Monday, October 18, 2021

கு.ப.ரா.வின் சிறுகதைகள் - க. நா. சுப்ரமண்யம்

கு.. ராஜகோபாலன் இறந்து இப்போது (1959) பதினைந்து வருஷங்களாகிவிட்டன. இந்தப் பதினைந்து வருஷங்களில் அவருடைய புதுத் தொகுப்புகள் எதுவும் வெளிவரவில்லை. ஒரு பதினைந்து வருஷங்கள் தமிழையே நம்பி வாழ முயன்ற அவர் சற்றேறக்குறைய எண்பத்தைந்து சிறுகதைகளும் பல சிந்தனைக் கட்டுரைகளும், ஓரங்க நாடகங்களும், வசன கவிதைகளும், விமரிசனக் கட்டுரைகளும், முடிவு பெறாத சில நீளக்கதை (நாவல்) களும் எழுதினார். கனகாம்பரம்’, ‘காணாமலே காதல்’, ‘புனர்ஜன்மம்என்கிற மூன்று சிறுகதைத் தொகுதிகளிலுமாக அறுபத்தி நாலு சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. இது தவிர, எத்தொகுதியிலும் இடம் பெறாமல் பத்திரிகைகளில் மட்டும் வெளியான கதைகள் இருபதுக்கு அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.

கு.ப.ரா.வைப் போன்ற ஒரு எழுத்தாளருக்கு, தமிழை மட்டும் நம்பி வாழ முயன்ற ஒரு எழுத்தாளருக்கு செலுத்த வேண்டிய மரியாதையைத் தமிழர்கள், நன்றிக் குறளை சமய சந்தர்ப்பம் இல்லாமல் பிதற்றிக்கொண்டு காலம் போக்குகிற தமிழர்கள், செய்யவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. தமிழ் நாட்டுப் பிரசுரகர்த்தர்கள் கு.ப.ரா.வின் எழுத்துக்களைத் தேடிப்பிடித்து வாசகர்களுக்குத் தரவில்லை; தமிழ் வாசகர்கள் இன்றைப் பத்திரிகை எழுத்து மோகத்திலே (அதற்கு முன் ஆங்கில மோகம்; அதற்கு முன் பண்டித மோகம் என்று ஏதோ ஒரு மோகத்திலே) கு.ப.ரா.வின் எழுத்துக்களைப் போற்றிப் படிக்கவும் நினைவில் வைத்துக்கொள்ளவும் தவறிவிட்டார்கள்.

நேற்றைய இலக்கியத் தரமும் இன்றையத் தரமும் தெரிய, தெரிந்து படித்து அனுபவிக்க, நமது சமீப காலத்திய இலக்கியப் பொக்கிஷங்களை மறக்காமல் போற்றி வருகிற மனப்பான்மை நமக்கு, அதாவது தமிழ் ரசிகர்களுக்கு, வளர வேண்டும். இதை வளர்க்க இலக்கிய விமரிசனம் இன்றியமையாத ஒரு சாதனம். ‘நாங்கள் ஆனந்தரங்கம் பிள்ளையையோ, பெஷியையோ, ஆறுமுக நாவலரையோ, இப்ராஹிம்சா றாவுத்தரையோ, வேதநாயகம் பிள்ளையையோகூட அதிகம் போற்றிப் பாராட்டியது கிடையாதே. கு.ப.ரா.வை மட்டும் போற்றுவானேன். அனாவசியம் என்று சொல்கிற தமிழ் வாசகர்கள், தமிழ் அறிந்தவர்களும் அல்ல; நல்ல வாசகர்களும் அல்ல; இலக்கிய ருசியுள்ளவர்களும் அல்ல என்று சொல்லவே வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

1

கு.ப.ரா.வின் இலக்கிய சேவையில் மற்றத் துறைகளைப் பற்றிக் கவனிக்காமல் சிறுகதைத் துறையில் மட்டும் அவர் சாதனைகளை இங்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். அவருடைய எல்லாச் சிறுகதைகளையும் (அநேகமாக) அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்தபோது படித்ததுடன் அவருடைய கதைத் தொகுதிகளை மூன்றாவது (அல்லது நான்காவது) தடவையாகவும் இப்போது ஒருதரம் படித்துவிட்டு, எனக்குத் தோன்றுகிற சில அம்சங்களை நான் இங்கு குறிப்பிடுகிறேன். தொகுதிகளில் கிடைக்காத சில சிறுகதைகளையும், பத்திரிகைக் கட்டிங்குகளாக ஸ்ரீ செல்லப்பாவின் உதவியால் மீண்டும் ஒருதரம் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. எல்லாவற்றையும் மனத்தில் கொண்டு, விமரிசக நோக்குடன் பார்க்கும்போது, சில விஷயங்கள் தெளிவாகவே தெரிகின்றன.

