Wednesday, November 10, 2021

பண்ணைச் செங்கான் - கு. ப. ரா.

 1

இதோ இந்த மாமரம் ஒங்க பாட்டன், மவராசன், வச்ச மரம். பளம் கல்கண்டு கணக்கா ருசியா இருக்கும்! இந்தத் தென்ன மரம் - அவரு கையாலே போட்ட நெத்து. இப்படித் தடத்தோடேயே வாங்க. வரப்புலே நடந்து பளக்கமில்லை. பட்டண வாசத்துப் புள்ளே” என்ற வேகமாக விடாமல் பேசினான் செங்கான்.

நானும் அவனும் என் நிலத்தில் ஒரு புறத்து வரப்பின் மேல் நடந்து போய்க் கொண்டிருந்தோம்.

“இதை எப்போப்பா அறுக்கலாம்?” என்றேன்.

நிலத்தில் நின்ற பயிரைக் காட்டிக்கொண்டு செங்கான், “இன்னும் கொஞ்ச நா போவணுங்க. தொண்டெக்கருதா இருக்குது. கொஞ்சம், மேப்பக்கம் பூறா, கருது வாங்கி நிக்கிது... இந்த மாமரத்து நௌல்லேயே குந்துங்க. ஏ, கங்காணி மவனே! சின்னச்சாமிக்கு ரெண்டு எளனி புடுங்கியா!” என்றான்.

எனக்கு இளநீர் குடிக்கத் தெரியவில்லை. மேலேயெல்லாம் கொட்டிக் கொண்டுவிட்டேன்.

“அந்த ஓலயெ அளுத்திப் புடிச்சிக்கிட்டு, சட்டுணு சாச்சுக்கணும்” என்று செங்கான் சிரித்துக்கொண்டே கையால் செய்து காட்டினான்.

‘பறச்செங்கான்’ என் பாட்டனார் கால முதல் எங்கள் நிலத்தைச் சாகுபடி செய்கிறவன். சொக்கனூர் கிராமத்திலேயே அவன்தான் வயது முதிர்ந்த கிழவன். எண்பது வயது என்று பேச்சு. ஆனால் பார்த்தால் அறுபதற்கு மேல் சொல்ல முடியாது. கையில் அவன் உயரமுள்ள மூங்கில் தடி. தடியெடுத்தவன் தோட்டி என்பார்கள். ஆனால் செங்கான் தோட்டியல்ல. வியவசாய ஜீவனம். பழுப்பு நிலத்தில் பயிரேற்றிப் பிழைத்தான். தளதளவென்று செழித்திருந்த மாரளவு பயிரின் நடுவில் சதா ஏதாவது வரப்பைக் கிண்டிக்கொண்டே இருப்பான்.

நிலத்தைவிட்டு வெளியே வந்தாலும் அந்தத் தடி, இடுப்புக் கோவணந்தான். கறுப்புக் கம்பளியொன்றைத் தலையிலிருந்து கால் வரை, மழைக்காலத்தில் சாக்கை மடித்துப் போட்டுக்கொள்வது போலப் போட்டுக்கொண்டிருப்பான். காலில் செருப்பு, கறுத்த உடல், நரைத்த மீசையும் உச்சிக் குடுமியும்.

“அம்மா சொகமாயிருக்கா? நம்மா கொளந்தே நல்லா இருக்கா? ஏன், ஒரு வாட்டி அம்மாளைக் கூட்டியாந்தா என்ன?”

செங்கான் கொஞ்ச தூரத்தில் உட்கார்ந்துகொண்டு கால் செருப்பின் வாரை இறுக்கிக்கொண்டிருந்தான்.

2

காலாவதி காலத்தில் நான் வருஷா வருஷம் என் கிராமத்திற்குப் போய்விட்டு வருவது வழக்கம். நான் போகாவிட்டால் செங்கான் விடமாட்டான். அவன் கொடுத்ததை வாங்கிக்கொண்டு வருவேன். பாதிப் பணம் போய்வருவதில் செலவாகிவிடும். அவன் கொடுக்கும் குத்தகை என் பாட்டனார் காலத்தில் ஏற்பட்டது. பக்கத்து நிலங்களுக்கெல்லாம் குத்தகை இரட்டித்துவிட்டது. அந்தத் தடவை நான் கிராமத்திற்குப் போயிருந்தபொழுது எல்லோரும் என்னைப் பரிதாபப் பார்வையுடன் பார்த்தார்கள். சிலர் கிட்டே நெருங்கி யோசனை கூறினார்கள்.

“பாவம்! வருஷத்திற்கு ஒருமுறை வருகிறீர்கள். உங்களுக்கு இந்த ஊர் நிலைமை எப்படித் தெரியும்? கிழவன் ஏதாவது குத்தகை தருகிறானா இல்லையா? ஊரெல்லாம் குத்தகை ஏறிப்போச்சு. உங்களை மட்டும் அவன் ஏமாற்றுகிறான்” என்று சொல்லிக்கொண்டு ஒருவர் முன்வந்து தாம் ஓர் ஆளை இரண்டு பங்குக் குத்தகைக்குப் பேசிவிடுவதாகச் சொன்னார்.

