பாதுஷாவும் கவி ஜகன்னாதரும் சொக்கட்டானாடிக் கொண்டிருந்தார்கள்.
அரசனும் கவியும் அவ்விரண்டு ஸ்தானங்களுக்கும் அக்காலத்திற்குரிய சின்னங்கள்போல
விளங்கினார்கள்.
- மொகலாய சாம்ராஜ்ய சக்தி ஒருபுறம், ஹிந்து கலைஞான சக்தி மற்றொரு புறம்.
பிற்பகல், அரசியல்
அலுவல்கள் தீர்ந்ததும், அமைதியளிக்கும்
கலைஞர்களுடைய கலப்பில் பொழுதுபோக்க பாதுஷா முனைந்தார்.
தர்பாரையடுத்துப் பாதுஷாவின் அந்தரங்க அறை. விசித்திர வர்ணங்கள் தீட்டிய ரத்ன
கம்பள விரிப்பின் மேல் பாதுஷா திண்டு போட்டுச் சாய்ந்துகொண்டிருந்தார். பக்கத்தில்
ஸம ஆஸனத்தில் கவி வீற்றிருந்தார். வாசல்கள் போன்ற பெரிய ஜன்னல்களின் வழியாகப்
பார்த்தால், டில்லியின்
அக்காலத்து எல்லைக்கு மேற்சென்ற பழைய ஹிந்து ராஜதானி இந்திரப்ரஸ்தத்தின் நீண்ட
சமவெளி தென்படும். கோடை வெய்யிலின் கனல் போன்ற காற்று, அந்தச் சாளரங்களில் நுழைந்து குளிர்ச்சியடைந்து
வீசியது. அறையின் ஒரு கோடியில் கட்டப்பட்டிருந்த ஒரு சிறு செயற்கை ஊற்றிலிருந்து
நீர் கிளம்பி, சிறு சிறு
திவலைகளாகத் தூவப்பட்டு அக்காற்றை இன்னும் குளிரச் செய்தது. மறைவிடத்திலிருந்து
வரும் ஊதுவர்த்தியின் கமழ், அலர்ந்த
ரோஜாக்களின் மணத்தில் மிதந்து வந்துகொண்டிருந்தது. பன்னீர் கக்கும் விளாமிச்சவேர்
விசிறியால் சேவகன் மெல்ல விசிறிக்கொண்டிருந்தான்.
“ஆமாம், நீர் எந்த ஊரென்று உம்மை இதுவரையில் கேட்கவேயில்லையே
நான்?”
“நான் ஆந்திர தேசத்துப் பிராமணன்.”
மொகலாய அரண்மனையில் சக்ரவர்த்தியுடன் உட்கார்ந்துகொண்டிருந்த கவியின்
எண்ணங்கள் அநேக வருஷங்களைத் தாண்டிப் பின் சென்றன. அவருடைய மனக்கண் முன்பு புராதன
ஆந்திரக் கிராமமும் அதன் பாழடைந்த தெருவும் கோடிக் கோவிலும் தோன்றின. அதனுடைய
மண்டபத்தில் ஐந்தாறு சிஷ்யர்களுக்குப் பாடம் கற்பித்துக்கொண்டிருந்த ஒரு வறுமையின்
உருவம். பிறகு ஒரு பக்கத்து நகரம், அதன் வேத பாடசாலை, வேதகோஷம்,
பண்டிதர்களின் வாதக் கூக்குரல்,
காவியாலங்காரங்களின் ஆராய்ச்சி,
இருபத்தைந்து வயதுவரை! கலைத் திறமையால்
செருக்கடைந்து, பண்டித
மனப்பான்மை மேலோங்கி கீர்த்தியின் பொருட்டு அவர் திக்விஜயம் செய்யக் கிளம்பி ஐந்து
வருஷங்களாகிவிட்டன. இப்பொழுது சக்ரவர்த்தியின் ஆஸ்தான கவி.
சக்ரவர்த்தி பகடையில் கவனம் செலுத்தியவண்ணம், “நீர் வடமொழியில் ஏதாவது நூல்கள் இயற்றி இருக்கிறீரா?”
என்று கேட்டார்.
“இயற்றியிருக்கிறேன், ‘ரஸகங்காதரம்’ என்பது என்னுடைய முதல்தர நூல்” என்று
சொல்லிக்கொண்டே கவி விளையாடினார்.
“அதன் பொருளென்ன?”
“அது ஓர் இலக்கண நூல். அலங்கார சாஸ்திரம், கவிதை, காவிய நடை முதலியவைகளை என்னுடைய செய்யுள்களைக் கொண்டே விளக்கியிருக்கிறேன்.”
“வெற்றி வெறி கொண்டுதானே பாரசீகம் கற்றீர்?”
