“அம்மா, இதோ பாருங்கள். எங்கே, இன்னும் கொஞ்சம் மேலே பாருங்கள் - இல்லை, கொஞ்சம் பக்கமாக - இல்லை, இப்படி -” என்று சொல்லிக்கொண்டு, டைரக்டர் மிஸ் ஸீதாவினுடைய முகத்தை அலட்சியமாகத் தொடுவது போலத் தம் கையால் திருப்பினார்.
“ஸார், எவ்வளவு தரம் உங்களுக்குச் சொல்லுகிறது டைரக் ஷன் மட்டும் செய்யுங்கள் என்று? நீங்கள் எப்படி ஆடச் சொல்லுகிறீர்களோ ஆடிவிடுகிறேன் - தலை கொடுத்தாய்விட்டது - ஆனால் மற்றொருதரமும் கண்டிப்பாகச் சொல்லுகிறேன்; என்னைத் தொடக் கூடாது!” என்று சீதா கோபத்துடன் சொன்னாள்.
“தொடாமல் எப்படி முடியும், அம்மா? ஸ்டூடியோவில்
நாங்கள் எல்லாம் -”
“புனித புருஷர்கள்தாம் - எனக்குத் தெரியும்.”
டைரக்டர் கிருஷ்ணனுக்குக் கோபம் வந்துவிட்டது. எவ்வளவோ நடிகைகளை அவர் ஆட்டி
வைத்திருக்கிறார். பிரபல நடிகைகளைக்கூடச் சில சமயங்களில் அவர் பூட்ஸ் காலால்
‘இப்படித் திரும்பு, அப்படித்
திரும்பு’ என்று திருப்பி டைரக் ஷன் செய்திருக்கிறார்.
‘இவள் என்னவோ ரொப்பப் பிகுவாக இருக்கிறாளே, எம்.ஏ. பாஸ் செய்திருந்தால் என்ன? ஆடுவதென்று ஸ்டூடியோவிற்குள் அடியெடுத்து
வைத்துவிட்டால் டைரக்டர் அடிமைதானே! ரொம்ப யோக்கியமோ இவள்? நான் தொட்டால் இவளுக்கு என்னவோ ஒட்டிக்கொண்டு
விடுகிறதோ?’ என்று அவர்
யோசித்தார்.
“இப்படியெல்லாம் பூச்சி பிடித்தால் படம் எடுக்க முடியாது, தெரியுமாம்மா?”
“முடியவே வேண்டாம்!” என்று ஸீதா தீர்மானமாகச் சொன்னாள்.
•
ஸ்ரீமதி ஸீதா, எம்.ஏ.
பரீட்சையில் தேறினவுடனேயே டாக்கியில் சேருவதென்று தீர்மானம் செய்தாள். அவள்
டாக்கிக் கலையின் முன்னேற்றத்தில் ஆசைகொண்டவள். அதில் நடிகர்களும் நடிகைகளும்
திறமையுடனும் உணர்ச்சியுடனும் நடிக்கவேண்டுமென்பது அவள் அவா. படித்த பெண்கள் படக்
காட்சிகளில் பாத்திரங்களாக நடித்து வழிகாட்டினால்தான் தற்காலம் நடிகைகளின்
வாழ்வில் இருக்கும் சில ஊழல்கள் தொலையுமென்பது அவள் எண்ணம். நடிப்புத் தொழிலில்
தூய்மை ஏற்பட்டுவிட்டால், குடும்ப
ஸ்திரீகளும் தாராளமாக அதில் ஈடுபடலாம் என்று அவள் கனாக் கண்டாள். ‘நடிப்பில்
அசப்பியமான பாட்டுக்கள் இன்றி, உணர்ச்சியும் பாவமும் அதிகமாக வேண்டும். நல்ல கதைகள் இத்தகைய உயர்தர நடிக
நடிகைகளைக் கொண்டு எடுக்கப்பட்டால் நிச்சயமாக அவை சமூகத்தின் கலையுணர்ச்சியையும்
இன்பத்தையும் அதிகரிக்கும்’ என்றெல்லாம் எண்ணினாள். அதற்கு முதற்படியாகத் தானே
டாக்கியில் சேர்ந்து வழிகாட்ட வேண்டும் என்பது அவளது நோக்கம்.
‘உஷா தியேட்டர்ஸ்’ என்ற கம்பெனியார் தயாரிக்க முன்வந்த ‘பார்வதி பரிணயம்’ என்ற
படத்தில் பார்வதியாக நடிக்க ஒப்புக்கொண்டாள்.
