இரட்டையர்கள் என்று என்னையும் கு.ப.ரா.வையும் ஸ்ரீ வ. ரா. குறிப்பிடுவது வழக்கம். எங்கள் ஊரில்கூட எங்களை ராம லக்ஷ்மணர்கள் என்றுதான் சொல்லுவார்கள். ராமன் இருக்கிறான், லக்ஷ்மணனைத்தான் காணவில்லை; அல்லது லக்ஷ்மணன் இருக்கிறான், ராமனைத்தான் காணவில்லை என்றாலும் சரிதான். இனி, செய்ய என்ன இருக்கிறது?
1921-ஆம் வருஷத்தில் ராஜகோபாலன் கும்பகோணம் காலேஜில்
சேர வந்த பொழுது ஒரு நோட்டுப் புஸ்தகம் கொண்டுவந்திருந்தான். அவ்வளவும் கவிதைகள்.
ஆங்கிலத்தில் அப்பொழுது மேல்நாட்டு இலக்கியங்களையும் டாகுரையும் ஆங்கில பாஷையின்
மூலம் ஆர்வத்துடன் படித்தோம்.
அந்தக் காலத்தில் கும்பகோணம் கல்லூரி மாணவர்களில்
சிலரும் ஆங்கிலப் பேராசிரியர் ஸ்ரீ எஸ். நரசிம்மையங்காருமாகத் தனிப்பட்ட முறையில் ‘ஷேக்ஸ்பியர்
சங்கம்’ என்ற சங்கத்தை நடத்தினார்கள். நாங்கள் உட்பட அதில் இருபது அல்லது இருபத்தைந்து
அங்கத்தினர்களே உண்டு. எங்கள் இலக்கியப் பணி அதில்தான் வேரூன்றிற்று என்று
சொல்லலாம் - அவைகளெல்லாம் ஆங்கிலத்தில் இருந்த போதிலும்.
இந்தச் சங்கம் ஞாயிற்றுக்கிழமைதோறும் தவறாது கூடும்.
ஒவ்வொருவரும் இன்பம் ஊட்டும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும். சிலர் சொந்தமாக
ஆங்கிலத்தில் கதையோ கட்டுரையோ எழுதி வருவார்கள். நான் அப்படி எழுதிய கதைகளில்
இரண்டே பின்னர் தமிழில் ‘மோஹினி’யும், ‘ஆராய்ச்சி’யும் ஆயின. சிலர் ஷேக்ஸ்பியர் முதலிய நாடகங்களின் பகுதியை
நடித்துக் காட்டுவார்கள். கு.ப.ரா. தன் கவிதைகளையே படித்து வந்தான். அவைகளிற் பல
பின்னர்ப் புனர்ஜன்மம் எடுத்துத் தமிழில் வந்துவிட்டன. மறு ஜன்மம் எடுக்காமல் சில
அதே நோட்டுப் புஸ்தகத்தில் இருக்கின்றன.
பி. ஏ. பட்டம் பெற்ற பிறகு 1925-ல் கு.ப.ரா.வுக்கு
மணமாயிற்று. பின் மேலூர் தாலுகா ஆபீஸில் ஒரு குமாஸ்தா வேலை கிடைத்தது. அதிருஷ்டம்
என்று உலகத்தில் சொல்வார்களே, அது அவனுக்கு இல்லை என்று உத்தியோகம் ஏற்ற நான்கு ஐந்து வருஷங்களுக்குள்ளாகவே
விளங்கிவிட்டது. அவன் கண்கள் இரண்டிலும் ‘காடராக்ட்’ வந்துவிட்டது. பார்வைக்
குறைவுடன் சிலகாலம் வேலை பார்த்தான். இயலவில்லை என்று தெரிந்த பிறகு ரஜா
வாங்கிக்கொண்டான். ரஜாவை நீட்ட முடியாதபொழுது ராஜிநாமாச் செய்தான். பிறகு
கண்களுக்குச் சஸ்திர சிகிச்சை நடந்தது. பார்வை வந்தது. ஆனால் வேலை வரவில்லை; வேலை கொடுக்க அரசாங்கத்தார்
மறுத்துவிட்டார்கள்.
