Thursday, December 12, 2024

புரியும் கதை - கு. ப. ரா.

 1

நான் எழுதியனுப்பிய கதையைப் பத்திரிகாசிரியர் திருப்பிவிட்டார். அது சாதாரண ஜனங்களுக்குப் புரியாதென்று தாம் பயப்படுவதாயும் வேறொரு கதை எழுதியனுப்ப வேண்டுமென்றும் எழுதியிருந்தார். ஜனங்களுக்குப் புரியும்படி என்ன கதை எழுதுவது என்று எனக்குப் புரியவில்லை. நான் பிறந்த கதையை எழுதட்டுமா? வளர்ந்த கதையை எழுதட்டுமா? அது ருசிகரமாக இல்லை என்று எழுதுவார் பத்திரிகாசிரியர். எனக்குக் கோபம் வந்தது. அந்தச் சமயத்தில் ராதா தன் காரியங்களை முடித்துக்கொண்டு அறைக்குள் வந்தாள். ‘புரியும் கதை’ என்ற தலைப்பைப் போட்டுவிட்டு, நான் மேஜையின் முன்பு பேனாவும் கையுமாக யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். என் மனைவி பின்புறமாக வந்து, அந்தத் தலைப்பைப் படித்தாள். என்ன நினைத்தாளோ?

என்ன கதை வேண்டியிருக்கிறது எப்பொழுது பார்த்தாலும்? அனுப்புகிறதெல்லாம் திரும்பி வருகிறது!”

என்று சொல்லிக்கொண்டு குறும்பாக என் கையிலிருந்த பேனாவைப் பிடுங்கி மூடிவைத்துவிட்டு, என் தோளின் மேல் கை வைத்துக்கொண்டு நாற்காலியின் கைமேல் உட்கார்ந்தாள்.

“போ, அந்தண்டை! சமயம் சந்தர்ப்பமே தெரிகிறதில்லை!”

என்று நான் வெள்ளென்று விழுந்தேன். என் சொற்களைக் காட்டிலும் என் முகந்தான் அப்பொழுது அதிகமான கோப விகாரத்தை அடைந்திருக்க வேண்டும்; ஏனென்றால், என் மனைவி சட்டென்று எழுந்து விலகி நின்று என் முகத்தை வெறித்துப் பார்த்தாள். அவள் முகத்தில் ஆச்சரியத்தையும் வெறுப்பையும் கண்டேன். மறுநிமிஷம் அவளுடைய கண்களில் நீர் நிறைந்தது. சடக்கென்று திரும்பிச் சமையலறைக்குப் போய்ப் படுத்துக்கொண்டாள். பிறகு கதையில் ஒரு வரிகூட ஓடவில்லை. கதை எழுதுவதற்கு இடைஞ்சல் கூடாதென்று நான் என் மனைவியைக் கோபித்துக்கொண்டேன். ஆனால் இடைஞ்சல் அதன் காரணமாகவே பூர்ணமாகச் சம்பவித்தது. அன்று ஏன் அவ்வளவு அற்ப விஷயத்திற்காக என் மனைவிமேல் அப்படி நாய்போல விழுந்தேன்? பத்திரிகாசிரியர் மேல் ஏற்பட்ட கோபமா? அல்லது என் மனைவி செய்த காரியத்தால் ஏற்பட்டதா? அவள் பேனாவைப் பிடுங்கி வைத்ததற்காக ஏன் அவ்வளவு கோபம் வரவேண்டும்? இரவு சுமார் ஒன்பது மணிதான் இருக்கும். தெருவில் நடமாட்டம் ஓயவில்லை. பரதேசிக் கூட்டம் ஒன்று

“சாம்ப சதாசிவ, சாம்ப சதாசிவ!”

என்று ராகம் போட்டுப் பாடிக்கொண்டு தெரு வழியே போய்க் கொண்டிருந்தது. சென்னை நகரத்தின் தூரத்து உறுமல் இன்னும் அடங்கவில்லை.

2

என் மனம் அலைந்தது. பத்து வருஷங்களுக்கு முன்னால் ஒரு சித்திரை மாதம்; மணப் பந்தலில் ராதா என் முன்பு ஒரு புதுப் பாயின்மேல் உட்கார்ந்திருந்தாள். பந்தல் கீற்றின் வழியாக மஞ்சள் வெயில் முலாம் பூசுவது போலச் சில சில இடங்களில் விழுந்தது. ராதா என் கையிலிருந்த பூச்செண்டைப் பிடுங்க முயன்றுகொண்டிருந்தாள். அவளுடைய சிவந்த முகம் அம்முயற்சியில் கோவைப் பழம்போல ஆகிவிட்டது. அருகிலிருந்த பெண்கள் பார்த்துச் சிரித்து ஆனந்தமடைந்தார்கள். என்னுடைய கையில் கசங்கிக் கிடந்த அந்தப் பூவைக் காட்டிலும் மிருதுவாக இருந்தாற்போலிருந்தது அவள் கை. நான் செண்டை விடவில்லை. பக்கத்திலிருந்து என் அத்தை,

என்னடாது? செண்டைக் குடுடா! உன் சமத்தை அப்புறம் காட்டலாம்?”

