வீட்டின் பின்புறக் கொட்டிலில் வீரம்மாள் தனியாக உட்கார்ந்திருந்தாள்.
அழுகையால் சிவந்திருந்த அவளுடைய பெரிய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துகொண்டே
இருந்தது. மோவாய்க் கட்டையை வலது உள்ளங்கையில் தாங்கி ஏதேதோ
எண்ணிக்கொண்டிருந்தாள். கோதி அள்ளிச் செருகியிருந்த தலைமயிரில் காலையில்
வைத்துக்கொண்ட செவ்வந்திப் பூவும், கள்ள நாட்டு வழக்கப்படி பட்டைக்காரையுடன் சேர்த்துக் கழுத்தில்
போடப்பட்டிருந்த பூவும், அப்படியே
இருந்தன. காலையில் அணிந்த புதுச் சேலைகூட மாற்றப்படாமல் இருந்தது.
“ஏலா இதென்ன ரத்தம்?”
என்று கேட்டுக்கொண்டே அருகில் ஓடினாள்.
சிற்பியின் பதுமைபோல உட்கார்ந்திருந்த வீரம்மாள் மெல்ல வாயைத் திறந்து, “ஆமா, உம் மருமயென் கொடலு
ரத்தம்” என்று சொல்லி முடிக்கவில்லை.
அதற்குள், “ஏண்டி, உங்காளெ களுத்துத் துண்டு கணக்கா இருக்குதே?” என்றாள் மூக்காயி.
“ஆமாம்” என்று பதிலளித்துவிட்டு, வீரம்மாள் மறுபுறம் திரும்பிக்கொண்டாள்.
மாலைச் சூரியனின் கிரணங்கள் அவள் கண்களைச் சற்றே கலக்கியதைக்கூட அவள்
பாராட்டவில்லை.
•
பதினெட்டுப் பட்டிகளுக்குப் பெரிய அம்பலக்காரனான பொங்களியாண்டியின் ஒரே மகள்
வீரம்மாள். பதினாறு வயதாகையால் அவளது கறுத்த மேனி யௌவனத்தின் கட்டழகு
பெற்றிருந்தது. மங்கைப் பருவம் அவளுடைய முகத்தில் மிதப்புக்கொண்டிருந்தது.
சாதாரணமாகவே கள்ளப் பெண்கள் சரீரக் கட்டில் கியாதி பெற்றவர்கள். அத்துடன்
வீரம்மாளின் முகத்தெளிவும் சேர்ந்து அவளை அந்நாட்டுக்கு ஒரு திலகமாக்கியது. அவளை
மருமகளாக்கிக்கொள்ள அநேக அம்பலக்காரர்கள் விரும்பினார்கள். ஆனால் ஆசாரப்படி,
அவளை மூக்காயியின் அண்ணன் மகன்
காத்தானுக்குக் கட்டிக்கொடுப்பதாகப் பரிசம் போட்டிருந்தது. தை பிறந்ததும்
‘கண்ணாலம்.’
அன்று ‘மஞ்சவெரட்டு.’ காலை முதலே பதினெட்டுப் பட்டிகளிலிருந்தும் மாடுகள் வரத்
தொடங்கின. வரவர அவற்றைத் தொழுவுகளில் அடைத்து வைத்தார்கள். கள்ளப் பெண்களும்
ஆண்களும் திரள் திரளாக வந்துகொண்டிருந்தார்கள். பெண்கள் புதுச்சேலை உடுத்துத்
தலைமயிரை வேப்பெண்ணெய் தடவி வாரி முடித்துக் கொண்டையிலும் கழுத்திலும் செவ்வந்திப்
பூக்களைச் செருகிக்கொண்டிருந்தார்கள். கை தவறாமல் கரும்பு!
வீரம்மாளும் அன்று காலையில் வெகு உற்சாகமாகத் தன்னை அலங்கரித்துக்கொண்டாள்.
ஆனால், முதல் நாளிரவு
சாப்பாட்டுப் பந்தியில் தன் அப்பன் பேச்சு வாக்கில் பேசினதில் மனத்தாங்கல் கொண்டு,
தன் ‘அயித்தான்’ தன்னுடைய மாட்டைப்
பிடிக்கத் தீர்மானித்துவிட்டான் என்று கேட்டதும் அவள் கவலை கொண்டாள்.
பந்தியில் பேச்சு வந்தபொழுது பொங்களியாண்டி அம்பலம், தன் மகளின் காளையை யாராலும் பிடிக்க முடியாது என்று
வீரம் பேசினான்.
அதைக் கேட்டதும் காத்தான் சிரித்தான். அம்பலத்திற்குக் கோபம் வந்துவிட்டது.