கு.ப.ரா. பார்க்கக்கூடிய உத்தியோகம் அப்பொழுது
வேறோன்றுமில்லை. அந்தச் சமயத்தில் நான் தமிழில் எழுதத் துவங்கியிருந்தேன். அவனுடைய
மனத்தில் சிறு செடியாய், உத்தியோக நிழலில் ஓங்காதிருந்த சிருஷ்டித் திறன் உத்தியோகம் போனவுடன்
விருக்கென்று வளர்ந்து தழைக்க ஆரம்பித்தது. என்னைப்போல் தமிழில் எழுதுவதென்று
ஆரம்பித்தான். அவன் எழுதிய முதல் சிறுகதை ‘நூருன்னிஸா’. எழுதிய
முதல் நாடகம் ‘வால்மீகி’. அதற்குப் பிறகு தமிழ் இலக்கியமே நினைவாகச் ‘சுதந்தரச்
சங்கு’, ‘மணிக்கொடி’ முதலிய பத்திரிகைகளுக்கு எழுதி வந்தான்.
கதை, கவிதை, கட்டுரை, நாடகங்கள் இவை எழுதும் நேரம் போக, என்னுடன்
இருக்கும் நேரம் போக, வங்காளியும் தெலுங்கும் சங்கீதமும்
பயின்றான். வருஷங்கள் ஆக ஆக அவன் எழுதாத பத்திரிகையே இல்லாமற் போய்விட்டது. கு.ப.ரா.வைக்
கண்டுபிடித்த கௌரவம் ‘மணிக்கொடி’யையே சாரும்.
1938-ஆம் வருஷத்தில் கு.ப.ரா.வுடன் கலந்து ஆலோசித்து
நான் வக்கீல் தொழிலை விட்டுவிட்டு ‘ஹநுமான்’ துணை ஆசிரியராகச் சென்னைக்குச் சென்ற
சில மாதங்களுக்குள்ளாகவே, அவனும் சென்னைக்கு வந்துவிட்டான். ஸ்ரீ வ. ரா. ஆசிரியராய் இருந்து நடத்திய
‘தமிழ்நாட்டி’ல் அவனுக்கு இடம் கிடைத்தது. பிறகு ‘பாரத தேவி’யிலும் ‘பாரத மணி’யிலும்
சேவை புரிந்துவிட்டு, கடைசியாகக் ‘கிராம ஊழிய’னின் ஆசிரியராக
அமர்ந்தான்.
“கவி முற்றி யோகி ஆகிறான்” என்பது கு.ப.ரா.வின்
கொள்கை. அதை நான் ஒப்புக்கொள்வதில்லை. யோகி சில சமயம் கவியாகவும் இருக்கலாம், ஆனால் கவி முற்றினால் யோகி
ஆய்விடுவான் என்பது நிச்சயம் அல்ல. கவியும் ஒருவிதமான துறவி. ஆன்ம ஒளிக்குப்
பதிலாக அழகின் ஒளியில் குளிப்பவன். ராஜகோபாலன் இந்த மாதிரியான துறவி.
அவன் கவியுள்ளத்தைப் பண்படுத்தியது ஸம்ஸ்கிருதப்
படிப்பு. பி. ஏ. வகுப்பில் ஸம்ஸ்கிருதமே பாடமாக எடுத்துக்கொண்டான் என்று
சொல்லியிருக்கிறேன். ஸம்ஸ்கிருதக் கவிகளில் வால்மீகியும் காளிதாசனும் பவபூதியும் மேல்நாட்டு
ஆசிரியர்களில் கவி கீட்ஸும் ஷெல்லியும் நார்வே நாடகாசிரியர் ஹென்ரிக் இப்ஸனும் நவீனக் கவிகளில் டாகுரும்
அவன் மனத்தை மலரச் செய்தவர்கள். அவனுக்கு ஸம்ஸ்கிருதமல்லாமல் தெலுங்கிலும்
வங்காளியிலும் பரந்த அறிவு உண்டு.
இக்கவிஉள்ளந்தான் சிறுகதைகளாகவும் கவிதையாகவும் நாடகங்களாகவும் கட்டுரைகளாகவும்
பரிணமித்தன. ‘கனகாம்பரம்’, ‘புனர்
ஜன்மம்’, ‘காணாமலே காதல்’ என்ற மூன்று
சிறுகதைத் தொகுதிகள் முன்பே வெளிவந்திருக்கின்றன. ‘மோஹினி மாயை’ என்ற தொகுதி சமீபத்தில் வெளிவர இருந்தது. இவைகளைத் தவிர இன்னும் பல கதைகள்
உள்ளன. அவனுடைய நாடகங்களோ கவிதைகளோ இன்னும் தொகுக்கப்படவில்லை. கட்டுரைகளிற் சில ‘எதிர்கால
உலகம்’ என்ற
தலைப்பில் வெளிவந்திருக்கின்றன. இவைகளைத் தவிர்த்து வெகு அழகாக அரவிந்த கோஷின்
சரித்திரத்தை எழுதியிருப்பதோடு வங்க நாவல்களையும் ஸ்டீவன்ஸன், டால்ஸ்டாய் கதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறான்.