“அதுமட்டுமல்ல காரணம். என் குல தர்மமாகிய ஸனாதனத்திற்கு இந்தக் காஜியாலேற்பட்ட
ஆபத்தைக் காக்கவே பாரசீகம் கற்றேன்.”
“ஆட்டத்தைக்கூட மறக்கும்படியான அவ்வளவு பற்றா
உமக்கு ஸனாதனத்தில்!” என்று அரசர் சிரித்துக்கொண்டே குத்தலாகக் கேட்டார்.
ஜகன்னாதருடைய முகம் சிவந்தது. தன் அஜாக்கிரதையை அறிந்து வெட்கமடைந்தார்.
“ஆனால் என் ஆட்சியில், மதத்திற்கு சிக்ஷை கிடையாது. என் கண்களுக்கு முன்
எல்லா மதங்களும் ஒன்று. இஸ்லாமுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்திருக்கிறேனோ அவ்வளவு
மரியாதை இந்து மதத்திற்கும் கொடுத்திருக்கிறேன்.”
“நான் அறியேனா என்ன? அதனால் தானே இந்தச் சமஸ்தானத்தில் சேர இசைந்தேன்!”
“என்ன வெயில், என்ன வேட்கை! ரொம்ப தாகமாயிருக்கிறது. உமக்கும்
ஏதாவது தேவையா தாக சாந்திக்கு?”
“இல்லை, வேண்டாம்.”
பாதுஷாவின் அந்தப்புரத்தில் ஜனானா நிர்ப்பந்தம் கிடையாது. அவர் உத்தரவுப்படி
அவரது பெண் லவங்கி ஒரு சிறு பொற் செம்பு நிறைய ஷர்பத் எடுத்துக்கொண்டு வந்தாள்.
அவள் சரிகை கலந்த ஒரு சிவப்புப் பட்டாடையை ஹிந்து யுவதி ரீதியில் அணிந்திருந்தாள்.
இடத்து வழக்கப்படி பின் தலையை முக்காடால் மூடியிருந்தாள். இலைகளின் ஊடு மைதீட்டிய
கறுப்பு வரியால் விளக்கப்பட்ட கண்கள் இரண்டு அதிசய மீன்களைப் போல முகவொளியில்
துள்ளி விளையாடின. மாதுளையின் சிகப்பையொத்த இதழ்கள் சற்றே பிரிந்து நின்று
முத்துப் போன்ற பற்களை அறிவித்தன. யௌவனத்தின் உன்னத அலைபோல் அவள் நடந்தபொழுது
காலில் அணிந்திருந்த சலங்கைகள் ஒவ்வொரு அடியிலும் ஒலித்தன. அந்தச் சந்தத்தைக்
கேட்ட கவி தலை நிமிர்ந்து பார்த்தார். ஒரு கையில் ஷர்பத் நிறைந்த செம்பையும் ஒரு
கையில் கிண்ணத்தையும் ஏந்தியபடி பெண் வந்துகொண்டிருந்ததைக் கண்டதும் கவியுனுடைய
மனதில் ஒரு உவமை தோன்றிற்று. ஆதியில் கடலைக் கடைந்த காலத்தில் ஒரு கையில் அமிர்த
கலத்துடன் மற்றொரு கையில் விஷபாணத்துடன் சௌந்தரிய ஸ்வரூபமாகத் தோன்றினாளே -
மோஹினி! - அந்தச் சித்திரம் அவர் ஞாபகத்திற்கு வந்தது.
பானமருந்தியானவுடன் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவள் திரும்பிப் போன
காட்சியைக் கண்ட க்ஷணமே கவி தன் உள்ளத்தைக் கொள்ளை கொடுத்துவிட்டார். அவள்
யாரென்று அவருக்குத் தெரியாது.
“இவள் யார்? தான் கொண்டு போகும் கும்பத்தில் உலகத்தாரின்
உள்ளங்களனைத்தையும் பிடித்து அடைத்துக்கொண்டு போகிறவள் போலக் காணப்படுகிறாளே!” என்று
மதிமயக்கத்துடன் பாதுஷாவைக் கேட்டார்.
பாதுஷா கவியின் உள்ள நெகிழ்ச்சியைக் கவனிக்கவில்லை. அவரது வாயினின்று வந்த
கற்பனையின் சாதுர்யத்தில் ஈடுபட்டுவிட்டார்.
“பேஷ் ஜகன்னாதரே! உமது கற்பனை வெகு அழகாக
இருக்கிறது. உமக்கென்ன வேண்டும் கேளும்!” என்று குதூகலத்துடன் கேட்டார்.
கவி மனது கலங்கி ஏங்கியிருந்த அந்த மயக்க வேளையில் அச்சொற்கள் வரம் கேட்கச்
சொன்ன அசரீரி போல் தோன்றிற்று.
“இந்தப் பெண்தான் வேண்டும்!” என்று கனவில்
சொல்லுவது போலச் சொன்னார்.