என்றாள். பூச்செண்டின் மீதிருந்த பிடிப்பைத் தளர்த்தினேன். ராதை அதை வெடுக்கென்று பிடுங்கி எடுத்துக்கொண்டாள். எங்கள் இருவருடைய வாழ்க்கைப் பிடிப்புக்கு நடுவில் ஒரு பூச்செண்டு தோன்றி ஊக்கமும் உணர்ச்சியும் ஊட்டிற்று. அந்த இன்பச் செண்டை நான் அவளிடமிருந்து லகுவாகப் பிடுங்கிக்கொண்டேன்; அதை அவள் அவ்வளவு லகுவாக என்னிடமிருந்து கொள்ள முடியவில்லை. அவளுடைய வெற்றிக்காக, முதலிலிருந்தே நான் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. அவளுக்கு அப்பொழுது வயது பதினான்குதான். ஆனாலும் வெள்ளரிப் பிஞ்சு போலத் தளதளவென்று வளர்ந்திருந்தாள். புதுப் புடவையும் மேனியுமாகப் பொங்கி வழிந்துகொண்டிருந்தாள். அந்த ‘வாளிப்பான’ உடலிலேயே ஏதோ ஒரு லாகிரி போன்ற மயக்கும் குணம் இருந்தது. அதில் பொங்கி நின்ற உயிர் அவளுடைய கண்களில் எட்டிப் பார்த்தது. அவளுடைய இளமையின் நிறைவு, நீர்க்குடத்தில் போல, அவள் இதழ்களில் ததும்பி நின்றது. இன்று போலிருக்கிறது: அப்பொழுது என்ன மோகன வெள்ளத்தில் உள்ளம் முழுகி முழுகி எழுந்து எழுச்சி அடைந்தது! அப்பொழுதுதான் முதல் முதலாகப் பெண் கை என்னைத் தீண்டி விஷ மயக்கத்தைக் கொடுத்தது. அந்தப் பதினான்கு வயதுப் பெண்ணின் கரம் ஒரு மந்திரக் கோல்போல எனக்கு மெய்மறதி உண்டாக்கிற்று.

3

மின்சார விளக்கின் வெளிச்சம் என் கனவுப் போக்குக்குப் பாதகமாக இருந்தது. எழுந்துபோய் அதை அணைத்துவிட்டு வந்து மறுபடியும் நாற்காலியில் சாய்ந்துகொண்டேன்; ஜன்னல் வழியாக நிலவு கொஞ்சமாக வந்து அடித்தது அறையில். என் கல்யாணம் ஆனதும் ராதாவின் நினைவும் அப்படித்தான் என் உள்ளத்தில் வந்து வீசியது. பிறகு, மெய் நிறைந்து அவள் மங்கையானபொழுது எப்பேர்ப்பட்ட இன்பமும் துன்பமும் ஒருங்கே கொண்டு தவித்தேன்! அவளைக் காணவேண்டுமென்று காதல் கொள்வேன்; கண்டபின்பு கலங்குவேன். தீபாவளி சந்தர்ப்பத்தில் அவளைப் பார்ப்பதற்காகவே மாமனார் வீடு செல்வேன். அவளை யாரும் அறியாமல் சந்திப்பதற்காக இரவு முழுதும் இமை கொட்டாது விழித்திருப்பேன். அதிகாலையில் அரை நிமிஷம் வந்து,

யாராவது வந்துடுவா”

என்று சாக்குச் சொல்லிவிட்டுப் போய்விடுவாள். என் ஏக்கம் இன்னும் அதிகமாகக் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிக்கும். சாந்திமுகூர்த்தம் ஆகாத அந்தச் சமயத்தில் அவளுக்கும் எனக்கும் நடுவில் ஒரு திரை இருந்தது. அதன் வழியாகத்தான் நான் அவளை அரைகுறையாகக் காண முடிந்தது. அந்தத் திரையின் பின்னால் ஒரு தேவதைபோலச் சஞ்சரித்து என்னை மயக்கினாள். கானல் நீர் போல என்னை ஏமாற்றினாள். கிட்டே இருப்பது போன்ற உணர்ச்சியில் தழுவ முயன்றால் தூரத்தில் நின்று நகைப்பாள். அந்தத் தத்தளிப்பிற்குப் பிறகு வாழ்க்கை ஆரம்பம். ராதாவும் நானும் என் தாயும் குடும்பம் நடத்தினோம். எங்கள் புத்துணர்ச்சிப் பெருக்கில் புளகாங்கிதமாகி விட்டோம். தனியே சந்தித்துப் பேசும் இரவு வருமோ என்று ஏங்குவேன். ஒவ்வோர் இரவும் ஓர் அமர நினைவாக இருக்கும். வாழ்க்கையைப் பூமணமும் புது மதுரமும் கொண்டு நிரப்பினோம் நாங்கள் இருவருமாக. வாழ்க்கைக்கரும்பின் இன்பக் கணுக்களை ஒவ்வொன்றாகச் சுவைத்தோம். மூன்று வருஷங்கள் மூன்று கணங்களாகச் சென்றன. சுக நித்திரையில் ஆழ்ந்திருந்த எங்களுக்கு அந்த மூன்று வருஷங்களும் ஓரிரவுபோலக் கழிந்தன.