இந்த எண்பது எண்பத்தைந்து சிறுகதைகளில் ஒரு இருபது இருபத்தைந்து சிறுகதைகளாவது நல்ல சிறுகதைகள் என்று எடுத்துச் சொல்லிக் காட்டுவதற்கு உபயோகப்படுபவை என்று சொல்லலாம். எழுதியதில் இருபத்தைந்து கதைகளுக்கும் குறையாமலே கு.ப.ரா. சிறப்பாகத் தன் சிறுகதைச் சோதனையில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும், இன்னும் ஒரு பத்திருபது சிறுகதைகள் வெற்றி பெறாவிட்டாலும், சோதனை என்கிற அளவில் இலக்கிய விமரிசகனின் கவனத்தைக் கவரக்கூடியவை என்றும் சொல்லலாம். இந்த அளவுக்கு - அதாவது வெற்றியாக எழுதியதில் கால் பங்கும். சற்றேறக்குறைய அதே அளவு, வெற்றியில்லாவிட்டாலும் சோதனையாகக் கவனத்தைக் கவரக்கூடிய அளவுக்கு - சிறுகதை முயற்சி செய்தவர்கள் என்று இந்த இருபத்தைந்து வருஷங்களில் தமிழ் இலக்கியாசிரியர்களில் வேறு யாரையுமே சொல்ல முடியாது. (புதுமைப்பித்தன் உள்படத்தான்.)

இது ஒரு தனிச்சிறப்பாகுமா என்று கேட்பவர்கள் இருக்கலாம். ஒரு மொழியில் ஒரு இலக்கியத் துறையின் ஆரம்ப காலத்தில் செய்யப்படுகிற முயற்சிகளில் பலவும் வெற்றி பெறுவதில்லை என்பது இலக்கிய மரபு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். (ஷேக்ஸ்பியருக்கு முந்திய நாடகங்கள் ஓர் உதாரணம்.)

புதுமைப்பித்தன் உள்படத்தான் என்று நான் சொல்லுவதைச் சிலர் ஆக்ஷேபிக்கலாம். புதுமைப்பித்தன் உள்பட என்று சொல்வதினால் நான் புதுமைப்பித்தனுடைய இலக்கியத் தரத்தையோ அவருடைய சோதனைத் திறத்தையோ குறைத்து மதிப்பிடவில்லை. அவர் செய்த சோதனைகள், பரப்பிலும் ஆழத்திலும், அதிகம். அவர் பெற்ற வெற்றிகள், பரப்பிலும் ஆழத்திலும், அதிகம். கு.ப.ரா.வின் சிறுகதைகளில் வெற்றி பெற்றவை எண்ணிக்கையில் அதிகம். சோதனை முயற்சிப் பரப்பிலோ ஆழத்திலோ அதிகம் இல்லை. புதுமைப்பித்தன் செய்து பார்த்த சோதனைகள் பலவற்றில் அவர் வெற்றி பெறும் வரையில் உழைத்ததில்லை என்றுதான் சொல்லவேண்டும். கு.ப.ரா.வுக்கு உழைப்பும், விடாப்பிடியாகக் கடைசிவரை ஒரு சோதனையைச் செய்துபார்க்கும் திறனும் இருந்தது.

1940-ல் தொடங்கி ஒரு பதினைந்து வருஷங்களில் தமிழ் இலக்கிய சரிதத்தை எழுதுகிறபோது புதுமைப்பித்தனுக்கும், கு.ப.ரா.வுக்கும் (மற்றவர்களைப்பற்றி இங்கு எதுவும் நான் சொல்லவில்லை) நிச்சயமான இடம் உண்டு என்பதை எல்லோருமே ஏற்றுக்கொள்ளுவார்கள். இன்று நாங்கள் முன்னேறி வெகு தூரம் வந்துவிட்டோம் என்று பத்திரிகைக் குப்பைமேடுகளில் இருந்து கொக்கரிப்பவர்களும்கூட, இதை எண்ணித்தான், தமிழ்ச் சிறுகதை புதுமைப்பித்தனுடனோ கு.ப.ரா.வுடனோ முடிந்துவிடவில்லை என்று சொல்லித் தங்களுக்குப் பெருமை தேடிக்கொள்ள முயலுகிறார்கள். கு.ப.ரா.வின் சிறுகதைகளில் ஒரு இருபது இருபத்தைந்தும், புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் ஒரு பதினைந்திருபதும் தமிழ் இலக்கியத்திலே நிரந்தரமான இடம் பெறும் என்றுதான் நான் எண்ணுகிறேன்.