காளிதாஸன் குமாரஸம்பவத்தில் சித்திரித்திருக்கும் பார்வதியின் உருவம் அவள்
மனத்தில் படமாகப் பதிந்திருந்தது. அந்த மகாகவியின் சித்திரிப்பைப் பின்பற்றித்தான்
பார்வதியாக நடிக்க வேண்டுமென்று தீர்மானித்தாள்.
இமயமலையின் சாரலில் பார்வதி தவக்கோலத்துடன் இருக்கிறாள். தோழிகள் இருவர்கூட
இருக்கிறார்கள். அவளது மனம் சிவ ஸ்வரூபத்தில் லயித்துப் போயிருக்கிறது.
மெய்ம்மறந்து சஞ்சரிக்கிறாள். இமயமலைச் சாரலில் பனிக்காலம் மறைந்து இளவேனில்
தோன்றிவிட்டது. நாடகப் படுதாவைப்போல அந்தப் பருவத்துப் பூரிப்புத் திடீரென்று
பூமிமேல் தென்பட்டது. சிவபிரானின் தவக்கோலம்போன்று தூயவெண்மையாயிருந்த பிரதேசம்,
பல வர்ணங்கள் கொண்ட சக்தியின் மாயா
ரூபமாகப் பரிணமித்தது. ஏகாந்தமும் சாந்தமும் குடிகொண்டிருந்த இடம், பட்சிகளின் நாதம் நிறைந்து மனம் தடுமாறும்
சஞ்சலத்தை ஊட்டும் ராஜஸ பூமியாக மாறிற்று.
அன்றுவரை ஒருவிதமான களங்கமும் இல்லாத மனத்துடன் சிவபிரானைத் தொழுதுவந்த
பார்வதிக்கு அன்று சொல்லமுடியாத ஏக்கம் ஒன்று ஏற்பட்டது. நித்தியானுஷ்டானத்திற்கே
பங்கம் ஏற்படும் படியாக ஒரு சோர்வும் அவளுக்கு உண்டாயிற்று. சிவார்ச்சனைக்குப்
பறித்து வந்த மலர்களிலிருந்து வந்த மணம் அன்று என்னவோ அவள் உள்ளத்தை
என்றுமில்லாதபடி கலக்கிற்று. அன்று அடித்த காற்று அவள் புலனுக்கு ஏதோ ஒரு புது
ஆனந்தலகரியாக இருந்தது; அது
வெறும் தென்றலன்று. தோழிகள் பார்வதியின் அவஸ்தையைக் கண்டுகொண்டுவிட்டார்கள். கேலி
செய்ய ஆரம்பித்தார்கள். மன்மதனின் பாணம் வேலை செய்ததோ?
பார்வதி வேஷம் தரித்த ஸீதா பார்வதி போலவேதான் இருந்தாள். மெய்நிறைந்த
யௌவனத்தின் பூர்ண களை அவளுடைய கண்களிலும் இதழ்களிலும் ததும்பிக்கொண்டிருந்தது.
அப்பொழுதுதான் ஸ்நானம் செய்து தலை மயிரை முடித்திருந்தாள். அதில் பவித்திரமான
புஷ்பங்களைச் செருகியிருந்தாள். நெற்றியிலும் கைகளிலும் அழகான சிறு விபூதிப்
பட்டைகள் இருந்தன. புருவங்களுக்கிடையே குங்குமத்தை ஒரு பட்டையாக
வைத்துக்கொண்டிருந்தாள். மேலாக்கை வக்ஷஸ்தலத்தில் இறுக்கி இடுப்பில் கொண்டுவந்து
செருகிக்கொண்டிருந்தாள். ஹிந்து நாகரிகத்தின் ஆரம்பக் காலத்தில், கஞ்சுகம் என்று பின்னால் ஏற்பட்ட ரவிக்கை
இல்லை. சிறிய மணிகள் கட்டிய ஓர் ஒட்டியாணம் (மேகலை) புடவையின் மேல் இறுக்கிப்
படிந்திருந்தது. முழங்கையருகே தோள்களில் தோளணிகள் அணிந்திருந்தாள். கையில்
சிவார்ச்சனைக்காக அப்பொழுதுதான் கொய்த வில்வத்தை ஏந்தி நின்றாள். அந்த நிமிஷத்தில்
ஸீதா தானே உமை என்று எண்ணிவிட்டாள்.
பார்வதியின் தோழி அவளிடம் நெருங்கி அவளுடைய யௌவனத்தைப் பற்றிக் கேலி செய்யும்
சந்தர்ப்பம்.
