விளக்கு வைத்து இரண்டு நாழிகைதான். வீரகனூரில் ஊரோசை அடங்கிவிட்டது. தெருவாசலில் அவிழ்த்துப் போட்ட நெல் வண்டிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. வெள்ளி முளைக்கிற நேரத்திற்குக் கட்டி, வெய்யில் வேளைக்கு ஆத்தூர் போய்ச் சேர்ந்துவிட வேண்டியதற்காக, இரவே மூட்டைகளை ஏற்றித் தயாராக இருந்தன. மாடுகள் வைக்கோல் தின்றபோது அசைந்த கழுத்து மணிகளுடைய சத்தம் ஒரே தினுசாகக் கேட்டுக்கொண்டிருந்தது. வண்டிக்காரர்கள் வீட்டுத் திண்ணைகளிலும் குறடுகளிலும் படுக்க யத்தனம் செய்துகொண்டிருந்தார்கள்.
சேர்வைகாரர் வீட்டிலும் கூச்சல் கூப்பாடு ஓய்ந்துவிட்டது. சேர்வைகாரர்
சாப்பாடு முடிந்து ஏப்பம் விட்டுக்கொண்டு வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்தார்.
வாசற்புரையில் சிறு விளக்கெண்ணெய் விளக்கு ஒன்று எரிந்துகொண்டிருந்தது.
அவர் எப்பொழுது வெளியே வருவார் என்று காத்துக்கொண்டிருந்தான் சோலை. அவர்
வயிற்றைத் தடவிக்கொண்டு சந்தோஷமாக இருப்பதைக் கண்டு மெள்ள ‘ஐயா!’ என்றான்.
“ஏண்டாலே! கொட்டத்திலேயிருந்த சாணியெல்லாம் அள்ளிக் குமிச்சாச்சா? கன்னுகளெப் புடிச்சிக் கட்டியாச்சா? நேத்துச் செவலெக் கன்னெப் புடிச்சிக்
கட்டவேல்லியாடா நீ?” என்று
அடித் தொண்டையில் அதட்டிக் கேட்டார்.
“அல்லாம் ஆச்சுங்க... எங்கப்பனுக்கு வவுத்தாலே போவுதாம். மயக்கமா வந்து கீளே
வுளுந்திட்டாங்களாம்” என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் சோலை.
“யார்ரா சொன்னது? பொயுது
விடியர நேரத்திலே நான் பாத்தேனே! செங்க வண்டி ஓட்டிக்கிட்டு எதுக்கே வந்தானே!”
“எங்காத்தா வந்திருக்கு. ஆசுபத்திரிக்குப் போயி டாகட்டரெ கூட்டியாரணுமாம்.”
சோலைக்கு வயது பத்து. சேர்வைகாரர் வீட்டில் வேலைக்கு இருந்தான். அவனுடைய
தகப்பன் சடையன் அவரிடம் வாங்கிய கடனுக்குச் சோலை அடகாக இருந்தான். அவர் வீட்டில்
வேலை செய்ய வேண்டியது. வட்டிக்குப் பதிலாக அவர் சொன்னதையெல்லாம் கேட்க வேண்டியது.
விடிந்ததும் சோறு குடித்துவிட்டுச் சேர்வைகாரர் வீட்டிற்கு வருவான். இரவு படுக்கிற
நேரத்திற்குத்தான் வீட்டிற்குப் போவான். சில சமயங்களில் பகற்சோறு யஜமானன் வீட்டில்
கிடைக்கும். அதற்குப் பதிலாகப் பத்துத் துலக்க வேண்டும். கடனாக வாங்கின ரூபாயைச்
சடையன் திருப்பிக் கொடுக்கிற பொழுதுதான் சோலையின் அடிமைத்தனம் நீங்கும். இந்த
வழக்கம் சில பிராந்தியங்களில் இன்றும் கிராமாந்தரங்களில் இருந்து வருகிறது.
சடையனுக்கும் பூங்காவனத்திற்கும் சோலை ஒரே மகன். ஒரு சமயம் சௌகரியமாகவே
இருந்தவர்கள்தான் அவர்கள். ஒரு காணி நிலத்தைக் குத்தகைக்கு வாங்கிப் புருஷனும்
பெண்சாதியும் அதிலேயே இரவு பகலாகப் பாடுபட்டு நன்றாகப் பயிரேற்றினார்கள். அந்த
நிலத்தை உழுததுபோகக் கிராமத்தில் முதல் ஏராக மாடுகளைக் கூலிக்குக்கூட விட்டு
வந்தான் சடையன். சொன்ன சொல் தவறாதவன், தப்புத் தண்டாவிற்குப் போகாதவன் என்று அவனுக்கு ஊரில் நல்ல பெயர் இருந்தது.
விலைவாசிகள் திடீரென்று புரண்டதால் வெள்ளாமை வாயில் மண்விழுந்தது. உழுது
பயிர்ச் செலவு செய்வதில் லாபம் இல்லாமற் போயிற்று. அத்துடன் இரண்டு வருஷம்
சேர்ந்தாற்போலத் தண்ணீர்க் கஷ்டம். சடையனின் மாடுகள் சப்பைநோயில் திடீரென்று
மாண்டன. மாடு இல்லாமல் குத்தகைக்கு உழுவதில் உபயோகமில்லாமற்போயிற்று. ஜீவனத்திற்கு
வேறு வழி இல்லாமல், அந்த
ஊரிலேயே கொஞ்சம் பசையுள்ள பேர்வழியான சேர்வைகாரரிடம் நூற்றைம்பது ரூபாய் கடன்
வாங்கி மறுபடியும் ஒரு ஜதை மாடு வாங்கிச் சடையன் செங்கல் வண்டி ஓட்டினான்.
