தற்காலத் தமிழ் இலக்கியம் என்பது எந்தக் காலத்திலிருந்து ஆரம்பமாகிறது, யாருடைய நூல்கள் முதல் அது துவங்குகிறது என்பது ஒரு தனி விஷயம்; அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்க இங்கே இடமில்லை. இப்பொழுது நமது சௌகரியத்திற்காக ஏறக்குறைய அது சுப்ரமணிய பாரதி காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். ஏனென்றால் தமிழ் இலக்கியத்தில் தற்காலத் தன்மை முற்றிலும் வாய்ந்த புதுவழிகளைப் பாரதிதான் முதல் முதலில் விரிவாகக் காவியம், வசனம் இரண்டிலும் கையாண்டார்.
சிறுகதை என்பது தற்கால முறையில் பாரதிக்குப் பிறகுதான் பிறந்தது என்று சொல்ல
வேண்டும். வ.வே.சு. அய்யரும் பாரதியும் ரவீந்திரநாத் தாகூரின் பாணியையொட்டிக்
கதைகள் எழுதி இருக்கிறார்கள். குசிகர் என்ற பெயருடன் மாதவையாவும் குட்டிக் கதைகள்
எழுதி இருக்கிறார். ஆனால் அவை நவீன முறையில் சிறுகதைகள் என்று சொல்ல முடியாது.
வ.வே.சு. அய்யருடைய கதைகளில் சிலதான் தற்கால முறையில் அமைந்திருக்கின்றன.
சின்னக்கதை என்ற அர்த்தத்தில் சிறுகதை தொன்றுதொட்டு எந்த இலக்கியத்திலும்
இருந்து வருகிறது. ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜா என்ற ஆரம்பம் உலகத்தில் இளமைக்
காலத்திலிருந்தே இருக்கிறது. தற்காலத்துச் சிறுகதை அந்த மாதிரியான சிறுகதை அல்ல.
பின் சிறுகதை என்பதுதான் என்ன? அதற்கேதாவது இலக்கணம் ஏற்பட்டிருக்கிறதா? இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படி இருக்கக்
கூடாது என்று ஏதாவது விதிகள் உண்டா? புதிது என்று சொல்லும்படியாக அதில் என்ன இருக்கிறது? இந்தக் கேள்விகளை நாம் முதலில் கவனித்துவிட்டால்
தமிழ்ச் சிறுகதையைப் பற்றிப் பிறகு அதிகம் சொல்ல வேண்டி இருக்காது.
சிறுகதை என்பது நவீன முறையில் சம்பவத் தொடர் அல்ல. அந்த ராஜாவுக்கு ஒரு பெண்.
உலகத்திலேயே அவ்வளவு அழகு யாருமே கிடையாது. அவளுக்கேற்ற ராஜகுமாரனைத் தேட வேண்டுமே
என்று பெற்றோர்கள் இரவும் பகலுமாக யோசித்தார்கள். இந்த மாதிரி போகாது சிறுகதை.
ஏதாவது ஒரு கட்டத்தைத்தான் எடுத்துக்கொள்ளும்.
நவீனச் சிறுகதை ஒரே ஒரு நிகழ்ச்சியின் விஸ்தரிப்பு. அவ்வளவுதான். அது ஒரு
செயல் உருவமான நிகழ்ச்சியாக இருக்கலாம் அல்லது வெறும் நிகழ்ச்சியில்
ஆராய்ச்சியாகவும் இருக்கும். அந்த விஸ்தரிப்பு எவ்வளவு தூரம் சென்று இயற்கையானதும்
தவிர்க்க முடியாததுமான முடிவைப் பெறுகிறதோ அதுதான் சிறுகதையின் பரப்பு.
நீளம் - சில சமயங்களில் சிறுகதை ஒரு பக்கத்திற்குள் அடங்கி விடலாம். சில
சமயங்களில் சிறு நாவலைப்போல் சற்று நீண்டும் இருக்கலாம். நிகழ்ச்சி மட்டும் ஒன்றே
ஒன்றுதான் இருக்கும் என்பதை நான் முக்கியமாக வற்புறுத்த வேண்டும்.
ஒரு நிகழ்ச்சி - ஆகையால் ஒரே இடம், ஒரே காலம் - இந்த மூன்று எல்லைகளுக்குள் தான் சிறுகதை பிறக்கும். பல
வருஷங்களில், பல இடங்களில்
நடந்த சம்பவங்கள் அந்த நிகழ்ச்சிக்குக் காரணமாக வரலாம், முடிவிற்கு உதவலாம். ஆனால் சிறுகதை மட்டும் வானவில்
போன்ற வடிவும் வயதும் கொண்டது.
