அன்று ஞாயிற்றுக் கிழமையாகையால் மத்தியான்னம் சாப்பாடானதும் வீட்டைக் கொஞ்சம் சுத்தப்படுத்தலாம் என்று முனைந்தேன். இருட்டறையான உக்கிராணத்துள், அடுக்குள், அலமாரி, புரை எல்லாவற்றையும் காலிசெய்து சாமான்களைக் கூடத்தில் கொண்டுவந்து நிறைத்தேன்.
அடுக்குள்ளை நான் சோதனை போடுவதில் என் மனைவிக்கு இஷ்டமில்லை. பல தடவை, “அங்கொன்றுமில்லை. அங்கொன்றுமில்லை”யென்று என்னைத் தடுத்தாள்.
“இல்லாவிட்டால் நல்லதுதான். ஒருதரம் எல்லாவற்றையும் இடம் மாற்றி வைத்துச்
சுத்தமாகப் பெருக்கிவிட்டால் கெடுதல் என்ன?” என்று சொல்லிக்கொண்டே அடுக்குள்ளை ஆராய
ஆரம்பித்தேன்.
ஒரு மூலையில் சாமான்கள் கட்டிவந்த காகிதங்களையெல்லாம் சுருட்டிச் சுருட்டி
வைத்திருந்தாள். அவற்றையெல்லாம் எடுத்துக் குப்பையில் போட்டேன்.
“அதை ஏன் குப்பையில் போடுகிறீர்கள்? பேப்பர்காரனிடம் போடலாமே!” என்று அவள் குறுக்கிட்டாள்.
“ஒரு வண்டி இருக்கிறதே! இத்தனை நாள் போட்டிருக்கலாமே!” என்று சொல்லிக்கொண்டே
அஞ்சறைப் பெட்டியை எடுத்தேன்.
“அதற்குள் என்ன இருக்கிறது உங்களுக்கு?” என்று கொஞ்சம் கோபத்துடனேயே அதைக் கையிலிருந்து
வெடுக்கென்று பிடுங்கப் பார்த்தாள் நீலா.
நான் அதைப் பார்க்கக் கூடாதென்று அவள் அவ்வளவு கவலைப்பட்டதிலிருந்து அதில் ஏதோ
விசேஷம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்; அல்ல, அது பொய், அதில் விசேஷம்
இருக்கிறதைத் தெரிந்துதானே நான் அதைக் கையில் எடுத்ததே!
எனவே நான் பிடியை விடவில்லை. வெகு உற்சாகமாக அதைத் திறந்தேன். அதற்குமேல்
ஒன்றும் நடக்காது என்று தீர்மானித்து என் மனைவி சற்று விலகிப்போய் நின்றுகொண்டாள்.
மிருகக் காட்சிச் சாலையைப் பார்த்திருக்கிறோம். அந்த அஞ்சறைப்பெட்டி ஒரு சின்னப்
புழுக் காட்சிச்சாலையாக இருந்தது.
ஒவ்வோர் அறையிலும் ஒரு தினுசுப் புழு. உளுத்தம் பருப்பு அறையில் ஒரு வகை;
சீரக அறையில் ஒரு வகை. நான் அதைத்
திறந்ததும் அதிலிருந்து குப்பென்று வாடை வந்தது. ஒருவிதமான விஷமச் சிரிப்புடன்
நீலாவின் முகத்தைப் பார்த்தேன்.
“அந்த அஞ்சறைப் பெட்டியை நான் இப்போது உபயோகிக்கிறதே இல்லையே! எல்லாச்
சாமான்களையும் ஓவல்டின் டப்பாக்களிலல்லவா வைத்திருக்கிறேன்” என்று அவளாக
ஆரம்பித்தாள்.
“பின் ஏன் இதைக் குப்பையில் கொட்டிக் காலி செய்யாமல் வைத்திருக்கிறாய்?”
என்று கேட்டேன்.
“செய்யணும்; எங்கே?
இந்தப் பீடையைப் பார்த்துக்கறத்துக்கே
பொழுது சரியாய்ப் போகிறது” என்று தெய்வமே என்று தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த
ராஜத்தைச் சுட்டிக் காட்டினாள்.
உடனே நான் ராஜத்தை எழுப்பினேன்.
“அவனை ஏன் எழுப்புகிறீர்கள் இப்பொழுது? இப்படிச் சாமானையெல்லாம் கீழே இறக்கிவைத்துவிட்டு
அவனையும் எழுப்பி நடுவில் விட்டுவிட்டால் போதும்” என்றாள் நீலா.
“இல்லை, அவம்மா அவனுக்காக
வளர்த்து வைத்திருக்கிற புழு தினுசுக்களை அவனுக்குக் காட்ட வேண்டாமா?” என்று அவளிடம் சொல்லிவிட்டு, “டே, ராஜம் இதோபார், பூச்சி”
என்று பெட்டியை அவனுக்குக் காட்டினேன்.
அவ்வளவுதான்! ஒரே உற்சாகம் அவனுக்கு. சாமான்களுக்கு நடுவே பாய்ந்தான்.
அதற்குப் பிறகு அவன் தாயும் நானும் எவ்வளவு பராக்குக் காட்டியும் அவனை அந்த
இடத்திலிருந்து வெளியேற்ற முடியவில்லை. என்ன சாமான்கள்! ரிப்பேரான ஹரிகேன் லாந்தர்
இரண்டு, உடைந்த ஜாடி, உபயோகித்த தைல சீசாக்கள், பௌடர் டப்பிகள், உடைந்த பொம்மைகள்!
ராஜம் எல்லாவற்றையும் புரட்டிப் புரட்டிப் போட்டான், நாலு பக்கங்களிலும். என் மனைவிக்கு இப்பொழுது
ஆனந்தம்.