தமிழின் புது இலக்கிய சகாப்தத்தில் கு.ப.ரா.வின்
ஸ்தானத்தைப் பற்றி எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமில்லை; அவன் இடம் முன்னணியில். நீர் வற்றிப் பாசி படர்ந்து
குளம்போல் வளம் குன்றித் தேங்கிப்போன தமிழ் இலக்கியத்திற்குப் பெருமழை ஒன்று
வந்தது. அதைத்தான் ‘மறுமலர்ச்சி’ என்பார்கள். சுப்பிரமணிய பாரதியுடன் தோன்றிய
மறுமலர்ச்சி ‘மணிக்கொடி’ வாயிலாகவும் பிற பத்திரிகைகள் வாயிலாகவும் செழித்து
விரிவடைந்து மணம் வீசிக் கனி தந்தது. இம்மறுமலர்ச்சியின் பிரதிநிதி என்ற முழு
நினைப்புடனே எழுதியவர்களில் கு.ப.ரா. ஒருவன். மறுமலர்ச்சியின் இலக்கணத்தைக் கூற
இடம் இது அல்ல; புதுத் தமிழ்
இலக்கியத்தின் மணம் மிகுந்த மலர் அவன் என்று சொன்னாலே போதுமானது.
அநேகமாக, அவனுடைய எழுத்துக்கு ஆண், பெண் உறவுதான் அடிப்படையான விஷயமாய் இருக்கும்.
இவ்விஷயத்தைத் தவிர்த்து அவன் கதையோ, கவிதையோ எழுதவில்லை என்றுகூடச் சொல்லிவிடலாம். நிழலைப்போல் பெண்ணின் சித்தத்தை
இருளாக்கும் உணர்ச்சிகளையும் கருவாக நின்றுவிட்ட வேட்கைகளையும் வெகு நுட்பமாகவும்
அநாயாசமாகவும் படம்பிடிப்பதில் நிகரற்றவன். பெண்ணின் மனத்தைச் சித்திரிப்பதில்
வல்லவன். அவன் முதல் கதை ‘நூருன்னிஸ்ஸா’விலேயே இதைக் காணலாம். அவன் மறைவினால்
முடிவு பெறாமல் நின்றுபோன நாவல் ‘எதிர்ப்பி’லும் இத்திறமையை நன்றாகக் காணலாம். ஆண்,
பெண் உறவையே முக்கியமான விஷயமாகக் கையாண்டதால் அவன் எழுத்தில் ஏதோ ‘பச்சையாக'
இருப்பதாகச் சொல்கிறார்கள். பெண் மனம்
இப்படியா இருக்கிறது என்று நினைக்க இஷ்டப்படாதவர்கள் - உண்மையைப் பார்க்கப் பேசப்
பயந்தவர்கள் - கூறும் பேச்சு இது. அவர்கள் மறுப்பதே அவன் எழுத்தின் உண்மைக்கு
அத்தாட்சி. பச்சையாக இருந்தால் அது அவன் குற்றமன்று; ஆண் பெண் உறவு இப்பொழுது நிலவிவரும் முறையின்
குற்றம். உண்மையை மறைப்பது கலையாகாது; கீறி ஆற்றுவதே சிறந்த வைத்தியம்.
அவன் இலக்கிய நடையைப்பற்றி அதிகம் சொல்லத் தேவை இல்லை.
அவனது வசனங்கூடக் கவிதை போன்ற மென்மையும், நள்ளிரவை ஒளியேற்றும் மின்னல் போன்ற உவமை அழகும் கொண்டது. கதையின் போக்கைத்
தடுக்காத லாகவம் கொண்டது.