“தூர்ஜடியை மணக்க விரும்புகிறாய். இன்று உன் மனம் உன்வசம் இல்லை.
வயதாயிற்றல்லவா! உன் அங்கங்கள் சொல்லுகின்றனவே!” என்று சொல்லி, ஜாடையாகப் பார்த்துச் சிரிக்கிறாள் தோழி.
பார்வதி கோபம் கொண்டவள் போலப் புருவங்களை நெரிக்கிறாள். நெற்றிக் குங்குமம்
வளைகிறது.
“பவித்திரமான வேளையில் என்ன பேச்சடி?” என்கிறாள்.
அந்தக் குரலில் கொஞ்சம் கோபமும் கொஞ்சம் பாசாங்கும் இருக்கின்றன. தோழியைவிட்டு
விலகுபவள்போல ஒருபுறம் திரும்புகிறாள் புருவ நெரிப்புடன்.
•
“அம்மா, மார்புச் சேலையைக்
கொஞ்சம் தளரவிட்டால் தேவலை” என்று சொல்லிக்கொண்டு, டைரக்டர், கையால் ஜாடை காட்டினார்.
“இறுக்கிக் கட்டி ஒட்டியாணம் போட்டிருக்கிறேன், ஸார்!” என்று சொல்லி, ஸீதா டைரக்டரை எரித்துவிடுபவள் போலப் பார்த்தாள்.
தான் பார்வதியாக ஈடுபட்டிருந்த லயிப்பை அவர் கலைத்ததற்காக அவளுக்கு மித மிஞ்சிய
கோபம் வந்தது.
“டைரக்டர் சொல்வதைக் கேட்காவிட்டால் படம் உருப்படாது. நான் சொல்லுகிறபடி
நீங்கள் செய்யாவிட்டால் தோழியின் பரிகாசம் அர்த்தமில்லாமல்போகும்.”
“போகாது! எனக்குப் புத்தி இருக்கிறது. இருக்கிறபடியே இருப்பதுதான்
அதைக்காட்டிலும் நல்லது. உங்கள் யோசனை தப்பு.”
“எனக்கு நீங்கள் டைரக் ஷன் சொல்லித்தர வேண்டாம். தெரியாவிட்டால்
கேட்டுக்கொள்ளுகிறேன். இப்பொழுது நான் சொல்லுகிறபடி செய்யுங்கள்.
ஒட்டியாணத்தையாவது கழற்றிவிடுங்கள். மேலாக்குத் தளரும்.”
டைரக்டர் சொல்லுவது சுத்த அபத்தம் என்பது ஸீதாவின் எண்ணம். மேலும் அவள்
ஒட்டியாணத்தை எடுக்க இஷ்டப்படவில்லை. தன் மனத்தில் பதிந்திருந்த பார்வதியின்
சித்திரத்தில் அது ஓர் இன்றியமையாத அலங்காரம். அன்றியும், அதனால் ஆடையும் உடலில் ஒட்டியிருந்தது.
ஆனால் டைரக்டர் பிடிவாதம் செய்தார். சம்மதமே இல்லாமல் அதைக் கழற்றினாள். ஆனால்
கையிலேயே வைத்துக்கொண்டிருந்தாள்.
“ஏனம்மா, நாழிகை ஆகிறதே -
ஒரு காட்சிக்கு இவ்வளவு தாமதமானால் இன்று நூறடிகூடி எடுத்தாகாது. எங்கே கொஞ்சம்,
இப்படி -” என்று கிருஷ்ணன் ஸீதாவின்
மார்புச் சேலையை விரல்களால் தொட்டு இழுத்தார்.
சீதா மெய்மறந்தாள். கோபம் ரௌத்திராகாரமாக வந்துவிட்டது அவளுக்கு. அவள் என்ன
செய்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
கையிலிருந்த ஒட்டியாணத்தை டைரக்டர் முகத்தில் வீசி எறிந்தாள். திடீரென்று
பின்வாங்கிய வண்ணம் அவள் ‘விர்’ரென்று திரும்பி வெளியே போய்விட்டாள்.
“ஸ்டூடியோவிற்கு எதற்கு வருகிறாள் இந்தப் பதிவிரதை? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையோ?” என்று டைரக்டர் கிருஷ்ணன் முகத்தைத் தடவிக்கொண்டு
உதவி டைரக்டரைக் கேட்டார்.
•••
மணிக்கொடி, 15-01-1938
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.