கு.ப.ரா.வின் சிறுகதைகளைப் பற்றிய வரையில் நான் எந்த அளவுகோல்களை எப்படி வைத்து அளந்து சொல்கிறேன் என்பதை ஓரளவு, குத்து மதிப்பாகச் சொல்லவே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். குத்து மதிப்பாக என்று நான் சொல்வதற்குக் காரணம் உண்டு. இலக்கிய விமரிசனத்தில் எப்போதுமே முடிவு என்று ஆணித்தரமாகக் கூறுவதும்கூட முடிவான விஷயமல்லதான்; காலத்தால் மாறுபடக்கூடியதுதான் என்பதை நாம் எல்லோருமே நினைவில் வைக்கவேண்டும். இலக்கிய அளவுகோல்கள் முக்கியம்தான் எனினும் அவை நிரந்தரமானவையல்ல; நிலையானவையும் அல்ல. ஓரளவு வார்த்தைக்கு அகப்படாத ஒரு ரஸ அனுபவத்திற்கு உருத்தர முயலுவதே இலக்கிய விமரிசகன் செய்ய முயலுகிற காரியம்; அந்த உருவை ஓரளவுக்குத் தான் சொல்ல முடியும் - மற்றப்படி அது மனோபாவம். ரஸனை என்கிற தன்மைகளில் உருவற்றதாகத்தான் இருக்கும்.

2

எந்த இலக்கிய நூலிலுமே ஆசிரியனுடைய தனித்தன்மை என்பது, ஒரு முழுமையான பர்ஸனாலிடி என்பதுதான் முக்கியமானது என்று சொல்லவேண்டும். மற்றப்படி எழுத்தில் நடையழகு இருக்கலாம்; காம்பீர்யம் இருக்கலாம்; சிந்தனை ஓட்டம் இருக்கலாம். ஆனால் எதுதான் இருந்தாலும், இந்த Personality - முழுமையான தனித்வம் - இல்லாத வரையில் எழுத்து இலக்கியமேயாகாது. வெறும் வார்த்தைக் கோவையாகத்தான் இருக்கும்.

கு.ப.ரா.வின் சிறுகதைகளைப் படிக்கும்போது கு.ப.ரா.வின் பர்ஸனாலிடி, தனித்வம் நமக்குச் சரிவரவே தெரிய வருகிறது என்பது அவர் சிறுகதைகளின் தனிச்சிறப்பு. வெற்றி பெற்ற சிறுகதைகளில் மட்டுமல்ல, வெற்றி பெறாத பல சோதனைக் கதைகளிலும், சிறுகதையாக உருவமே பெறாத சில பத்திரிகைக்கதைகளிலும்கூட, இந்தத் தனித்வம் காணக்கிடக்கிறது என்பது என் அனுபவம். (ஆமாம் கு.ப.ரா.வும் பத்திரிகைக் கதை என்கிற தரத்தில் பல கதைகள் எழுதத்தான் எழுதியிருக்கிறார். உதாரணம் வேண்டுமானால் தித்திப்பு, இரண்டாம் தலை தீபாவளி முதலியவற்றைச் சொல்லலாம்.)

கு.ப.ரா.வின் தனித்வத்தின், பர்ஸனாலிடியின் அம்சங்கள் என்னென்ன என்று அலசிப் பார்ப்பது மிகவும் சுவாரசியமான விஷயமாக இருக்கும். அதைப் பூராவும் இங்கு செய்ய முடியாது. ஓரளவு ஒரு கோடிகாட்டிப்பார்க்க முயலுகிறேன்.

ஒரு ஏக்கமும், லக்ஷியமும் கலந்து குழைந்த ஒரு தனித்வம் கு.ப.ரா.வுடையது என்று சொன்னால் அவ்வளவாகத் தெளிவாக விளங்காது என்று தோன்றுகிறது. ஆனால் ஆங்கிலத்தில் the romantic agony என்று சொல்கிறார்களே, தானே சிருஷ்டித்துக்கொண்ட ஒரு லக்ஷியத்தை அடையாமல் இன்ப வேதனைப்படுகிற ஒரு தத்துவம் - அது தமிழ்நாட்டில் 1920 - 30-ல் ஆங்கில இலக்கியப் பரிச்சயமுடையவர்களுக்கு, கீட்ஸ், ஷெல்லி என்ற கவிகளைப் படித்ததனால் ஏற்பட்டது. ஓரளவு போரிட்டு வெற்றி பெற முடியாத ஒரு நிலையில் இலக்கிய வாழ்க்கை என்ற லக்ஷிய வாழ்வை மேற்கொண்டதால் ஏற்பட்டது என்று சொல்லலாம்.