அவனைக் கவி என்றேன். அவன் எழுதியிருக்கும் கவிகள் ‘கருவளையும்
கையும்’ என்ற தலைப்பில் ‘மணிக்கொடி’யில் வெளிவந்தன. அது ஒரு புது முயற்சி. அந்த
முறையில் நான்தான் முதல் முதலாக ஆரம்பித்தேன் என்று கூசாமல் சொல்லுவேன். ‘காதல்’ என்ற மகுடத்தில் ‘மணிக்கொடி’யில்
ஒன்று எழுதினேன். அதற்குப் பிறகு ராஜகோபாலன் ‘கருவளையும்
கையும்’ ஆரம்பித்தான். படித்தால் கவிதா உணர்ச்சி ததும்பும். ஆனால் உருவத்தில் வசனம்
போல இருக்கும். யாப்பு மருந்துக்குக்கூட இராது. இதற்கும் விஷயம் ஆண், பெண்
உறவுதான். ‘காதலன்’, ‘காதலி’ என்னும் அகப்பொருளை -
நைந்து போன கனியை - எவ்வளவு புதுமையுடனும் கவர்ச்சியுடனும் கையாண்டிருக்கிறான்
என்பது ‘கருவளையும் கையும்’ என்ற கவிதைத் தொடர்ச்சியைப் படித்தால் விளங்கும்.
உவமை அழகும் உணர்ச்சிப் பெருக்கும் சொல்வளமும் நிறைந்த கவிதை. அவை புத்தக உருவில் இனி
வெளிவர வேண்டும்.
அவனுடைய இலக்கிய சேவை, அந்தரங்க வாழ்க்கை இவைகளைப் பற்றி இன்னும் ஆழ்ந்தும்
விரித்தும் கூறலாம்; ஆனால்
இங்கு இடம் போதாது.
அவன் வெறும் எழுத்தாளன் மட்டுமல்ல. நல்ல சங்கீத
ரஸிகன். முறையுடன் சங்கீதம் பயிலாவிட்டாலும், நல்ல ஸ்வரஞானம் உள்ளவன். கவிதைப் பித்துக்குச்
சமானமான சங்கீதப் பித்து உண்டு. ஹார்மோனியம் வாசிப்பான். வீணை தெரியவில்லையே என்று
ஏங்குவான்.
கு. ப. ராஜகோபாலன் இன்று கதையாகிவிட்டான்.
உத்தியோகம் என்பதில்லாமல், எழுத்துக்களை
மட்டும் நம்பி உயிர்வாழ வேண்டிவந்த அவனுடைய நிலைமையைப் பார்த்து நான்
வேதனைப்பட்டிருக்கிறேன். அவன் வேதனையைச் சொல்லத் தேவையா? அழகுத் துறவி பட்ட அவஸ்தைகள் எல்லாம் எனக்குத்
தெரியும். ஆனாலும் அவன் எழுதுவதில் சளைக்கவில்லை. வறுமை ஏற ஏறப் பத்திரிகைகளில்
அவன் எழுத்துக்கள் அதிகப்பட்டன. இம்மனநிலைதான் அவன் துறவையும் லட்சியத்தையும்
சாதனையையும் காட்டும் திறவுகோல். இதுதான் அவனுடைய தியாகம், வீரம்.
பிறரது தியாகத்தில், தான் கஷ்டப்படாமல் இன்பமடையும் வழக்கத்தைத் தமிழ்நாடு இன்னும்
விட்டுவிடவில்லை; விட்டுவிட
வேண்டும். யாரிடமேனும் தமிழ்நாடு சிறப்பைக் கண்டால் அவருடைய சுகதுக்கங்களைத்
தன்னுடையனவாகப் பாவித்துச் செயலாற்றத் தமிழ்நாடு முற்பட வேண்டும். பரந்த நெற்றி,
அடக்கமான உடல், மனம், குரல் என்று அவன் உருவத்தைப் பற்றிக் கூற நான் விரும்பவில்லை. அது
போய்விட்டது. ஆனால் கு.ப.ரா.வின் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அவன் மனைவியும் மூன்று பையன்களும் தலைசிறந்த பெண்
எழுத்தாளரான சகோதரி சேது அம்மாளும் இருக்கிறார்கள். அவர்கள் சோகத்தை நம்முடைய
ஆறுதல் இப்பொழுது மாற்ற இயலாது. அவர்களுடைய பிற கஷ்டங்களையேனும் தமிழ்நாடு
குறைக்கலாம். இவ்விஷயத்திலேனும் பராசக்தி அருள் காட்டட்டும்.
கலைமகள், 24-5-1944
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.