சிறுகதை தந்தத்தில் வேலை செய்த விக்கிரகம் போன்றது. அது சிறிதாகத்தான்
இருக்கும். கற்சிலை போலக் கனத்தோ பருத்தோ இருக்காது. ஆனால் கற்சிலையிலுள்ள சகல
அவயங்களும் ஆபரணங்களும் தந்த விக்கிரகத்திலும் இருப்பது போலச் சிறுகதையிலும் பெரிய
நவீனத்திலிருக்கும் கருத்து, நடை,
அலங்காரங்கள், உணர்ச்சி, வேகம், ஆழம் எல்லாம்
இருக்கும். நவீனத்தின் பரப்பில் விசாலமாகக் கிளம்பும் உணர்ச்சிப் பெருக்கு
முழுவதையும் ஒரு எழுத்தாளன் சிறுகதையில் மடைவாய் போன்ற நெருக்கத்திற்குள்
புகுத்திக் கிளப்பலாம். இந்த வகையில்தான் சிறுகதை நவீன இலக்கியத்தில்
தோன்றியிருக்கும் புதுக்கருவி. சரியாகச் சொன்னால் பழையதுதான் - அதை உபயோகிக்கும்
முறை புதிது. காமிராக் கண்ணாடி புதிதல்ல. அது உபயோகமாகும் முறை புதிது. அதுபோல
வெறும் கண்ணாடி இவ்வளவு அற்புதமாகப் படங்களைப் பிடிக்க உதவும் என்று காமிரா
வருவதற்குமுன் யார் நினைத்திருப்பார்கள்? சிறுகதையை இவ்வளவு சிறப்பாக்கிக் கையாளலாம் என்று தற்கால இலக்கியத்தில்தான்
கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரையில் வெறும் தத்துவமாகச் சிறுகதையை வர்ணித்துவிட்டேன். உதாரணம்
காட்டாவிட்டால் நான் சொல்வது சரியாக விளங்காது. ஆகையால் இப்பொழுது உதாரணத்துடன்
நான் சொன்னதையே திருப்பிச் சொல்லுகிறேன். சமீப காலத்தில் வெளிவந்த சிறுகதைகளில்
சிறந்தவை யாவற்றையும் நீங்கள் படித்திருப்பீர்கள் என்று வைத்துக்கொண்டுதான் நான்
உதாரணம் கூற வேண்டியிருக்கிறது. கதைக்கோவை முதல் தொகுதியைப் படித்திருந்தால்கூடப்
போதும்.
‘தருமம் தலைகாக்கும்’ என்ற சிக்கலற்ற முதல் கதையை எடுத்துக்கொள்வோம். அதில்
எது நிகழ்ச்சி? பல சம்பவங்கள்
இருக்கின்றன; ஆனால் ஒன்றுதான்
கதையின் சம்பவம். சுப்பையரைச் சோதிப்பதற்காகக் கலெக்டர்துரை பறையனைப் போல வந்து
சோறு கேட்கிறான். சுப்பையர் தானே ஒரு மரக்காலில் சாதம், குழம்பு, மோர் முதலியவற்றைக் கொண்டு போய்க் கொடுக்கிறார். அதுதான் கதையின் நிகழ்ச்சி.
முன்னால் சொல்லப்பட்டிருப்பவை எல்லாம் அதற்குக் காரணமும் மூலமுமான விஷயங்கள்.
நிகழ்ச்சியின் முடிவு எது? தானேதான்
பறையனாக வந்தது என்று கலெக்டர் மரக்காலைக் காட்டுகிறாரே - அதுதான். கதை இன்னும்
சுருக்கமாக இருக்கலாம். வார்த்தைகள் சுருங்கச் சுருங்கத்தான் கதையில் பிகுவும்
உறுதியும் வரும். நீர் சுருங்கச் சுருங்கக் கட்டிடத்தில் சிமென்ட் இறுகுவது போல.
அடுத்த கதை தேவானை:
அதில் தேவானை சேலத்தை விட்டுச் சென்னை போவதும் நிகழ்ச்சியல்ல. அங்கே
மில்ஜாபருக்குப் பலியாவதும் அல்ல. கடைசியில் அனாதையாகிக் கார்முன்
பிச்சைக்காரியாகி நிற்பதுகூட அல்ல. நிகழ்ச்சி ராமநாதையர் மனத்தில் நடைபெறுகிறது.
சேலத்தில் அவள் வீடு கட்டிச் செவ்வையாக வாழ்ந்தவள் என்று அவர் அவள் முகத்தைக்
கண்டு அறிந்து கொள்ளுகிறார். அவள் இருந்த நிலைமை - தான் காணும் நிலைமை இரண்டும்
அவர் உள்ளத்தைக் குடைகிறது. அதே நினைப்பாக இருந்து கனவும் காண்கிறார். அவளைத் தான்
காப்பாற்றுவதாகவும் மனைவி தடுப்பதாகவும் கனவு. தேடிப் பார்க்கிறார். அவளைக்
காணோம்.