மிழ் இலக்கியத்தில் கு.ப.ரா.வுக்கே உரித்தான இந்த ஏக்கமும், லக்ஷிய உணர்வும் சேர்ந்து குழம்பி நமது மனத்தைக் கவருகிற சிறுகதைகள் என்று கு.ப.ரா.வின் நூல்களிலே, ‘நூர்உன்னிஸா’, ‘தாய்’, ‘தவறுகளோ தன்மைகளோ’, ‘திரை’, ‘அடி மறந்தால் ஆழம்’, ‘நடுத்தெரு நாகரிகம்’, ‘சந்திப்புமுதலிய கதைகளைச் சொல்லலாம்.

கு.ப.ரா.வின் தனித்தன்மையிலே இந்த ஒரு ஏக்கமும், லக்ஷியமும் மட்டும்தானா அடங்கியுள்ள அம்சங்கள் என்று கேட்டால் அப்படி ஒன்றும் அதை அறுதியிட்டும் சொல்லிவிட முடியாது. இதற்கு ஒரு உதாரணமாகஸ்டூடியோக் கதைஎன்கிற கனகாம்பரத் தொகுப்புக் கதையைப் பார்க்கலாம். டைரக்டர் தன்னைத் தொட்டுச் சொல்லித் தருவதை ஸீதா ஆக்ஷேபிக்கிறாள். எல்லை கடந்து போய்விட்டது என்று அவள் நினைக்கிறபோது ஒட்டியாணத்தை டைரக்டர் முகத்தில் வீசி எறிந்துவிட்டு வெளியேறிவிடுகிறாள். ஐந்தாறு வரிகளில் விஷயத்தை விளக்குகிற கு.ப.ரா.வின் தனித்தன்மை இலக்கியபூர்வமாகப் பூரணமானது. 'ஸ்டூடியோவிற்கு எதற்கு வருகிறாள் இந்தப் பதிவிரதை? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையா' என்று டைரக்டர் கிருஷ்ணன் முகத்தைத் தடவிக்கொண்டு உதவி டைரக்டரைக் கேட்கிறார். நியாயமான கேள்வி என்று நினைக்குமளவு இதை எழுதிய கு.ப.ரா. ஸீதாவின் கட்சியையும் இதற்குமேல் வற்புறுத்தவில்லை என்பதில்தான் அவருடைய பர்ஸனாலிடி இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இதே வார்த்தைகளில், இதே அளவில், இதே தொனியை ஏற்றி வைத்ததுதான் கு.ப.ரா.வின் சிறப்பான, முழுமையான பர்ஸனாலிடி.

திரைஎன்கிற கதையிலும் கு.ப.ரா.வின் தனித்தன்மையைக் கடைசிப் பகுதியில் சிறப்பாகவே நாம் காணலாம். ‘எனக்குக் கையேது எழுத, வாயேது பாட? அவள்தான் என் கை அவள் மூலந்தான் என் உயிர்என்று சொல்கிற விதவையாகிவிட்ட சகோதரி ஸரஸ்வதியிடம் கு.ப.ரா.வின் தனித்தன்மை முத்திரை பூரணமாக விழுந்திருக்கிறது. 'ராஜம், மாடிக்குப் போ' என்று ஸரஸ்வதி சொல்வதுடன் முடிகிற கதை கு.ப.ரா.வின் மிகச் சிறந்த கதைகளில் ன்று.

இப்படித் தனித்தனி அம்சங்களாகப் பலவற்றைக் கு.ப.ரா.வின் தனித்தன்மையில் அடங்கியிருப்பனவாக (உதாரணத்தினால்) விளக்கலாம். எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது என்று ஒரு மென்மையையும் சொல்லவேண்டும். இந்த மென்மையைப் பலவீனமான மென்மை என்று எண்ணி நாம் ஏமாந்துவிடக்கூடாது இந்த மென்மையிலே அசாதாரணமான ஒரு பலமும், ஒரு மனோதிடமும், அழுத்தமும் இருப்பதை கு.ப.ரா.வின் சிறுகதைகளில் பலவிடங்களிலும் காணலாம். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, பெண்மையின் பிடிபோலத் தளர்ந்ததாகவும் மிருதுவாகவும் இருப்பதுபோல இருக்கிற கு.ப.ரா.வின் தனித்தன்மைப் பிடி இறுகியதாகவும் கெட்டியாகவும் தளர விடாததாகவும் இருப்பது அலசிப் பார்த்தால் நன்கு விளங்கும். இந்தப் போலி மென்மையையும் கு.ப.ரா.வின் தனித்தன்மையின் ஒரு தனிச்சிறப்பாகச் சொல்லவேண்டும்.