பூங்காவனம் அக்கிரகாரத்தில் நாலு வீடுகள் கூட்டி இரண்டு ரூபாய் சம்பாதித்தாள்.
பூங்காவனத்திற்கு வயது இருபத்திநாலு. சிகப்பாக இருந்ததால் அவளுக்குப்
பாப்பாத்தி என்று ஒரு பெயரும் உண்டு. நன்றாக மஞ்சள் அரைத்துப் பூசிக்கொண்டு
எப்பொழுதும் பளிச்சென்று இருப்பாள். பேசும்பொழுது அமரிக்கையாகச் சிரித்துக்
கொண்டேதான் பேசுவாள். ரொம்ப நல்லவள் என்று அவளுக்கு ஊரில் செல்வாக்கும் உண்டு.
“உங்காத்தா வந்திருக்கா? எங்கே?” என்று கேட்டார் சேர்வைகாரர்.
அதுவரையில் பூங்கா சேர்வைகாரருடன் பேசினதில்லை.
“இவுங்கப்பனுக்குக் காலரா கண்டுருக்கு. டாகட்டரெ கூட்டியாரணும். அவருக்கு
ரெண்டு ரூவா பீசாம். ஒங்களுக்கு ரொம்பப் புண்ணியம். இண்ணக்கிக் கொடுத்தா நாளெக்கி
வண்டி வாடவெ -” என்று பூங்கா சொல்லி முடிப்பதற்குள் சேர்வைகாரர் குறுக்கிட்டார்.
“ரெண்டு ரூவாயா! ரூவா கௌம்பரதே கஷ்டமாயிருக்குதே! நேத்துத்தான் இன்கம்டாக்சு
வரிக்குப் பொறுக்கிப் பொணச்சு அனுப்பினேன். அந்தப் பய வேலு குத்தவெ பாக்கி தரணும்.
ஏலே, அவனெப் போயி -”
“ஐயோ! அவசரமாச்சுங்களே! நாலுதரம் போயிருச்சி; நடக்க மாட்டல்லேங்கறாரு, கண் இருட்டுதாம்.”
“அதெல்லாம் சரித்தான்! பணமில்லியே! அந்த டாக்டரெத்தான் நாளெக்கித் தாரேண்ணு
கூட்டியாரதானே!”
“அவரு பீசில்லாமெ வரமாட்டாராமல்ல.”
“கரடியாக் கத்தினாலும் எங்கிட்ட செல்லாக் காசுகூடக் கிடையாது. நான் கொடுத்த
ரூவா வேற இருக்கு. அதுக்கு என்ன வளி? பயலோ, சுத்தமாச் சொன்ன
பேச்சுக் கேக்கறதில்லே. ரூவா கொடுத்திட்டு...”
“ஐயோ, இந்நேரம் ஒடம்பு
என்னமாயிருக்குதோ, ஒண்டியமா
விட்டுட்டு வந்திருக்கிறேன், பயலையாவது
கூட்டிக்கிட்டுப் போவட்டுமா?”
“அவன் வந்து என்ன பண்ணப்போறான்?”
“அவனையும் கூட்டிக்கிட்டுப் போயி டாகட்டர் கால்லே விளறேன்.”
“ஏண்டா, பத்து
தேச்சாயிருச்சா?”
“ஆயிருச்சுங்க.”
அப்பொழுது சடையன் வீட்டிற்கு அடுத்த வீட்டு ஷண்முகம் ஓட்டமாய் ஓடிவந்தான்.
அதைக் கண்டதும் பூங்காவனத்தின் ஹிருதயம் அப்படியே நின்றுவிட்டது.
“அண்ணெ எறந்து பூட்டாரு” என்று அவன் வாய்திறந்து சொல்ல அவள்
காத்திருக்கவில்லை.
“அடெ இதென்ன எளவு இங்கே... வெள்ளிக்கிளமே பொளுதும் அதுவும்?... ஏண்டா சம்முவம், வூட்லே வண்டிமாடு இருக்குதா? அதெ இங்கே புடிச்சாந்து கட்டு, அப்பாலெ எல்லாம் பாத்துக்கிடுவோம். உம்,
மனிசன்னு பொறந்தாச் சாவுதான்!”
பூங்காவனம் துக்கம் தாங்கமாட்டாமல் பொருமினாள்.
“ஐயோ! கடவுளே, வாய்க்கரிசிக்கும்
விதியத்துப் போனேனே!... நான் எங்கே போவட்டும் காசுக்கு?... சந்திரமதிபோலே” என்று வாய்விட்டு அழுதாள்.
மங்கிய விளக்கெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் அவளுடைய மெல்லிய உடல் துடித்ததைக்
கண்ட சேர்வைகாரர் மனதுகூட இளகிற்று.
“சும்மா இரும்மா! என்ன பண்ரது? அந்தப் பூச்சிக்கூட்டை இங்கிட்டுக் கொடு. எங்காச்சியும் கேட்டுப் பாப்போம்”
என்று அவர் தெருவைப் பார்த்துக்கொண்டு சொன்னார்.
பூங்காவனம் பூச்சிக்கூடுகளைக் கழற்றித் தரையில் சேர்வைகாரர் முன்
எறிந்துவிட்டுத் தன் மகனுடன் வீட்டிற்கு வீறிட்டுக்கொண்டு சென்றாள்.
•••
காந்தி, 25-07-1934; மணிக்கொடி, 15- 7-1938
[காந்தி இதழில் முதலில் வெளியான இக்கதை
மணிக்கொடியில் மறுபிரசுரம் செய்யப்பட்டபோது மறுஎழுத்தாக்கம்
செய்யப்பட்டிருக்கிறது.]
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.