Wednesday, November 10, 2021

ஸம ஆராதனை - கு. ப. ரா.

புரட்டாசி மாதத்துக் கடைசி சனிக்கிழமை. காலேஜ் புரொபஸர் வெங்கடேச்வர அய்யர் வீட்டில் வெங்கட ரமணஸ்வாமி ஸமாராதனை என்று வைதீக பிராமணர்கள் அங்குமிங்கும் பரபரப்புடன் சென்றுகொண்டிருந்தார்கள். காலை எட்டு மணி முதலே அக்கிரஹாரத்துப் பையன்கள் அந்த வீட்டு வாசலில் டிகாணா போட்டுவிட்டார்கள். தூணைச் சுற்றுவதும் ஓடி விளையாடுவதும் கட்டியிருந்த வாழை மரத்துப் பட்டைகளைப் பிய்த்துப் போடுவதுமாக வெகுமும்முரமாக இருந்தார்கள். நாதஸ்வரக்காரன் ஸாவேரி ராகத்தை ஆலாபனம் செய்து பல்லவி பாடி ஸ்வரங்களைச் சரமாரியாகப் பொழிந்துகொண்டிருந்தான். அவ்வீட்டுப் பெண்கள் ஸ்நானம் செய்து புதுப்புடவைகள் உடுத்துப் பூச்சுற்றின கோடாலி முடிச்சுக்களுடனும் நெற்றி குங்கும அழகுடனும் விளங்கிக்கொண்டு இங்குமங்கும் போய்க்கொண்டிருந்தார்கள்.

அக்கிரஹாரத்துப் பஜனை கோஷ்டி உஞ்சவிருத்தி (மரியாதைப் பிச்சை) செய்துகொண்டு வந்தது. வெங்கடேச்வர அய்யர் பக்தி சிரத்தையுடன் பாகவதர்களின் கால்களைக் கழுவிப் பூஜித்து வலம் வந்து நமஸ்கரித்தார். தேவகாந்தாரியில் பாடிய

சரணம் வரதவெங்கடநாயக,

சரணம், சரணம்!

என்ற பாட்டுப் பிரத்யக்ஷமான தெய்வத்தை வேண்டுவது போலவே அவரைப் புளங்காங்கிதமாக்கிற்று. கண்களில் நீர் பெருக மெய்மறந்து நின்றார்.

வெங்கடேச்வர அய்யர் எம்.ஏ., காலேஜில் தர்க்க ஆசிரியர். வைதீக ஆசாரங்களைக் கைப்பற்றியவர். தினசரி ‘பூஜை புனஸ்காரம்’ அக்னிஹோத்ரம், முதலியவைகளைத் தவறாமல் செய்பவர். ஆராய்ச்சியின் அந்தியத்தைக் கண்டுபிடித்துத் தான் கடைசியில் சனாதன தர்மமே வியவஹாரத்திற்கும் வாழ்க்கைக்கும் பொருந்தினது என்ற தீர்மானத்திற்கு வந்ததாகச் சொல்லிக்கொள்வார்.

அதிலும் ‘வாழ்க்கையில் மனிதனை மெய்மறக்கச் செய்து புனிதமாக்கும் பக்தி மார்க்கமே எல்லாவிதமான ஸாதனைகளிலும் சிறந்தது. அது ஒன்றுதான் இசை, பொருள் என்ற இரண்டு சிறகுகளின் மேல் கருடன்போல உள்ளத்தை இட்டுச்சென்று பரவசமாக்குகிறது. வாழ்க்கையின் ஓய்வற்ற ஏமாற்றத்தை மறந்து கொஞ்சகாலமேனும் ‘நிம்மதி’யுடனிருப்பதற்கு இதே ஒரு சூழ்ச்சி. நாஸ்திகர்களையும் உணர்ச்சிப்பெருக்கில் வீழ்த்தி மூர்ச்சை போடச் செய்யும் வழி இது ஒன்றுதான். தேர்ச்சி பெற்ற பாகவதர்கள் ‘பஜனை பந்தா’வின்படி பாடி ‘ஜகன்னாத பிரதக்ஷிணம்’ செய்தால் எவன்தான் உருகமாட்டான்?’

இவ்விதமான கொள்கைகள் கொண்டவர். இவ்வுணர்ச்சி வழியாகவே உலகத்தை உயர்த்திவிடலாமென்ற திடமான நம்பிக்கை கொண்டவர்.

‘ஓய்! அய்யர்வாளுக்குத்தான் என்ன பக்தி, என்ன சிரத்தை!’ என்றார் புரோஹிதர்.

‘அவாளைப் போல நாலுபேர் இல்லாவிட்டா சனாதனதர்மம் இருந்த இடம் தெரியாது’ என்றார் சுப்ரமணிய சாஸ்திரிகள்.

‘அதன்னா ஆச்சரியம்! அவா இங்கிலீஷ் மேதையும் உத்யோகமும் - வைதிகத்துக்கே ஒரு கௌரவம்னா!’

‘தர்மிஷ்டன்னா - ஒரு ரூபாய்க்குக் குறைந்து தாம்பூலத்தில் வைக்கிறதில்லைன்னா!’