“சொன்னாக் கேட்டாத்தானே!” என்றாள்.
திடீரென்று ராஜம் ஒரு கத்துக் கத்தினான். இருவரும் தூக்கிவாரிப் போட்டது போல
அந்தக் களேபரத்திலிருந்து தேள் ஏதாவது கொட்டி விட்டதோ என்று பார்த்தோம்.
குப்பையிலிருந்து அவன் இரண்டு கையும் போன மரப்பாச்சிப் பொம்மையொன்றைக் கையில்
எடுத்து வைத்துக்கொண்டு அதைப் பார்த்துச் சிரித்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தான்.
சரிதான் என்று நாங்கள் வேறு காரியங்களைக் கவனித்தோம்.
ஆனால் அந்த நிமிஷமுதல் ராஜம் அந்தப் பொம்மையை விடவில்லையென்பதை நாங்கள்
கவனிக்கவில்லை.
இரவு சாப்பாடாயிற்று. நீலா வேறோர் இடத்தில் ஸ்டவ்வை வைத்துச் சமையல் செய்தாள்.
ஏனெனில் வெளியே எடுத்துப் போட்ட சாமான்களை அடுக்குள்ளில் அந்த அந்த இடத்தில்
எடுத்து வைக்கவில்லை. எல்லாம் தாறுமாறாகக் கிடந்தன.
மாலையிலேயே தூங்கிப்போய்விட்ட ராஜம் நாங்கள் படுத்துக்கொள்ளப் போகிற சமயத்தில்
எழுந்தான். எழுந்ததும் அவன் தாய்பால் புகட்டுவதற்காக அவனைத் தொட்டிலிலிருந்து
எடுத்தாள். திடீரென்று அவன் வீரிட்டு அழ ஆரம்பித்தான். அவன் தாய் என்ன என்னவோ
சமாதானம் செய்தாள். அழுகை அடங்கவில்லை. நானும் சர்க்கரை கற்கண்டு எல்லாம்
கொடுத்துப் பார்த்தேன். நடக்கவில்லை. குழந்தை விக்கி விக்கி அழுததில் அவன் உடம்பு
வியர்த்துக் கொட்டியது. மூச்சே விட முடியவில்லை அவனால்; அப்படித் திணறினான்.
“கொழந்தெ என்னமோ பயப்பட்டுனுட்டான்” என்று ஆரம்பித்தாள் நீலா. எனக்குக் கோபம்
வந்துவிட்டது. ஏனென்றால் எனக்கு இன்னது செய்வது என்று புரியவில்லை.
திடீரென்று எனக்கு ஒரு ஞாபகம் வந்தது.
“அவன் மத்தியான்னம் கையில் வைத்துக்கொண்டிருந்த மரப்பாச்சி எங்கே?” என்று அவளைக் கேட்டேன்.
“அதா, அத்தைத் தொட்டிலில்
தன் பக்கத்தில் போட்டுக்கொண்டு தூங்கினான். தூங்குற வரையில் கையை விட்டுக் கீழே
வைக்கவில்லை. அதுதான் சமயம் என்று எடுத்துத் தூரப் போட்டுவிட்டேன்!”
“எங்கே போட்டாய்?”
“ஏன், கூடத்துக்
குப்பையில்தான் போட்டேன். அதற்கு எதுக்காக இப்படிச் சீறுகிறீர்கள்?”
நான் அவளுக்குப் பதில் சொல்லவில்லை. ஹரிகேனை எடுத்துக்கொண்டு போய்க்
குப்பையைக் கிளறினேன். வெகுநேரம் தேடி அந்த மரப்பாச்சியைக் கண்டுபிடித்தேன்.
அதை நான் அவன் கையில் கொடுத்ததுதான் தாமதம்! அவன் அழுகை விசை நின்றதுபோல்
நின்றுவிட்டது. அவன் ரோஜா முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்தது. தன் சிறு இதழ்களைக்
கூட்டி அந்தப் பொம்மையை முத்தமிட்டான். பிறகு அதைக் கையில் வைத்துக்கொண்டு,
“கக்கா!” என்றான்.
அந்த நேற்று முளைத்த முளைப்பின் உணர்ச்சிப் பெருக்கைக் கண்டு எங்கள் வாய் அடைத்துப்
போய்விட்டது. அந்தப் பொம்மையைக் கையில் வைத்துக்கொண்டே, “மொம்மெ! மொம்மெ!” என்று சொல்லிய வண்ணம் நிமிஷத்தில்
தூங்கிவிட்டான் ராஜம்.
நான் முற்றத்து நிலவில் படுக்கையில் படுத்துக்கொண்டேன். ராஜத்தின் காதல் என்
உள்ளத்தைக் கிளறிவிட்டது. என்ன என்னவோ யோசனைகள் ஓடின. டில்லி பாதுஷாவின் பெண்
ரங்கநாதர் உருவத்தை வைத்துக்கொண்டு உருகின கதை, ஆண்டாள் ரங்கநாதரை மணந்து மகிழ்ந்த கதை - எல்லாம்
சித்திரப் படங்கள் போல என் மனக் கண்முன் தோன்றின.
நீலா மெதுவாக என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு, “எப்படித் தெரிந்தது உங்களுக்கு?” என்றாள்.
“எனக்கே தெரியாது, நீலா!”
என்றேன்.
•••
மணிக்கொடி, 10-02-1935
[முதலில் ‘மரப்பாச்சி’ என்ற தலைப்பில் வெளியானது.
தலைப்பை மாற்றி, மறுஎழுத்தாக்கம் செய்யப்பட்டு ‘புனர் ஜன்மம்’ தொகுப்பில் சேர்க்கப்பட்டது.]
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.