இந்த மென்மைத் தோற்றம் தமிழ்ச் சிறுகதாசிரியர்கள் வேறு யாரிடமும் கிடையாது. புதுமைப்பித்தனின் தனித்வம் சம்மட்டி அடிபோல, சாட்டைச் சொடுக்குப்போல அவர் சிறுகதைகளில் திருப்ப கட்டங்களில் எல்லாம் விழும். மெளனியின் தனித்வம் ஆழமாகவும் அமைதியாகவும் சற்றே இருட்டாகவும் அவர் சிறுகதைகளிலே விழுகிறது. லா..ரா.வின் தனித்வம் மனோதர்ம முடிச்சுக்களாக, மனிதனைப் பிழிந்து கசக்கியெடுப்பதை அவர் சிறுகதைகளிலே பார்க்கலாம். கு.ப.ரா.வின் தனித்தன்மையிலுள்ள மென்மைத் தோற்றம் அவருடைய தனியான சிறப்பு. குரூரமான இடத்தையும்கூட, மென்மையாக, நளினமாகச் சொல்லித் தன் சிறுகதையை நடத்துபவர் அவர்.

3

ஒவ்வொரு இலக்கியாசிரியனுமே தெரிந்தோ தெரியாமலோ, சுயப்பிரக்ஞையுடனோ பிரக்ஞையே இல்லாமலோ தனது தனித்வத்துக்கு சிறுகதை, நாவல், நாடகம், கவிதை என்கிற இலக்கிய உருவம் தருகிறான். கு.ப.ரா. தமிழில் எழுத ஆரம்பித்த நாட்களில் தமிழ்ச் சிறுகதைக்கு ஒரு இடம் இருந்தது. அது காரணமாக, தோன்றிக்கொண்டிருந்த பத்திரிகை யுகத்தின் முன்னோடியாக, சேர்க்கைச் சந்தர்ப்ப விசேஷத்தால் தனது இலக்கிய முயற்சிகளுக்கு கு.ப.ரா. சிறுகதை உருவம் தந்திருக்கிறார் என்று சொல்லலாம். வேறு பல உருவங்களிலும் அவர் சோதனை செய்து பார்த்தும், வசன கவிதை, சிறு நாடகம், கட்டுரை போன்ற இலக்கியத் துறைகளில் பெற்ற வெற்றிகளைவிடக் கணிசமான வெற்றி பெற்றார் அவர் சிறுகதை என்கிற இலக்கியத் துறையிலே.

சிறுகதை என்கிற உருவ அமைதி கு.ப.ரா.வின் சிறுகதைகளிலே எப்படிச் சிறப்புப் பெற்றிருக்கிறது என்று விமரிசன ரீதியில் கவனித்தோமானால், நமக்கு இரண்டொரு விஷயங்கள் தெரிய வருகின்றன. செக்காவ், மோபஸான், . ஹென்றி என்கிற மூன்று பெரும் சிறுகதைப் பகுதிகளிலே, கு.ப.ரா. மோபஸான் பகுதியைச் சேர்ந்தவர் என்பது மேலெழுந்த வாரியாகப் படிப்பவர்களுக்கும்கூடத் தெரிய வரும். வேறு பகுதிகள் சாத்தியமில்லையா, அவசியமில்லையா என்கிற ஆராய்ச்சி இங்கு அவசியமில்லை. கு.ப.ரா. ஓரளவு சுயப்பிரக்ஞையுடன்தான் சிறுகதைக்கு மோபஸான் தந்த உருவ அமைப்பை ஏற்றுக்கொண்டு தன் சிறுகதைகளை சிருஷ்டித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. . ஹென்றியைப்போலச் சம்பவத் திருப்பத்திலோ, செக்காவில்போல் குணபாத்திர ஆழ்ந்த மோதலிலோ கு.ப.ரா.வுக்கு ஈடுபாடில்லை என்பது வெளிப்படை. மனித உறவுகளில், அதுவும் முக்கியமாக ஆண் பெண் உறவு முறைகளில், மோபஸாசனைப் போலவே, கு.ப.ரா.வுக்கும் மன ஈடுபாடு இருந்தது. அந்த உறவுகள் பலவற்றை அவர் சிறுகதையாக்கித் தந்திருக்கிறார்.