“என்னடா சிரிக்கிறே; நீ
பிடிச்சுடுவையோ?” என்று
உதாசீனமாக அவ்வளவு பேர் நடுவில் கேட்டான்.
காத்தானுக்கு ரோசம் வந்துவிட்டது.
“பொல்லாக் காளெ! நான் நாளைக்கி அதைப் பிடிக்காட்டி ஆம்பிள்ளையா?”
“ஏண்டா வெறும் பேச்சு! ஒம் பாட்டனாலேயும் முடியாது. ஐயெனெக்கூடல்ல ஏமாத்திடுச்சு!”
“ஏஞ் சும்மாப் பேசுறீங்க? நாம் பிடிக்காட்டி ஏன்னு கேளுங்க” என்று சபதம் கூறினான் காத்தான்.
இதுகூடக் காத்தான் தீர்மானத்திற்குக் காரணமாக இருந்திருக்காது. இளமையின்
பெருக்கில் மெய்ம்மறந்த வீரம்மாள், தன் செய்கையின் பலனைக் கொஞ்சமும் சந்தேகிக்காதவளாய், கொல்லென்று சிரித்து விட்டதுதான் அவனுக்குச்
சுருக்கென்று பாய்ந்தது.
வீரம்மாள் தன் காளையின் சக்தியை நன்றாக அறிவாளாகையால் இந்தத் தீர்மானத்தைக்
கேட்டதும் கவலை கொண்டுவிட்டாள். அதைப் பிடிக்க முயல வேண்டாம் என்று தன் தாயை
விட்டுக் காத்தானுக்குச் சொல்லச்சொன்னாள். மூக்காயியின் தூண்டுதலின் பேரில்
அம்பலக்காரன்கூட நல்லவார்த்தை சொல்லிப்பார்த்தான். ஆனால் காத்தான் கள்ள
ஜாதியானல்லவா?
சுமார் இரண்டு மணிக்கு மந்தைக் கோயிலில், எள்ளுப் போட்டால் கீழே விழாது என்பார்களே, அப்படிப்பட்ட கூட்டம். தொழுவில் அடைக்கப்பட்டிருந்த
ஜல்லிக் கட்டுக்காளைகள் திறந்துவிடப்பட்டவுடன் ஓடுவதற்காக நடுவில் ஒரு பாதை.
இரண்டு பக்கங்களிலும் கட்டை வண்டிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றின்
உள்ளும் மேலும் ஜனங்கள். மாடுகளைப் பிடிப்பதற்கு வந்தவர்கள் மட்டும் பத்துப்
பத்துப் பேர்களாகத் தனித்தனி இடங்களில் விட்டுவிட்டுப் பதுங்கி இருந்தார்கள்.
மந்தைக் கோயில் தெய்வத்திற்குப் பூசையானவுடன் தொழுவுகள் அம்பலகாரன் கையால்
திறந்துவிடப்பட்டன. கொட்டு முழக்குகள், ஜனங்களின் கூச்சல்கள், கூட்டம்,
- இவற்றால் மிரண்ட மாடுகள் வாலை
எழுப்பிக்கொண்டு தலைதெறிக்க நாலுகால் பாய்ச்சலில் ஓடின. வழக்கமான சில மட்டும்
கூட்டத்தைத் திரும்பித் திரும்பி எதிர்த்துக்கொண்டு நடந்து சென்றன. இவைகளை
‘நின்னுகுத்தி’ என்பார்கள். ஓடுபவைகளைக் காட்டிலும் இவைகளைப் பிடிப்பதுதான்
கஷ்டம். நாட்டியக் குதிரை போல ஓர் இடத்தில் நின்றுகொண்டு நாலுபுறத்திலும்
திரும்பித் திரும்பிப் பாயும். ‘நின்னுகுத்தி’ மாடுகள் அப்படிப் பாயும்பொழுது
அந்தத் திக்கிலிருக்கும் கூட்டம் குபீரென்று கலையும். மாடுகள் நெருங்கிவிட்டால்
பொத்தென்று கீழே விழுந்து விடுவது தப்புவதற்கான ஒரு யுக்தி. கீழே விழுந்தவர்களை
அவை குத்துவதில்லை.
காத்தான் தன் சகாக்களுடன் ஒரு பக்கம் காத்திருந்தான். பிடிக்க வசமாகத் தன்
பக்கம் வந்த பல மாடுகளைக் கண்ணெடுத்துக்கூட அவன் பார்க்கவில்லை. வீரம்மாளின் காளை
சீவிய கொம்புகளுடனும் மதுவால் வெறிகொண்ட பார்வையுடனும் அவ்வளவு கூட்டத்தின்
நடுவில் நடை போட்டுக்கொண்டு வந்தது. எதிரில் ஒருவரும் தோன்றத் துணியவில்லை.
