப்போலத் துடித்தாள். ஆனால் காலம் போகப் போக, அவள் தேகத்துக்கு அந்த அடிகள் சொந்தமாகி விட்டவைபோல அவள் அவற்றைப் பொருட்படுத்தாமல் காலம் கடத்தினாள். தம்பியின் இங்கிதமும் அனுதாபமும், தம்பி மனைவியின் ஆறுதலும் போஷணையும், குழந்தைகளின் ஒட்டிய அன்பும் அவளைக் கொஞ்சம் வாழ்க்கையில் உற்சாகம் கொள்ளக்கூடச் செய்தன. பையன் பாலுவின் அக்ஷராப்பியாசம், பூணூல் முதலியவற்றை எப்படிச் சிறப்புடன் நடத்த வேண்டுமென்று ‘பிளான்’கள் போடுவாள். குழந்தை ராதைக்கு என்ன வாத்தியம் சொல்லிக் கொடுக்கிறது, கலியாணத்தில் என்ன சீர் செய்கிறது என்று இரவெல்லாம் யோசிப்பாள். பூணூலுக்குக் கட்டாயம் ‘பாண்டு’ வைக்கவேண்டும் என்று தம்பியிடம் கூறுவாள். தம்பி அக்கா வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்வதில்லை. அவள் சொல்வது தன் அபிப்பிராயத்திற்கு நேர் விரோதமாக இருந்தாலும் அவள் சந்தோஷம் அடைவதற்காகவாவது அதை நடத்திவிடுவான். அப்படி இருந்தபோதிலும் அவள் தம்பி தன் இஷ்டப்படி நடப்பதில்லை என்று கோபித்துக்கொள்வதும் உண்டு. அப்பொழுது சீதாலக்ஷ்மி அவளருகே வந்து கெஞ்சிச் சமாதானப்படுத்துவாள்.

அலமுவுக்கு வயது சுமார் முப்பது. அகாலத்தில் மங்கிலியத்தின் சோபையை இழந்ததால் பகற்காலத்துச் சந்திரனைப் போல இருந்தாள்.

சீதாலக்ஷ்மிக்கு வயது இருபத்திரண்டுதான். இரண்டு மூன்று குழந்தைகளை இளமையிலேயே பெற்றுவிட்டதால் பலம் குன்றிச் சோகை பிடித்தவள் போல இருந்தாள். அதிகமாகப் பாடுபடக்கூட அவள் உடம்பில் சக்தி இல்லை. ஆனால் அழகும் அமரிக்கையும் கொண்டவள்; இரக்கமும் இங்கிதமும் நிறைந்தவள். அதிகமாகக்கூடப் பேசமாட்டாள். அதனால் அவளுக்கு, ‘கர்வி’ என்றும் ‘முசிடு’ என்றுங்கூட ஒரு பேர் உண்டு. அலமு அதை ‘மூடிக்கொண்டு’ போனாள். அவள் பேச்சுவன்மை பெற்றவள். ‘தக்காருக்குத் தக்கபடி’ நடந்து கொள்ளும் திறமை படைத்தவள். காரியத்திலும் பம்பரம்; தம்பியின் குடும்பத்தை அவள்தான் நடத்தினாள் என்று சொல்லலாம்.

3

காலை ஒன்பது மணிக்கு முகூர்த்தம் வைத்திருந்தது. பத்து வீட்டுக்கு அப்புறமிருந்த பள்ளிக்கூடத்திற்கு ஊர்வலமாகச் சென்று திரும்ப வேண்டுமென்று ஏற்பாடு. அலமு அதற்காக வேண்டிய யாவற்றையும் தயார் செய்துவிட்டாள். குழந்தைக்குப் புதுச் சட்டை, நிஜார், வெல்வெட்டுக் குல்லாய், ஜோடு முதலியவைகளைத் தானே அணிவித்தாள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி முணுமுணுத்தாள்.

“ஏண்டி சீதா, நீ என்ன பண்றே? நீ போடப்படாதோ அதையெல்லாம்?”

அத்தை போட்டால்தான் அவனுக்குத் திருப்தி” என்று சீதாலக்ஷ்மி சந்தோஷத்துடன் சொன்னாள்.

அப்பொழுது சமையல்காரன் அவசரமாக வந்து பெரிய ஜாரணி வேண்டும் என்றான். அடுத்த வீட்டில் பெரிய ஜாரணி இருந்தது. ஆனால் அலமு போய்க்கேட்டால்தான் அவர்கள் கொடுப்பார்கள். ஆகையால் ‘நிமிஷத்தில்’ திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டு அலமு பக்கத்து வீட்டுக்குச் சென்றாள். திரும்புவதற்கு ஐந்து நிமிஷம் ஆகிவிட்டது.

ஊர்வலம் புறப்படுமுன் வீட்டுக்குள்ளே போய்விட வேண்டுமென்று அலமு வேகமாக உள்ளே நுழைந்தாள். புரோஹிதர் அப்பொழுதுதான் குழந்தையை முன்னிட்டுக்கொண்டு கூடத்தைவிட்டுத் தாழ்வாரத்திற்கு வந்தார்.

அலமு, ஒரு நிமிஷம் திகைத்துப்போய் அப்படியே நின்றுவிட்டாள். ‘இங்கேயே இந்த நிமிஷமே மறைந்துபோய் விடமாட்டோமா’ என்று அவளுக்குத் தோன்றிற்று. மறு நிமிஷம் முற்றத்தில் இறங்கி உள்ளே போய்விட்டாள்.

வாத்தியார் முதல் எல்லோரும் ஒரு நிமிஷம் என்னசெய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுபோய்விட்டார்கள்.