4

இன்று ராதா ஒரு தாய். மூன்று மாதங்களாக என்னுடன் தனியாக வாழ்க்கை நடத்துகிறாள். என் தாய் தன் பெண்ணின் பிரசவத்திற்கு உதவியாக இருக்க போயிருக்கிறாள். வாழ்க்கையில் முதல் முதலாக இப்பொழுது ஒரு சோர்வு-சலிப்பு. ராதா இளமை மாறி வெளிச்சம் குன்றிய விளக்குபோல் இருக்கிறாள். அவள் உடம்பில் முன் இருந்த மெருகு இல்லை, மினுமினுப்பின்றித் தேய்க்காத பாண்டம்போல் இருக்கிறாள். முகம் ரத்தம் செத்து வெளேரென்று வெளுத்துப் போயிருக்கிறது. ஆனால் அழகு கொஞ்சமேனும் குறையவில்லை. அவளுடைய கன்னத்தின் பளபளப்பில் காது வைரம் பிரதிபலித்தது. கண்கள் சற்றுக் குழிவடைந்த போதிலும் குறுகுறுப்பும் மிதப்பும் குறையவில்லை. பின் ஏன் சலிப்பு? ஆமாம், சலிப்புத்தான்! அதனால்தான் எடுத்ததற்கெல்லாம் அவள் மேல் எனக்குக் கோபமும் என்மேல் அவளுக்குக் கோபமும் வருகிறது. கோபத்திற்கு இப்பொழுது ஏற்பட்ட காரணங்களெல்லாம் இதுவரையில் இல்லாமலா புதுமையாக ஏற்பட்டன? இல்லை. சொல்லப்போனால் முன்பு அதிகமாகவே இருந்தன. அப்பொழுது ஒன்றும் கண்ணில் படவில்லை. மோக வெயிலிலிருந்து அப்பொழுதுதான் வாழ்க்கை வீட்டிற்குள் நுழைந்திருந்தோம். எதிரே இருந்ததொன்றும் கண்ணில் படவில்லை. இப்பொழுது கொஞ்சங் கொஞ்சமாக எல்லாம் தென்படுகிறது. பழத்தின் இனிப்பு வாயில் குறைந்தவுடன் தோலின் கசப்புத் தென்படுகிறது. ராதா ஏதாவதொரு முக்கியமில்லாத விஷயத்தைப் பற்றி ஒரு கேள்வி கேட்பாள். நான் வேலை மும்முரத்தாலோ அக்கேள்வியின் அசட்டுத்தனத்தாலோ சும்மா இருந்துவிடுவேன்.

“இந்த ரவிக்கை நன்னாயிருக்கோ?”

என்பாள். வந்த புதிதில் அவள் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் நான் பூரித்துப்போயிருப்பேன். அவள் வாயிலிருந்து வெளியேறின ஒவ்வொரு வார்த்தையையும் சுவைத்து அனுபவித்துப் பதில் சொல்லுவேன். நான் எப்படிப் பதில் சொல்லவேண்டுமென்று அவள் நினைக்கிறாள் என்பதை ஊகித்து அவள் நோக்கம்போலப் பதில் சொல்லுவேன்.

“ரவிக்கை பேஷான ரவிக்கைதான்! ஆனால் உன் உடம்பு நிறத்திற்கு அந்தக் கலர் பொருந்தவில்லை; அல்லவா?”

என்பேன்.

“பின் ஏன் வாங்கிக்கொண்டு வந்தீர்கள்?”

என்பாள்.

“நானா வாங்கிக்கொண்டு வந்தேன்?... ஆனால்...”

என்று விழிப்பேன். என் அசடு தட்டிய முகத்தைப் பார்த்து அவள் சிரிப்பாள். இப்பொழுது, ‘என்ன அனாவசியமான கேள்வி?’ என்று எண்ணிச் சும்மா இருந்துவிடுவேன், அப்படிச் சொன்னால் அவளுக்குக் கோபம் வருமென்று. ராதா விடமாட்டாள். அவளுக்கு அப்பொழுதும் கோபம் வரும்.