மோபஸானின் சிறுகதை உருவ அமைதிகளிலே சிறப்பானதாகச் சொல்லவேண்டியது நல் முத்துப் போன்ற ஒரு பளபளப்பும் அழகான, தீர்ந்த, மாற்றமுடியாத வடிவம்தான். இதை நாம் கு.ப.ரா.வின் சிறுகதைகளிலும் காணமுடியும். மோபஸானின் பாதையைப் பின்பற்றியவர் கு.ப.ரா. என்று சொல்வதிலே அவருக்கு இழுக்கு ஒன்றுமில்லை. சிறுகதை என்பது சமீபத்தில் ஏற்பட்ட ஒரு இலக்கிய உருவம். அதிலே சிறப்பாக மூன்று பகுதிகள், மூன்று தனிப் பாணிகள் காணக் கிடக்கின்றன. அதிலே மோபஸான் பாணியொன்று. அதைப் பின்பற்றி கு.ப.ரா. தன் சிறுகதைகளுக்கு தமிழ் உருத் தந்து தமிழ் இலக்கியவுலகில் தனகென்று ஒரு ஸ்தானம் ஏற்படுத்திக்கொண்டார்.

தான் தேடித் தன் தனித்வத்தைக் காட்ட எடுத்துக்கொண்டபடி விஷயத்துக்கு கு.ப.ரா. தந்த இலக்கிய உருவம் பல சிறுகதைகளிலே சிறப்பாகவே காணமுடிகிறது. ‘விடியுமாஎன்கிற சிறுகதையின் உருவமும் ஆற்றாமைஎன்கிற சிறுகதையின் உருவமும், அதனதன் வழியில் சிறப்பானவை, கு.ப.ரா.வுக்கே தனியாக ஏற்பட்டவை. இதே போல மின்னக் கலையும்பண்ணைச் செங்கானும் தனி உருவம் பெற்றவை. ‘நடுந்தெரு நாகரிகமும்’, ‘கனகாம்பரமும் சிறப்பான உருவம் பெற்றவை.

கு.ப.ரா.வின் உருவச் சிறப்பை அளப்பதற்கு, கு.ப.ரா.வின் பர்ஸனாலிடி என்பதில் சொன்ன அம்சங்கள் பூராவையும் முதலில் கலந்துகொள்ள வேண்டும். அந்த அம்சங்கள் காரணமாக அவர் தேர்ந்தெடுத்த themes விஷயச் சேர்க்கைகளை அளக்கவேண்டும். அதற்குப் பிறகுதான் கு.ப.ரா.வின் சிறுகதை உருவ அமைதி நமக்கு ஒரு வகையாகப் புலனாகும்.

விடியுமாஎன்கிற சிறுகதையில் கு.ப.ரா. ஏக்கத்தையும் லக்ஷியத்தையும் மென்மையையும் குழைந்து ஒரு நிரந்தரமான உருவத்தை நமக்குச் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார். இந்த உருவம் லேசாக, சாதாரணமான ஒரு லாகவத்துடன் வந்திருக்கிற மாதிரித் தோன்றுகிறதே தவிர, அது லாகவமானதுமல்ல, லேசானதுமல்ல, சாதாரணமானதுமல்ல. கதையின் ஆரம்பத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் அந்தக் கதை, கு.ப.ரா. கையில் இப்படி வளர்ந்து, இப்படி நகர்ந்து, இந்த முடிவுக்குத்தான் வந்தாகவேண்டும் என்று ஒரு inevitability- தப்ப முடியாமை, தவிர்க்க முடியாமை இருக்கிறதே - அதைத்தான் சிறப்பான ஒரு இலக்கிய அம்சமாகச் சொல்லவேண்டும். இந்தத் தப்ப முடியாமையும், தவிர்க்க முடியாமையும் ஒரு முழுமையான தனித்தன்மையுடன் சேர்ந்து உருவாகிறபோதுதான் இலக்கியம் பிறக்கிறது என்று நாம் உணருகிறோம். இப்படித் தமிழ்ச் சிறுகதையில் இதுவரை ஒரு ஏழெட்டுப் பேரிடம் இலக்கியம் பிறந்ததிருக்கிறது என்று சொல்லலாம். அதில் கு.ப.ரா.வும் ஒருவர்.

கு.ப.ரா.வின் சிறுகதைகளிலேநடுத்தெரு நாகரிகம்என்பதிலும் இந்த உருவ அமைதியும், inevitability-யையும் காணமுடிகிறது. அதேபோலப் பல சிறுகதைகளின் பெயர்களைக் கூறலாம். 'தாய்' என்கிற சிறுகதையில் கடைசித் திருப்பம் இருக்கிறதே, அது அற்புதமாக, தவிர்க்க முடியாத ஒருவகையில் அமைந்திருக்கிறது. அதுவே அந்தச் சிறுகதையை இலக்கியமாக்குகிறது என்று சொல்லலாம்.