“இல்லை. இதனால் என்ன பிரமாதம்! ஏதோ ரொம்ப நாளாய் இருக்கிறான். இருந்துவிட்டுப் போகட்டும்” என்று நான் வழவழவென்று பேசினதைக் கேட்டதும் அந்த மனிதருக்குத் தைரியம் வந்துவிட்டது.

“நீங்கள் சும்மா இருங்கள், ஸார். நீங்கள் தாட்ஷண்ணியப்படுகிறீர்கள். நான் எல்லாம் ஏற்பாடு செய்துவிடுகிறேன். மேலும் பாருங்கள்: ஊரோடு ஒத்து வாழ வேண்டும். ஊரில் ஏற்பட்ட குத்தகை வர வேண்டாமோ? நீங்கள் இப்படி விட்டால் குடிப்பிரியம் கெட்டுப்போகும்.”

“இல்லை, இல்லை. அவனை நீக்க எனக்கு மனம் வரவில்லை. அவன்தான் சாப்பிடட்டுமே. நான் இதையே நம்பி இருக்கவில்லை” என்றேன் நான்.

“என்ன ஸார் நீங்கள் பேசுகிறது? ரொம்ப அழகு! பின் அவனுக்குத்தான் நிலத்தைத் தான சாஸனம் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விடுங்களேன். இந்தப் போக்குவரத்துச் செலவு வேண்டாமே” என்று என்னைக் கொஞ்சம் பரிகாசம் செய்து பேச ஆரம்பித்தார் அந்த மனிதர்.

நான் எப்பொழுதும் தாட்சண்ணியப் பிரகிருதி. புது மனிதன்கூட ஒரே நிமிஷத்தில் என் தலைமேல் ஏறிவிடுவான். நான் மெள்ள ஞெஞ்ஞ மிஞ்ஞவென்று சொன்னதை அந்த மனிதன் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. வேறு ஆளைப் பேசி என் பேருக்குக் குத்தகைச் சீட்டு எழுதி வாங்கிக்கொண்டு வந்து என் கையில் கொடுத்துவிட்டார். ‘இதை எப்படிச் செங்கானிடம் சொல்வது? அவனை எப்படி அப்புறப்படுத்துவது!’ என்பவைகளே எனக்குப் பெரிய பிரச்னைகளாகிவிட்டன.

3

அவன் அதிகமாகப் பேசி என்னை மடக்கி வசமாக்கிக்கொள்ளாமல் இருக்கும்பொழுதே அவனிடம் கண்டிப்பாக விஷயத்தைச் சொல்லிவிட வேண்டுமென்று மறுநாள் வயலுக்குப் போனபோது, நான் இரண்டு மூன்று தடவை வாயெடுத்தேன். ஒவ்வொரு தடவையும் வாய்வார்த்தை வெளியில் வராமல் நெஞ்சில் சிக்கிக்கொண்டது.

“பொளச்சுக்கெடந்தா வர வருசம் கிணத்தைக் கட்டி தொலெ வைக்கணும். சாமி, எனக்கு ஒரு சோடி மாடு வாங்கிக் குடுங்க; இந்த நெலத்துலே பொன் வௌயச்செய்யறேன்!” என்றான் செங்கான்.

“செங்கான், உனக்குத்தான் வயதாகிவிட்டதே; இனிமேல் உன்னால் உழுது பயிரிட முடியுமா?” என்று மெள்ள நான் ஆரம்பித்தேன்.

“நல்லாச் சொன்னீங்க. என்னெப்பேலே இந்த வூரிலே யாரு காலத்துலெ பயிரேத்தறான்? ஏரி மொதத் தண்ணி நமக்கு -”

“ஒனக்கு ஒத்தாசைக்கு ஒருவரும் இல்லையே?”

எம் மவன் பொந்திலியன் இருந்தா இந்த ஊரெயெ சாகுபடி பண்ணிடமாட்டேனா? மூணாம் வருசம் மகாமாயி ஆத்தா...” என்று சொல்லிச் செங்கான் பெருமூச்சுவிட்டான்.

“அவன் மவன் ஒரு பய இருக்கான். அவன் செய்வானே ஒரு பெரிய ஆள் வேலை!” என்றான் சற்றுநேரம் கழித்து.

செங்கான் மறுபடியும் கொஞ்சநேரம் சும்மா இருந்தான். விஷயத்தை அந்தச் சமயத்தில் அவனிடம் சொல்ல எனக்கு மனமே வரவில்லை. செங்கான் மாமரத்தடியில் உட்கார்ந்துகொண்டு பொந்திலியனை மாரியாத்தா கொண்டுபோன வகையைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தான் போலும்! திடீரென்று தலைதூக்கி என் முகத்தைப் பார்த்தான்.