“வார்த்தை சொன்னாக்கூடப் பதில் சொல்ல முடியல்லே”

என்று குத்திப் பேசுவாள்.

“முட்டாள் தனமாகப் பேசாதே!”

- என்பேன். வார்த்தைகள் முற்றும். வாயில் வெற்றிலையுடன் சிரித்துக்கொண்டு என்னிடம் கேள்வி கேட்ட வண்ணம் கொஞ்சிக்கொண்டு வந்தவள், கண்ணும் கண்ணீருமாக வெற்றிலையைப் போய்த் துப்பிவிட்டு வந்து படுத்துக்கொள்வாள். இந்த மூன்று மாதங்களில் இந்தச் சம்பவங்கள் அதிகமாகிவிட்டன. என் தாய் ஊருக்குப் போனவுடன் எங்கள் தனிமை சில நாட்களுக்கு ஒரு பேரின்பம்போலத்தான் இருந்தது. ஒரு தனிச் சுவர்க்கத்திற்கே அஸ்திவாரம் போட்டுச் சுவர்கள் எழுப்பினோம். ஆனால் அந்தச் சுவர்கள் இன்று தலை மட்டத்திலேயே நிற்கின்றன. நாங்கள் கையில் கற்கண்டுக் கட்டி போலக் கண்டெடுத்து விட்டதாக எண்ணிய இன்பம் பனிக்கட்டிபோலக் கையில் கரைந்து நழுவுவதைக் கண்டோம். அதனால் பரஸ்பர மனஸ்தாபமும் ஆத்திரமும் அதிகந்தான் ஆயின. மனத்திற்குள் ஒருவர் மற்றொருவரைக் குற்றவாளி ஆக்கினோம். இந்த மோதுதல்களுக்கிடையே குழந்தை கனகம் ஒரு மின்னொளி போல இருந்தாள். சில சமயங்களில் அவள்தான் பெரிய ஆறுதலாக இருந்தாள். எங்கள் கோப வேளையில் அவள் கன்னத்தில் எங்கள் இருவர்களின் இதழ்களும் கலந்தன. ராதா அதிகமாகப் படிக்காதவளானாலும் புத்திசாலி; இங்கிதந் தெரிந்தவள், ரொம்ப ரோஷக்காரி; வார்த்தை பொறுக்கமாட்டாள்; சளசளவென்று பேசும் தன்மையுடையவளும் அல்ல. நானும் எதற்கெடுத்தாலும் கோபித்துக்கொள்ளும் தன்மையுடையவன் அல்ல.

“ஏன்? ஏன்?”

என்ற கேள்வி மனத்தில் கிளம்பிக் கிளம்பி வந்து தாக்கிற்று. சந்திரன் மேலே ஏற ஏற அறையிலிருந்து நிலா வெளிச்சம் குறைந்துகொண்டே வந்தது. ‘ஏன்?’ என்ற கேள்விக்கு ஒரே பதில்தான் திரும்பித் திரும்பி வந்தது - சலிப்பு, சலிப்பு! திரும்பவும்,

ஏன்?”

என் தாய் இருந்தபொழுது, நாங்கள் தனியாக இல்லாதபொழுது, ‘சண்டை’ இல்லை! தாய்கூட இருந்தபொழுது இருந்த நிர்ப்பந்தத்தில் இருவருக்கும் ‘சண்டை’ போடச் சாவகாசம் இல்லை. தளைகளிலே தான் தனிமையின் சுயேச்சை நன்கு பரிமளித்தது. மறைவிலேதான் மகிழ்ச்சி இருந்தது; நிர்ப்பந்தத்தில், கட்டுப்பாட்டில் - இன்பம்! விடுதலையில் வெறுப்பு!

5

சந்தடி அடங்கிவிட்டது. தூரத்தில் சமுத்திரத்தின் அலைகள் பொருமும் சத்தம் கேட்டது. திடீரென்று அருகே சமையலறையில் ராதா பொருமும் சத்தமும் கேட்டது. கடல்போலத் திக்கற்றுக் கிளம்பிற்று அவள் சோகம். பதைத்துக்கொண்டு அவளிடம் சென்றேன்.

“கிடக்கிறது, உள்ளே வா! ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டால் அதற்கு இப்படி அழுவானேன்?”

என்று மழுப்பினேன். என் மனத்தின் துடிதுடிப்பை மறைத்துவிட்டேன்.

“நாளைக்கு, காலமே, அம்மாவை வரும்படி தந்தியடியுங்கள்!” என்றாள் அவள்.

•••

மணிக்கொடி, 01-05-1938

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.