‘விஜயதசமி’ என்ற கதையில் எச்சுமு சங்கிலியைத் திருடவில்லை என்பது நிகழ்ச்சி.
கதையின் முடிவில் வருகிறது. கதை முழுவதும் பூர்வாங்கம். அதே போலத்தான் ‘விடியுமா?’
என்ற கதையும். குஞ்சம்மாள் புருஷன்
இறந்துவிட்டது நிச்சயம் என்பது நிகழ்ச்சி. இறக்கவில்லையா, ஒருவேளை பிழைத்திருக்கக் கூடாதா என்ற உள்ளத் தவிப்பு
முழுவதும் அந்த முடிவிற்குப் பூர்வாங்கம். அந்த முடிவு மனைவி புருஷன் மரணத்தைப்
பற்றி அறிந்தபொழுது அவள் தவிப்பைப் போக்கி நிம்மதியைக் கொடுக்கிறது. மனித
சுபாவத்தின் விபரீதம்.
உதாரணங்கள் போதுமென நினைக்கிறேன். நான்கையும் நான்கு வகையான சிறுகதைகளாக
எடுத்துக்கொண்டேன். இப்பொழுது நான் முதலில் சொன்னவற்றை வேறொருவிதமாகத் திருப்பிச்
சொல்லுகிறேன்.
தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கியமான பகுதியாகத் தோன்றியிருக்கும்
சிறுகதை ஒரு புதிய இலக்கிய முயற்சி. ஆங்கிலச் சிறுகதையின் போக்கை அனுசரித்துத்
தோன்றியிருக்கிறது. இடம், காலம்,
நிகழ்ச்சி இவற்றின் ஒற்றுமையைப்
பொருத்து அதன் கட்டுக் கோப்பு அமைந்திருக்கிறது. பெரிய சந்தர்ப்பங்களையும் உணர்ச்சிப்
பிரவாகங்களையும்கூட அது காமிராவின் ‘லென்ஸ்’ போலத் தன் சிறிய பரப்பிற்குள்
கிரகித்து முழு உருவத்துடன் காட்டும் சக்தி பெற்றது. நீண்ட நவீனத்தில் காட்டும்
திறமை முழுவதையும் ஒரு எழுத்தாளன் சிறுகதையிலேயே காட்டலாம். தற்காலத் தமிழ்
இலக்கியத்தில் மற்றெல்லாப் பகுதிகளைக் காட்டிலும் சிறுகதைப் பகுதி மிகவும்
செழித்து வளர்ந்துவிட்டது. தமிழ் நாட்டில் இப்பொழுது இரண்டு மூன்று கவிகள்தான்
இருக்கிறார்கள். நாலைந்து வசன நடை எழுத்தாளர்கள்தான் இருக்கிறார்கள்.
நாடகாசிரியர்களோ மிகவும் குறைவு. ஆனால் சிறுகதை எழுத்தாளர்கள் மட்டும் குறைந்தபட்சம்
கை தேர்ந்தவர்களாகப் பத்துப் பேர் இருக்கிறார்கள். கதைக்கோவைத் தொகுதிகள்
இரண்டையும் புரட்டினாலே போதும். தமிழில் சிறுகதை எவ்வளவு சிறந்த வகையில் வளர்ச்சி
பெற்றிருக்கிறது என்பது தெரியும்.
ஏன் இந்தத் துறையில் மட்டும் இவ்வளவு வளர்ச்சி? சிறுகதை எழுதுவது சுலபமா?
சிறுகதை எழுதுவது லகுவல்ல. நாவல் ஒருவேளை சரியாக அமைந்துவிடலாம். சிறுகதை
சரியானபடி அமைவது வெகு கஷ்டம். பின் எதனால்?
சிறுகதையின் உருவமும் போக்கும் தற்காலத் தன்மைக்கு உகந்தனவாக இருக்கின்றன.
அதுதான் காரணம் இந்தச் செல்வாக்கிற்கு. அதனால்தான் இப்பொழுது நாடகங்களைக்
காட்டிலும் ஒற்றையங்க நாடகங்கள் அதிகமாகத் தோன்றுகின்றன. நீண்ட காவியங்களுக்குப்
பதிலாகச் சிறுசிறு பாடல்கள் பெருகுகின்றன. சுருக்கமும் சூக்ஷ்மமும் தான்
தற்காலத்தின் தேவைகள். மின்சார யுகமல்லவா? எதுவும் சீக்கிரமாக முடிய வேண்டும். தற்கால மனிதனுக்கு நீண்டு எதையும்
அனுபவிக்க நேரமில்லை. பொறுமையுமில்லை.
அதனால்தான் சென்ற ஐந்து வருஷங்களுக்குள் தமிழ் இலக்கியத்தில் சிந்தனை
தடுமாறும்படி சிறுகதை பெருக்கெடுத்துவிட்டது.
‘திருச்சி வானொலி உபயம்’
கலாமோகினி, 1-6-1944
***
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.