4

விஷய அளவிலும் கு.ப.ரா.வின் சிறுகதைகளுக்குத் தனிச்சிறப்பு உண்டு. சாதாரணமாக மறுமலர்ச்சிக் கதைகளிலெல்லாம் மனைவி காபி கொண்டுவந்து வைத்துக்கொண்டு நிற்பாள் என்று கல்கி போன்ற பத்திரிகைக் கதையாளர்கள் கேலி செய்ததற்கு ஒருவிதத்தில் கு.ப.ரா.தான் முக்கிய காரணமாக இருந்தார் என்று சொல்லலாம். ஒரு சிறிய விஷயத்தைப் பெரிசாக எடுத்துச்சொல்லி, அதை ஒரு இலக்கிய உருவமாக்கி, உருட்டித் தரும் காரியத்தை கு.ப.ரா. தன் சிறுகதைகள் பலவற்றில் செய்திருக்கிறார். உருவச் சிறப்பு மட்டும் போதுமா இலக்கியத்துக்கு, விஷயச் சிறப்பும் கனமும் தேவையில்லையா என்று நினைப்பவர்கள் நம்மிடையே பலர் உண்டு. அவர்களுக்கு கு.ப.ரா.வின் சிறுகதைகள் அவ்வளவாகத் திருப்தி தராது என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் கு.ப.ரா.வின் சிறுகதைகளில் வருகிற விஷயங்கள் எல்லாமே ஓரளவுக்கு ஆண் பெண் உறவு முறைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டவை என்று சொல்லலாம். 'கனகாம்பரம்' என்கிற சிறுகதை அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் அது என்ன சொல்கிறது என்று கேட்டால், சற்று யோசித்து ஒன்றும் சொல்லவில்லை என்றுதான் சொல்லவேண்டிவரும்.

இலக்கியம் ஒன்றுமே சொல்லாமலும் இருக்கலாம் என்பது அடிப்படையான நோக்குகளில் ஒன்று என்பதை இலக்கிய விமரிசன ரீதியில் ஏற்றுக்கொண்டால்தான், கு.ப.ரா.வின் சிறுகதைகளுக்கு முக்கியம் உண்டு என்று ஏற்றுக்கொள்ள முடியும். இதைப் பலம் என்றும், பலஹீனம் என்றும் விவாதித்து முடிவு கட்டலாம்.

பலமோ, பலஹீனமோ - இதுதான் கு.ப.ரா. என்று சொல்வது மிகையாகாது. மெளனியின் கதைகளிலே காணப்படும் ஆழமோ, புதுமைப்பித்தன் சிறுகதைகள் சிலவற்றிலே காணப்படும் கனமோ சிந்தனைத் துடிப்போ, பிச்சமூர்த்தியின் சிறுகதைகளில் காணப்படும் ஆழ்ந்த அனுபவமான தத்துவச் சரடோ, லா..ராமாமிர்தத்தின் மனோதத்துவப் பின்னலாழமோ, தி. ஜானகிராமனின் ஆழ்ந்த கேலிச் சிரிப்போ, அழகிரிசாமியின் சிறுகதைகளிலே ஒரு குலத்தை உருவகப்படுத்தி முடிக்கப்போகும் பாத்திரங்களையோ - கு.ப.ரா.வின் சிறுகதைகளில் காண இயலாது.

விஷயத் தொனியோ, சூழ்நிலை விவரணையோ, பாத்திர சிருஷ்டியோ கு. ப. ராவின் தனிச்சிறப்பல்ல. அவர் செய்ததெல்லாம், சில குறிப்பிட்ட மனோபாவ அவசங்களுக்குச் சிறுகதை உருவம் தந்ததுதான். இந்த மனோபாவ அவசங்கள் யாருக்காவது உவப்பாக இல்லை., பிடித்தமாக இல்லை என்றால் அது அவர்களுடைய துரதிருஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். அந்த மட்டில் அவர்களுடைய இலக்கிய ரஸனை அனுபவத்தில் சொட்டை விழுந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

5

கடைசியாக கு.ப.ரா.வின் தமிழ் நடையைப்பற்றி இரண்டொரு வார்த்தைகள் சொல்லவேண்டியது மிகவும் அவசியம். அவர் செய்ய முயன்ற காரியங்களைச் சாத்தியமாக்குவதற்குப் போதுமான நடை அவரிடம் இருந்தது. இந்த விஷயத்தில் அவரை மெளனியையும், புதுமைப்பித்தனையும்விடவே திறமைசாலி என்று சொல்லவேண்டும். பின்னவர்கள் இருவரும் தங்கள் வார்த்தைகளுக்குள் அகப்பட மறுக்கிற பல விஷயங்களைச் சொல்ல முன்வந்துவிட்டு, சொல்ல முடியாமல், வாசகனை ஓரளவு அந்தரத்தில் தவிக்கவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். கு.ப.ரா. அப்படிச் செய்வதே கிடையாது. சொல்ல வந்தது பூராவையும், நின்று நிதானமாக வார்த்தைகளில் கொட்டி அளந்து காட்டிவிடுகிறார். பல இடங்களில் இந்தக் காரியத்தை மிகவும் அழகாகவே செய்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.

