Wednesday, November 10, 2021

ஒரு ‘வேலையில்லா மூளை’ - கு. ப. ரா.

திருச்சியில் என் மைத்துனனுக்குக் கல்யாணம். கேட்க வேண்டுமா என் மனைவியின் உற்சாகத்தைப்பற்றி? ஒரு வாரத்திற்கு முன்னிருந்து வீட்டில் அமளிதான். புது ரவிக்கைகள், புதுப் பாவாடைகள், புது அங்கிகள் - குழந்தைகளுக்கு-எல்லாம் தயாராயின. நாலுநாள் முன்னதாகவே ஒரு நல்ல நாள் பார்த்துக்கொண்டு புறப்பட்டோம். சாயந்திரம் 5:45க்கு ரயில்வண்டி கும்பகோணத்தை விட்டுப் புறப்பட்டது. சுமார் 7:30 மணிக்குத் தஞ்சாவூர் ஜங்ஷனுக்குப் போய்ச் சேர்ந்தது. அங்கே குழந்தைகளுக்குப் பொம்மை, பக்ஷணம் முதலியவும் எனக்குப் பேப்பரும் என் மனைவிக்கு - அவளுக்கு வேண்டியது பூவைத் தவிர அங்கொன்றும் விற்கப்படவில்லை - எல்லாம் வாங்கினேன். பேப்பரைப் பிரித்துப் படித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு வாலிபன் - சுமார் இருபது வயதிருக்கும். கிராப், மூக்குக் கண்ணாடி, மல்தட்டுச்சுற்று, டென்னிஸ் காலர் ஷர்ட், நேவிப்ளூ கோட் - இவைகளுடன் காலேஜ் பையன் போலத் தோன்றினான். வேகமாக என்னிடம் வந்து, மெதுவான குரலில் ‘ஸார், கேன் யூ ஹெல்ப் மீ? பர்ஸ் எங்கோ விழுந்துவிட்டது. டிக்கெட்டுக்கு ஹாப் ஏ ருப்பி வேண்டியிருக்கிறது. மறுபடியும் வீடு போய்த் திரும்புவதற்கில்லை. இதுதான் லாஸ்ட் நைட் ட்ரைன். நான் டிரிச்சியில் இருக்க வேண்டும்’ என்றான்.

ஒரு நிமிஷம்கூட யோசிக்காமல் என் பர்ஸிலிருந்து அரை ரூபாய் அவனிடம் எடுத்துக் கொடுத்தேன்.

‘தேங் யூ வெரிமச்!’ என்று ஆங்கில தினுசில் மரியாதை செய்துவிட்டுப் போய்விட்டான்.

திருச்சியில் கல்யாணம் நடந்தேறியது. நான் 15 நாள் ‘ரஜா’ வாங்கியிருந்ததால் என் மைத்துனன் செய்த மரியாதை உபசாரத்தை இன்னும் ஒரு வாரம் அனுபவிக்கலாமென்று எனது எண்ணம். ஆனால் என் மனைவி சேஷ ஹோமத்தினன்றே புறப்பட்டுவிட வேண்டுமென்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாள். தனது சகோதரன் செய்த சீர் வகையறாக்கள் அவளுக்கு மரியாதைக் குறைவாகப்பட்டது. அவளது அபிப்பிராயத்தின்படியே அன்று போட் மெயிலில் திரும்பி ஊருக்குப் பிரயாணமானேன். மலைக்கோட்டையை ஏறிப் பார்க்க வேண்டுமென்ற ஆசையைக்கூடக் காவேரியோடு விட்டோம்.

திருச்சி ஜங்ஷனில் புறப்பட்ட போட்மெயில் ஜகஜகஜகஜகவென்று நாலு கால் பாய்ச்சலில் பறந்தோடியது. சில்லறை ஸ்டேஷன்களெல்லாம் தோன்றித் தோன்றி மறைந்தன. வண்டி போன வேகத்தில் எனக்கும் கொஞ்சம் உத்ஸாகம் வந்துவிட்டது. வண்டியின் சப்தத்தைச் சுருதியாக வைத்துக்கொண்டு லேசாகப் பாட ஆரம்பித்தேன். என் மனைவி அருகிலிருந்த ஒரு பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

போட் மெயில் ஒன்பது மணிக்குத் தஞ்சாவூர் ஸ்டேஷனுக்குள் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு போய் நின்று மூச்சுவிட்டது. உடனே பிளாட்பாரம் பூராவும் கூக்குரல்களும் கூட்டமும்தான். இவைகள் நடுவே பழக்காரர்கள், பூக்காரர்கள், ஸோடா பாட்டில்காரர்கள் - இவர்களுடைய சத்தம். தூங்கிக்கொண்டிருந்த என் குழந்தைகளெல்லாம் எழுந்து ‘அதை வாங்கு, இதை வாங்கு’ என்று பிடுங்கின. எல்லாவற்றிற்கும் ஜவாப் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

திருச்சிக்குப் போன அன்று என்னிடம் வந்த வாலிபன் என் முன் நின்றான். என் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வந்திருக்கிறானென்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுதே, ‘ஸார், கேன் யூ ஹெல்ப் மீ? மை பர்ஸ் தவறிவிட்டது -’ முதலிய வார்த்தைகள் வேகமாக வெளிவந்தன. நிச்சயமாக அவன் என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று தெரிந்தது. சடக்கென்று எனக்கு ஒரு யோசனை தோன்றிற்று.

‘ஒஹோ! சேஞ்ச் இல்லை. இருங்கள் முந்திரிப் பருப்பு வரட்டும். மாற்றித் தருகிறேன்’ என்று சொல்லி முந்திரிப் பருப்புக்காரனை எதிர்பார்ப்பது போல ரயில்வே போலீஸ்காரராவது உத்தியோகஸ்தராவது வருகிறார்களா என்று பார்த்தேன்.

‘ஸரி மாற்றுங்கள் இதோ வந்துவிட்டேன்’ என்று பையன் வேகமாகக் கிழக்கே சென்றான். வண்டி புறப்படுகிற வரையில் அவன் திரும்பி வரவில்லை.

வண்டி புறப்பட்டு மெதுவாக ‘ஸ்பீட்’ எடுத்துக்கொண்டு ஸ்டேஷன் பிளாட்பாரத்தைக் கடக்கிற சமயம். ஒரு மின்சார விளக்கின் அடியில் வாலிபன் தனியாக நின்றுகொண்டிருந்தான். நான் உட்கார்ந்திருந்த வண்டி அவனருகே வந்தவுடன் ‘ஏங்காணும், நீர்தான் கெட்டிக்காரர் என்று எண்ணமோ? - உம்மைப் போல...?’

மேல் வார்த்தைகள் காதில் விழவில்லை.

என் அசட்டுத்தனத்தை யாராவது கவனித்திருந்தார்களோ என்று பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன்.

•••

ஊழியன், 08-02-1935

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.