‘அது கிடக்கட்டுங்காணும்; ஸதா உமக்கு அந்தப் பேச்சுதான். சில உத்யோகஸ்தாளைப் போல இல்லாமல் எவ்வளவு மரியாதை!’

‘இன்னொண்ணுன்னா! கனாந்தம் அத்யயனம் பண்ணவங்கூட அப்படிச் செஞ்சுவைக்கமாட்டான்.’

‘போங்கணும்! ஸாங்காத்யாயின்னா அவர்! இந்த மாதிரி -’

‘ஓய், வெங்கடரமண சமாராதனெயே யார் இப்படி நடத்தறா? அதெச் சொல்லும்!’

பூஜையானவுடன் இலைபோட்டுப் பரிமாறப்பட்டது. வெங்கடேச்வர அய்யர் தானே ‘ஆபோசனம்’ போட்டு ‘ஸர்வத்ர ஸுபோஜ்யமஸ்து’ என்று பிரார்த்தித்தார் (சாப்பாட்டை ஆரம்பிக்கும் முன் செய்யும் சடங்கு). சாப்பிடுகிறவர்கள் ‘போதும் போதும்’ என்று இலைகளில் குறுக்கே ‘படுத்து’க்கொண்டு மன்றாடும் வரையில் உபசாரம் செய்யப்பட்டது.

போஜனம் முடிந்ததும் வாசற்பந்தலில் சந்தனம் பாக்கு வெற்றிலை வழங்கப்பட்டது. பிராமணர்கள் வேத மந்திரங்களைச் சொல்லி ஆசிர்வதித்தார்கள். ‘ஸர்வேஜனாஸ் ஸுகினோபவந்து’ என்று அவர்கள் சொல்லி முடிப்பதற்கும் பந்தலின் ஒரு பக்கத்தில் ஒரு கலவரம் ஏற்படுவதற்கும் சரியாயிருந்தது.

வெங்கடேச்வர அய்யரின் மைத்துனர் யாரையோ கோபம் பொங்கிய முகத்துடன் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார். அவர் யாருடன் பேசினாரோ அந்த மனிதன் ‘வெகுளி’போல் விழித்துக்கொண்டு நின்றான். விஷயம் என்னவென்று விசாரிப்பதற்காக வெங்கடேச்வர அய்யர் அங்கே போய்ப் பார்த்தார். யாரோ வெங்கடப் பெருமாள் நாய்க்கர் என்று பெயராம், ஒரு மனிதன், ஸமாராதனையின் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டான்!

‘அடாடா! என்ன அக்கிரமம்!’ என்று வைதிகர்கள் கர்ஜித்தார்கள். மைத்துனர் அந்த மகாபாபியை அடிப்பதாகப் பாய்ந்தார். திடீரென்று வெங்கடேச்வர அய்யர் குறுக்கிட்டார். கூட்டத்தை விலக்கிக்கொண்டு நாய்க்கரிடம் போனார். எல்லோரும் என்ன செய்துவிடப் போகிறாரோ என்று அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார்கள். கிட்டப்போனவர் ஒரு நிமிஷம் தயங்கி நின்றார். பிறகு சாஷ்டாங்கமாக நாய்க்கரின் காலில் விழுந்து நமஸ்கரித்தார். பார்த்திருந்தவர்கள் ‘திக்பிரமை’ கொண்டார்கள்.

மைத்துனர் கோபமாக, ‘என்ன அத்திம்பேரே, உங்களுக்கென்ன மூளை புரண்டுவிட்டதா?’ என்றான்.

வைதிகர்கள், ‘என்ன? அய்யர்வாளுக்கு என்னமோ தெய்வாபராதத்தின் பலனாகப் பிரமாதம் வந்துவிட்டது’ என்றார்கள்.

வெங்கடேச்வர அய்யர் ஒருவருக்கும் பதில் சொல்லவில்லை.

‘வெங்கடரமணா! மன்னிக்க வேண்டும். அபராதம் செய்துவிட்டேன். நீங்கள் இந்த ரூபத்துடன் வந்து என்னைச் சோதனை செய்வீர்கள் என்று பேதையான நான் அறியவில்லையே!’ என்றார்.

மைத்துனர், அத்திம்பேருக்கு பைத்யம் பிடித்துவிட்ட விஷயத்தை அக்காவிடம் தெரிவிக்க உள்ளே ஓடினார்.

வைதிகர்கள் வெற்றிலை பாக்கு தட்சிணைகளை எடுத்துக்கொண்டு, ‘ஈச்வராக்ஞை! பாவம்! நல்ல பிரகிருதி!’ என்று சொல்லிக்கொண்டு போனார்கள்.

‘வழியோடு’ போன இரண்டு பேர்கள் நாட்டம் என்னவென்று உள்ளே எட்டிப் பார்த்தார்கள்.

ஒருவன், “நம்ம தெரு கிறுக்கு நாயக்கருல்ல! இங்கே என்னா செய்யராரு? அவுக வூட்லே தேடிக்கிட்டல்ல இருக்காக?”

மற்றொருவன், “கட்டிப் போட்டிருந்த சங்கிலியெ எப்படியோ நீக்கிட்டல்ல வந்துட்டாராம்” என்றான்.

•••

மணிக்கொடி, 02-09-1934

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.