“ஏஞ்சாமி. நான் பயிரிட முடியாமெ போட்டுடுவேண்ணு ரோசனெ பண்ரீங்களா? அது இந்த உசிரிலே இல்லை! நெலத்திலே ஈரமில்லே, சக்கையாப் போச்சு மண்ணு. ஏளெட்டுக் கடெ கட்டினா நல்லாயிருக்கும்; கட்டலாங்களா?”

பொழுது விழுந்துவிட்டது. தூரத்தில் நரிகள் ஊளையிட்டன.

“வாங்க. நேரத்துலே வூட்டுக்குப்போவோம் சாமி! ஒங்களுக்கு இருட்டுலே நடந்து பளக்கமிருக்காது” என்று முன்னே வழிகாட்டிக்கொண்டு செங்கான் வேகமாக வீட்டை நோக்கிப் புறப்பட்டான். அவனைப் பின்பற்றிச் செல்வதுகூட எனக்குக் கொஞ்சம் சிரமமாகப் போய்விட்டது.

“ஏஞ்சாமி, என்னெவிட்டு நெலத்தெ மாத்தணும்னு ரோசெனெயா? என் உசிரிலே இன்னொருத்தன் அதுலே ஏரு பிடிக்கவா? முடியுமா எங்கணாச்சியும்? என் நெலத்துலே எவன் நொளைவான்?... பாக்கறேன். அந்த மண்ணுத்தான் அவனுக்கு வெளெய்வாளா?”

கொஞ்சநேரம் மௌனமாக நடந்தான். நான் ஒரு வரப்பில் கால் தடுமாறி, வயலில் தண்ணீர் கட்டியிருந்த சேற்றில் காலை வைத்துவிட்டேன்.

“கெடக்குங்க, வாய்க்கால்லே காலெக் களுவிக்கலாம்... நாப்பது வருசமா என் கையாலே வரப்புப் பிடிச்சி வாய்க்கா பிடிச்சி... பெரியய்யா இருந்தா என்னெ வுட்டு மாத்தணும்னு நெனப்பாங்களா? மண்ணெக் கண்ணாக் காப்பாத்தி -” என்று சொல்லி வந்தவன் திடீரென்று நின்று, நான் வுடமாடடேஞ் சாமி!” என்றான்.

என் மனத்தில் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டேன்.

“நான் மாற்றுகிறேன் என்று உன்னிடம் சொல்லவில்லையே!” என்றேன்.

“அதானே கேட்டேன். ஒரு கலம் அரைக்கலம் நீங்க சாப்பிடறது நான் சாப்பிட்டா என்ன - இந்த வயக்காட்டுலே நான் பட்ட பாட்டுக்கு? நெத்தி வேர்வெ நெலத்துலே விள எம்பாங்க-அது எனக்கல்ல தகும்! ராப் பவலா எவன் என்னெப்போலே காட்டுலெ கிடப்பான்? ரவைக்கு ரவெ தாவத்துக்குத் தண்ணி கொடுக்கறாப்பேலே தண்ணி கட்டுவான்? - நேரமறிஞ்சு? நம்ம காட்டு லச்சுமி என்னோடே பேசுவாளே! ஒரு வருசம் சூறை உண்டா, சாவி உண்டா, தரிசுண்டா? மூணாம் வருசம் மளெ இல்லாதப்பக்கூடப் பயிரேத்திப் பிட்டேனே! இந்த வயக்காட்லெ ஔச்சேதான் நான் சாவணும் சாமி! இதெவுட்டா நான் செத்துப்போவேன்!”

4

காலை ஐந்து மணிக்குப் பல்தேய்க்க நிலத்துப் பக்கம் போனேன். செங்கான் கணீரென்ற குரலில் ஏற்றப்பாட்டுப் பாடிக்கொண்டே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தான்.

மூங்கிலிலை மேலே - தூங்கு பனி நீரே

தூங்குபனி நீரை - வாங்கு கதிரோனே!

என்ற பாட்டின் ஒலி என் காதில் விழுந்தது. வேலை மும்முரத்தில் அவன் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

“என்ன ஸார், செங்கான்கிட்டே சொல்லிவிட்டீர்களா, இந்தப் பயிரை அறுத்துக்கொண்டு நிலத்தை விட்டுவிட வேண்டுமென்று?” என்று என் நண்பர் கேட்டார்.

“இல்லை, சொல்லப் போவதில்லை. செங்கான் கொடுக்கும் நெல் போதும் எனக்கு!” என்றேன், தலை நிமிர்ந்து.

•••

மணிக்கொடி, 23-09-1934; ஹிந்துஸ்தான், 10-4-1938

[முதலில் மணிக்கொடியில் ‘பறச் செங்கான்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. ஹிந்துஸ்தானில் வெளியான மறுபிரசுரத்திலும் ‘கனகாம்பரம்’ தொகுப்பின் முதல் பதிப்பிலும் ‘பண்ணைச் செங்கான்’ என்ற தலைப்பே உள்ளது.]

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.