பக்கங்களும் காலியாக இருந்தன. அடிக்கடி வாலைப் பிடித்து இழுக்க முயலும் சில
துடுக்கான வாலிபர்களை மட்டும் ஒரு திரும்புத் திரும்பி விரட்டிற்று. அவன் என்ன
செய்யப் போகிறானென்பதைப் பார்ப்பவர்கள் அறிவதற்கு முன் குபீரென்று அதன்முன்
பாய்ந்தான் காத்தான். அதே கணம் வெகு கோபத்துடன் மாடு கொம்புகளைத் தாழ்த்தியது.
கூட்டம் அலறிற்று.
ஆனால் மறுகணம் காத்தான் மாட்டின் கொம்புகளை அணைத்துக்கொண்டு அதன் கழுத்தில்
கால்களைப் பின்னிக்கொண்டிருந்தான். மாடு வெறிபிடித்தது போல் ஓட ஆரம்பித்தது.
காத்தான் தன்னுடைய பற்களால் அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த புதுத்துண்டை
அவிழ்த்துக் கவ்விக்கொண்டு, அபாரத்
துணிச்சலும் தீர்மானமும் கொண்டு ஓர் ஊசல் கொடுத்து, திடீரென்று கையைவிட்டுப் பின்புறமாக மாட்டின்
முதுகின்மேல் தாவினான். தாவின சமயம் மாடு ஒரு மரத்தடியில் வந்தது. ஒரு வினாடிதான்
அவனுக்கு யோசிக்க இடமிருந்தது. மரத்தில் தொத்திக்கொள்ளலாம் என்று கிளையைப் பற்றிக்
கால்களைத் தூக்கினான். மாடு வெருண்டதுபோல் பின் வாங்குவதற்கும், திடீரென்று அவன் சுமையால் எதிர்பாராத வண்ணம்
கிளை தாழ்வதற்கும் சரியாக இருந்தது. அந்த நிமிஷமே மாடு பாய்ந்து அவனுக்குக் கீழே
கொம்புகளைத் தாழ்த்திற்று. காத்தான் உடல் மாட்டின் கொம்புகளில் இறங்கியது. அந்தப்
பாரத்தைத் தாங்க மாட்டாத மாடு தலையைத் தாழ்த்தி உதறிற்று. பிடி நழுவி ரத்தம்
பீறிடக் காத்தான் கீழே விழுந்தான். மாடு பறந்துவிட்டது.
பின்னால் ஓடி வந்தவர்கள் காத்தானை ஒரு கயிற்றுக்கட்டிலில் போட்டு
ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் சென்றார்கள். காத்தான் ரத்த நஷ்டத்தால் பிரக்ஞை
இழக்கும் தறுவாயிலிருந்தான். வீரம்மாளுக்குச் சொல்லியனுப்பச் சொன்னான். அதே
கவலையாக வெகு ஆவலுடன் மந்தைக் கோயிலில் காத்துக்கொண்டிருந்த வீரம்மாளிடம் செய்தியுடன்
ஆள்வந்தான். அவள் ஆஸ்பத்திரிக்குச் செல்லும்பொழுது அவன் இறக்கும்
தறுவாயிலிருந்தான். அவனால் பேச முடியவில்லை. தன் ரத்தத்தில் தோய்ந்துகிடந்த
மாட்டுத் துண்டை அவள் கையில் கொடுத்துவிட்டுக் கண்களை மூடிவிட்டான்.
•
“ஏண்டி வீரம்மா, ரொம்பக்
காயமாடி?” என்று மூக்காயி
கேட்டாள். கையால் தாங்கப்பட்ட மோவாய்க் கட்டையை மெள்ளத் திறந்து வீரம்மாள், “செத்துப் போயிருச்சு” என்றுசொல்லி மறுபுறம் திரும்பினாள்.
தான் அத்தனை நாளாய்த் தன் கையால் தீனிபோட்டுத் தண்ணீர் காட்டி வளர்த்த காளை
இப்பொழுது யமஸ்வரூபமாகத் தன்முன் நிற்பதைக் கண்டாள் - திரும்பி வீட்டுக்கு
வந்துவிட்டது.
வீரம்மாள் சாவதனமாக எழுந்தாள். பக்கத்தில் இருந்த வேல்கம்பை எடுத்து, “புடிபட்டக் களுதைக்கி ரோசம் வேறேயா?” என்று வேலை அதன்மேல் பாய்ச்சினாள்.
•••
மணிக்கொடி, 30-04-1936
[ஜல்லிக்கட்டு பற்றிய கதை. ‘இப்பொருளில் எழுதப்பட்ட
முதல் சிறுகதையும் ஒரே கதையும் இதுவாகவே இருக்கக்கூடும்.’ என்கிறார்
பெருமாள்முருகன்.]
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.