1902ஆம் ஆண்டு ஜனவரி A. பட்டாபிராமையர் - ஜானகி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் மாதம் பிறந்தார். தெலுங்கு பேசும் பிராமணக் குடும்பம். உடன் பிறந்தவர்களில் மூத்த சகோதரி ராஜம்மாள். இளையவரான கு. ப. சேது அம்மாள். இவரும் எழுத்தாளர்.
தந்தை திருச்சி கொண்டையம்பேட்டையில் தென்னிந்திய ரயில்வே பணியிலிருந்தபோது, கு. ப. ரா. திருச்சி நேஷனல் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். 1918ல் தந்தை மறைவுக்குப் பின் குடும்பத்துடன் கும்பகோணத்தில் உள்ள சொந்த வீட்டுக்குத் திரும்பினார். 1921ல் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சமஸ்கிருதத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துக்கொண்டு பி. ஏ. படிப்பில் சேர்ந்தார். அதே கல்லூரியில் ந. பிச்சமூர்த்தியும் படித்தார். கும்பகோணம் பிள்ளையார் கோயில் தெருவில் கிழக்கிலிருந்து இரண்டாவதாக வடக்கு பார்த்த வீடு கு.ப.ரா.வுடையது. மேலண்டை வீட்டில் ந. பிச்சமூர்த்தி இருந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் கல்லூரியில் நாட்களில் ஆங்கிலத்திலேயே எழுதிவந்தனர். பின் இருவரும் தமிழில் எழுதத் தொடங்கினர். இருவருக்கும் நெருக்கமானவராக இருந்த வ. ரா. இவர்களை 'இரட்டையர்கள்' என்றே அழைத்தார்.
1926ஆம் ஆண்டு அம்மணி அம்மாளுடன் திருமணம். பின் மதுரை மாவட்டம் மேலூரில் எழுத்தராக அரசுப் பணியில் சேர்ந்தார். பின், வருவாய் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்றார். பத்து ஆண்டுகள் அரசுப் பணிக்குப் பின் கண்புரை நோயால் பார்வையை இழந்தார். இதனால் வேலையையும் இழக்க நேரிட்டது. கும்பகோணத்தில் டாக்டர். R. மஹாலிங்கம் அவர்கள் செய்த அரிய சிகிச்சையால் ஓரளவு கண் பார்வை மீண்டது. ஆனால், மீண்டும் அரசு வேலையில் சேர இயலவில்லை.
இதனால் எழுத்தையே நம்பி சென்னைக்கு வந்தவர் பல்வேறு இதழ்களில் எழுதினார். 'சுதந்திர சங்கு' இதழில் முதல் சிறுகதை 'விசாலாக்ஷி' வெளியானது. தொடர்ந்து 'மணிக்கொடி', 'காந்தி', 'ஹிந்துஸ்தான்' போன்ற இதழ்களிலும் கு.ப.ரா.வின் படைப்புகள் வெளியாகின. 1936ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' இதழில் உதவி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அடுத்த ஆண்டு குடும்பத்தையும் சென்னைக்கு அழைத்து வந்தார். 1938-39ல் பாரதமணி, பாரததேவி இதழ்களில் சிறிது காலம் பணியாற்றினார். பாரததேவியில் 'பாரத்வாஜன்', 'கரிச்சான்', 'சதயம்' ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்.
அப்போது 'ஹனுமான்' இதழில் வேலை பார்த்த பிச்சமூர்த்திக்கு கோயில் நிர்வாக அலுவலர் வேலை கிடைத்ததால் சென்னையை விட்டுப் போய்விட்டார். கு. ப. ரா.வும் கும்பகோணத்திற்கே குடிபெயர்ந்தார். அங்கு வீட்டுத் திண்ணையில் 'மறுமலர்ச்சி நிலையம்' என்ற புத்தக விற்பனை நிலையத்தைத் தொடங்கினார். 1942 ஆகஸ்டில் திருச்சி துறையூரில் 'கிராம ஊழியன்' பத்திரிகை தொடங்கப்பட்டபோது அதன் கௌரவ ஆசிரியராக நியமிக்கப்பட்டார். ஒன்பதாவது இதழிலிருந்து ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். கும்பகோணத்திலிருந்தே எழுதிக்கொண்டிருந்தார். அப்போது 'சிட்டி' கு. ப. ரா.வுக்கு திருச்சி வானொலி நிலையத்தில் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், கு. ப. ரா. அந்தப் பணியை ஏற்கவில்லை.
காங்கரின் என்ற நோய் காரணமாக முழங்காலுக்குக் கீழே இரு கால்களையும் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. கு. ப. ரா. அதற்கு சம்மதிக்கவில்லை. உடல் நலிவுற்றிருந்த அவர் 1944 ஏப்ரல் 27ஆம் தேதி காலமானார்.