“ஏன் வாத்தியாரே, என்ன தாமதம்?” என்றான் அலமுவின் தம்பி.

குறிப்பறிந்து புரோகிதர் உடனே பையனுடன் வாசலுக்குப் போய்விட்டார்.

“அலமு, ஆனாலும் உன் புத்தி இப்படிப் போக வேண்டாம். சமயம் பார்த்து எதிர்க்க வரணும்னு சகுனத் தடையாக? ஒனக்குத் தோணித்தே!” என்றாள் பாட்டி.

அலமு ஒரு பதிலும் சொல்லவில்லை. உக்கிராண அறைக்குள் சென்று படுத்துக்கொண்டுவிட்டாள்.

4

ஆறுவருஷங்களுக்கு முன், பாலு பிறந்தபொழுது, அலமு சுமங்கலி. மஞ்சள் குங்குமம் ‘மடிநிறைய’க் கொண்டிருந்தாள். அப்போது அவள் யதேச்சாதிகாரி. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பூவுடனும் புதுப் புடைவையுடனும் பொலிவுபெற்றுப் புண்யாவாசனத்தன்று பூரித்து உலவினாள். அலங்காரம் செய்துகொண்டு அட்டகாசம் செய்தாள். தம்பியையும் தம்பி மனைவியையும் கேலிசெய்து கொஞ்சினாள். அப்பொழுது அவள் பயமற்று எங்கும் போகலாம்; சங்கோசமில்லாமல் எதிரே வரலாம். பிறந்தகத்து லக்ஷ்மி என்று அவளை அப்பொழுது எல்லோரும் கொண்டாடினார்கள். “எங்க அலமுக்குச் சமானம் யார்?” என்று வீடு வீடாகப் பாட்டி சொல்லிக்கொண்டு வருவாள். கல்யாணம், கார்த்திகை என்றால் அவள் இருந்தால் வீட்டில் விளக்குப் போட்டது போல இருக்கும்.

அன்று அலமு சுமங்கலி.

புருஷன் இறந்தபிறகு, அன்றுதான் அவளுக்கு அப்படி நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது துக்கம். புருஷன்போனது தனித் துக்கம். அதைப் பற்றி அவள் அழுது சில வருஷங்கள் ஆகிவிட்டன. உயிருடன் சித்திரவதை செய்யும் இந்த நிலைதான் தாங்கவொட்டாத துக்கம் என்பது அவளுக்கு அன்று பளிச்சென்று பட்டது. பாட்டியின் வார்த்தைகள்கூட அவள் காதில் ஏறவில்லை. அங்கே அபசகுனமாக எதிரே நின்றபோது நிர்வாணமாக நின்றது போன்ற அவமானம் அவளைப் பிடுங்கித் தின்றது.

புருஷன் இறந்ததால் புஷ்பம் மட்டும் போகவில்லை; போகம் மட்டும் போகவில்லை; சுயமரியாதையே போயிற்று - அவளுடைய மானிடப் பெண்மையே போயிற்று. வெறும் மிருகம் - அல்ல, மிருகத்திற்கும் கேடுகெட்ட அவமதிப்புக் கொண்ட ஜன்மம்... அழகு போகவில்லை; ஆனந்தம் போயிற்று, உயிர் போகவில்லை; உயிரின் சின்னம் போய்விட்டது.

“சீ! இந்த உயிர் ஏன் போகமாட்டேனென்கிறது? என் அன்பு - பாழாய்ப் போனது - எவ்வளவு அளவில் பெருகி என்ன பிரயோஜனம்? வெள்ள நீர்போல வீண்! என் செய்கை என்ன பயன்? என் கை, கரிக்கை - நான் செய்வது சோபிக்காது - நெஞ்சே, அழும்போது நீ ஏன் திடீரென்று பிளந்துபோகக் கூடாது?”

நன்றாக, விக்கி விக்கி அழுதாள் அலமு. அழுதால் உயிர்போகுமா?

அக்கா!”

“ஏன்?”

எழுந்து வாங்கோ!”

“நான் வரவில்லை. காரியம் நடக்கட்டும்.”

“நீங்க வராமெ நடக்காது!”

“ஏன் நடக்காது?”

நீங்க இல்லாமெ கொழந்தே அ, , சொல்ல மாட்டேங்கறான்.”

“என்ன?”

கொழந்தே அ, , சொல்லமாட்டேங்கறான்!”

“நீ சொல்லிக்கொடு, சொல்லுவான்.”

“அத்தை சொன்னால்தான் சொல்வானாம்!”

அழுது வற்றிப்போயிருந்த அலமுவின் ஹிருதயத்தில் திடீரென்று எங்கிருந்தோ உணர்ச்சி பொங்கி வந்தது. குழந்தை ராஜத்திற்கு அவள் இல்லாமல் முடியவில்லை. அவள் மனம் அன்பில் சுரந்தது.

“ஈசுவரா, இது என்ன சோதனை?” என்று வாய்விட்டு அலறினாள்.

“அக்கா, எழுந்து வாங்கோ!” என்று சீதாலக்ஷ்மி கெஞ்சினாள்.

“எங்கே வரணும், சீதா?”

என்னோடே வாங்கோ, காரியம் இருக்கு.”

“இதென்ன, செத்தவளுக்கு உயிரின் அழைப்பா?” என்று சொல்லிக்கொண்டு அலமு மறுபடியும் கண்களைத் துடைத்துக்கொண்டு அதற்குப் பதில் சொல்ல எழுந்தாள்.

•••

தினமணி வருஷ மலர், 1937

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.