“இவள் என்னுடைய பெண்ணாயிற்றே?” என்றார் பாதுஷா ஆச்சரியத்துடன்.
அப்பொழுது திடீரென்று கவி முழுத் தீர்மானத்துடன் பேசினார். “அவளை நான் மணக்க வேண்டும்.”
இம்மொழிகளைக் கேட்டு பாதுஷா குழப்பமடைந்துவிட்டார்.
குத்தலாகப் பேசி அவருடைய பிரேமையை மாற்ற வேண்டுமென்று, “அவள் மிலேச்ச கன்னிகை; நீர் பிராமணன்; உம்முடைய மதம் என்ன ஆவது?” என்றார்.
பண்டிதரின் முகம் சற்று நேரத்திற்குள் அநேக விதமான மாறுதல்களைக் காட்டியது.
கண்கள் சாளரத்தின் வழியாக இந்திரப் பிரஸ்த மைதானத்தை நோக்கின. அதே இடத்தில்
பஞ்சபாண்டவர்கள் தர்மம் என்ற ஒரு கொள்கைக்காக - அதற்குக் கட்டுப்பட்டு ஒரு
ஸ்தீரியைத் தங்கள் பத்னியைக்கூட-கைவிடத் துணிந்தார்கள். அந்தத் தியாக பூமியில்
இப்பொழுது இருந்துகொண்டு ஸ்திரீக்காக யாரோ ஒரு ஸர்வாங்க ஸுந்தரிக்காகத் தர்மத்தைக்
கை விடுவதா?...
கவியினுடைய தடுமாற்றத்தைக் கவனித்த பாதுஷா தன் சூழ்ச்சியின் பயனில்
சந்தோஷித்து, “என்ன ஜகன்னாதரே,
ஜாதிக்குப் பிறகுதானே காதல், அல்லவா?” என்று மேலும் கேட்டார்.
இவ்வார்த்தைகள் சாட்டையடி போல ஜகன்னாதரின் காதில் விழுந்தன.
“இல்லையில்லை. ஜாதி வேற்றுமை நாம் கொண்டது.
பிரேமை தெய்வீகம். எனக்கு என்ன வேண்டுமென்று கேட்டீர்களல்லவா? எனக்கு யானை, குதிரைகள் வேண்டாம், பணமும் பதவியும் வேண்டாம். ஐயனே, உமது அருள் வடிவமாகிய இந்தப் பெண்தான்
வேண்டும்!”
தானாகவே வாக்குக் கொடுத்த பாதுஷா இன்னது செய்வதென்று அறியாதவராய்த்
திகைத்தார். அப்பொழுது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
“பண்டிதரே, என்னுடன் சமபந்தியாக நீர் சாப்பிடுவீரானால் அப்படியே
செய்யலாம்!” என்றார் பாதுஷா.
பண்டிதர் அந்தப் பிரேரணைக்கு ஒரு காலும் இணங்க மாட்டாரென்பது பாதுஷாவின்
தீர்மானம்.
கவியின் பார்வை மறுபடியும் சாளரத்திற்கு வெளியே சென்றது. அவர் அகஸ்மாத்தாகக்
கண்ணெடுத்துப் பார்த்தபொழுது திரும்பிப் போய்க்கொண்டிருந்த அப்பெண்ணின் கடைக்கண்
மேகத்திலிருந்து வீசிய மின் வெட்டு அவருடைய உள்ளத்தைப் பளிச்சிட்டது. அர்த்தம்
தெரியாமல் வர்ணித்த காட்டு மான்கள் மிரட்சிப் பார்வையின் பூரணப் பொருளும்
இப்பொழுதுதான் அவருக்கு விளங்கிற்று. அந்த மாளிகையின் செயற்கையழகின் கைப்புலனில்
அவளது இளமையின் வனப்பு ஒரு காட்டுக் கொடியின் செழுமையை ஒத்திருந்தது. துஷ்யந்தன்
முதன் முதலில் கண்ட சகுந்தலையைப் பற்றிய காளிதாசனின் சித்திரம் அவர் நினைவுக்கு
வந்தது. அவளது சிகப்பு ஆடையினிடையே அவள் முகமும் கைகளும் கால்களும் ஒரு ரோஜாவின்
வெளிரிய பாகங்கள் போலக் காணப்பட்டன. உள்ளப் போரில் காவிய உணர்ச்சி வெற்றி பெற்றது.
கடைசியில் கவி மெதுவாக அக்பரின் பக்கம் திரும்பினார்.
“அவளுக்காக நான் எதுவும் செய்யத்
தயாராயிருக்கிறேன்!” என்று சாவதானமாகச் சொன்னார்.
கவியின் முகத்தில் ஒரு பூர்ண, வெற்றியின் சோபை ததும்பியது.
•••
தினமணி வருஷ மலர், 1936
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.