பேச்சிலும், உபமானங்களிலும் சில சமயம் கு.ப.ரா.வின் வசனத்திலே கவிதை குறுக்கிட்டு வீணாக்கிவிடுகிறது என்று நான் நினைப்பதுண்டு. எப்படி, எங்கே என்று விளக்க இங்கு இடமில்லை. ஆனால் மொத்தத்தில் சொல்லப்போனால் கு.ப.ரா.வின் நடை மிகவும் நாஸுக்கானது. அவரது தனித்வத்தை வெளிப்படுத்துவதற்கே போல ஒரே சமயத்தில் மென்மையையும், பலத்தையும் கொண்டது. தமிழ் வசன நடைக்கு ஒரு புது கனத்தையும், பரிமாணத்தையும் தந்தவர் என்று கு.ப.ரா.வைப் போற்றலாம். முக்கியமாக அவருடைய காணாமலே காதல்என்கிற சிறுகதைத் தொகுதியில் அவருடைய சரித்திரச் சிறுகதைகளின் நடை மிகவும் அழகாகவும் அந்தமாகவும் வந்திருப்பது காணக்கிடக்கிறது. மற்றச் சிறுகதைகளிலும் நடை விஷயத்தில் குறுக்கிட்டு, சிறுகதையின் அமைதியைக் கெடுக்காமல் தெளிவான நீரோடை போல ஓடுகிறது என்று சொல்லலாம். சாதாரணமாக, கு.ப.ரா. தன் குரலை உயர்த்துவதேயில்லை என்று தான் சொல்லவேண்டும்.

பின்னால் ஒரு அர்த்தம் தொனிக்க, அதுவும் ஆண் பெண் உறவு விஷயங்களில் இப்படித் தொனிக்க வார்த்தைகளை உபயோகிப்பதில் கு.ப.ரா.வுக்கு ஈடு இன்றுவரை தமிழில் தோன்றவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தத் தொனி என்பது கு.ப.ரா.வின் நடைச் சிறப்புகளில் ஒன்று. குரலை உயர்த்தாமல் அவர் சொல்லுகிற வார்த்தைகள் இதனால் ஒரு தனிப்பலமும் அந்தரார்த்தமும் பல இடங்களில் வர்ணமும் பெற்று நம்மைக் கவருகின்றன.

கு.ப.ரா.வின் சிறுகதைகள் தமிழ் இலக்கியத்தில் சிறப்பான ஒரு பகுதி. தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியிலே அவருக்குச் சிறப்பான ஒரு பங்குண்டு. பல சிறுகதைகளில் அவர், முன்னரோ பின்னரோ பலரும் தொடாத பல சிகரங்களை எட்டித்தொட்டுக்காட்டியிருக்கிறார். அவருடைய சிறுகதைகளையும், மற்ற இலக்கியத்துறை எழுத்துக்களையும் இலக்கிய விமரிசன ரீதியில் மதிப்பிட்டுப் பார்க்க அவசியம் இருக்கிறது. அதனால் தமிழில் இலக்கியம் வளரும். அவருடைய சிறந்த சிறுகதைகள் ஒரு (Selections) ஸெலக்ஷன் வரவேண்டியது மிகவும் அவசியம் - தமிழில் இலக்கிய வளர்ச்சிக்கு மிகவும் உடனடியான தேவை. அதேபோலப் பல துறைகளிலும் அவர் செய்துள்ள சேவை கணிக்கப்பட்டு நிரந்தரமான உருப்பெற வேண்டியதும் மிகவும் அவசியம். சமீப காலத்தியப் பழமையை (மற்றப் பழமையும்தான்) மதிப்பிட்டு அறிந்துகொள்ள நாம் மறுத்தால், தமிழ் இலக்கியம், பத்திரிகை எழுத்துக் குட்டையிலே தேங்கி வளம் பெறாது போய்விடும் என்பதில் சந்தேகமில்லை.

எழுத்து, மே 1959

(கு.ப.ரா. நினைவு ஏடு)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.