1
அதற்கு முன் விசுவேசுவரன் அவளை நேரில் பார்த்ததில்லை. சகோதரி சாரதா என்றைக்கோ ஒரு நாள் ஒரு புகைப்படத்தை அவனுக்குக் காட்டினாள். அதிலிருந்து அவள் சாரதாரணமாகக் காணக்கூடாத சரீர அமைப்பும் அழகும் வாய்ந்தவள் என்று அறிந்தான். ஆனால் அந்த அழகின் பெருமிதம் அவன் மனத்திற்கு அதிகமாகப்பட்டது. அங்கங்களின் பூரிப்பும் முகத்தின் நிறைவும் ஒரு ராஜஸக் களை பெற்றிருந்தன; பார்த்த மாத்திரத்தில் மிருக உணர்ச்சியைத் துண்டுவனவாக இருந்தன.
பெண்ணழகு அவ்வளவு பூரணமாக இருப்பது ஒரு பகட்டு என்பது அவன் வெகுநாளாக இலக்கியப் படிப்பிலிருந்து அடைந்த அபிப்பிராயம். அந்த மாதிரி பொலிவைக் கண்டால் அவனுக்குக் கிளியோபாட்ரா நினைவுதான் வரும். அப்படிப்பட்ட அழகு அழிப்புச் சக்திதான் கொண்டது, அதன் நிழலில் எதுவும் தழைக்காது என்று அவன் எண்ணினான்.
உடல் வளர்ச்சியிலும் முகத்தோற்றத்திலும் அன்ன பூர்ணா புகைப்படத்தில்
அப்படித்தான் இருந்தாள். அதிலும் நல்ல வயசு; இருபது. கல்யாணம் என்ற கட்டு இன்னும் அவள் மேல்
விழவில்லை. அந்தப் படத்தைப் பார்த்ததும் விசுவேசுவரன் மனத்தில் ஏற்பட்ட சஞ்சலமே
அவனுடைய பொறுப்பிற்கும் காரணமாயிற்று. ‘சகுந்தலையைப் போன்ற தன்மைதான் ரஸிகன்
உள்ளத்தில் இடம் பெறும்; ஊர்வசி
ஒருகாலும் மனித இருதயத்திற்கு ஆறுதல் அளிக்க மாட்டாள்.’ - இந்த மாதிரி அவன்
எண்ணினான்.
எனவே ரயிலடியில் அவளை நேரில் பார்த்ததும் விசுவேசுவரன் திகைத்துப்
போய்விட்டான். அவன் எதிர்பார்த்தற்கு நேர் விரோதமாக இருந்தது அவளுடைய தோற்றம்.
புகைப்படத்தில் தென்படாத சில வேறு குணங்கள் அவனுக்கு அப்போது அவளுடைய சாயலில்
தென்பட்டன.
அங்கச் செருக்கு சற்றே துவண்டு போயிருந்தது. முகத்தின் காம்பீரியத்தில் ஒரு
சோகம் அடிவர்ணம்போல் படிந்திருந்தது. ராஜஸத் தோற்றம் முழுவதும் எங்கோ மறைந்துபோய்
மிகப் புதிதான ஒரு சாந்தம் அதில் பரவி நின்றது. தைரியம் ஒடுங்கி ஒரு மருட்சி
தென்பட்டுக் கொண்டிருந்தது. அலட்சியப் பார்வை போய் அடக்கம் பிறந்திருந்தது.
விசுவேசுவரன் அப்போது அந்த அழகை நிராகரிக்க முடியவில்லை. அவ்வளவு வருஷங்கள்
அவன் தனியாக வாழ்ந்தபோது எங்கோ அவன் உள்ளத்தில் ஆழ்ந்து கிடந்த உணர்ச்சி
திடீரென்று மேலே எழுந்து அவன் உள்ளத்தைக் கலக்கிற்று. அந்த நிமிஷம் அவன், தான் மாறிவிட்டதை உணர்ந்தான்.
எந்த மனிதரிடமும் ஒரு பெண்ணே அந்த மாறுதலை ஏற்படுத்த முடியும் என்று
இலக்கியத்தில் அவன் வெகுவாகப் படித்திருந்தான். அது எப்படி நேரக்கூடும் என்றே அவன்
தனக்குள் தர்க்கம் செய்துகொண்டது உண்டு. ஆனால் அந்தத் தர்க்கப் புத்திக்கும்
எட்டாத வகையில் பளிச்சென்று அவனுக்கு அப்போது அந்தக் கிளர்ச்சி உண்டாயிற்று.
2
திருச்சி கண்டோன்மென்டில் தெற்குப் பார்த்த பங்களா. அதன் வலதுகைப் புறத்தில்
முன் தோட்டத்தை ஒட்டி விசாலமான அறை. அதன் மேற்கு ஜன்னலில் அன்னபூர்ணா சித்தப்பிரமை
கொண்டவள் போல் உட்கார்ந்திருந்தாள்.
இப்போது தேச சேவிகைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கேஸரி வர்ணப் புடைவையையும்
சாகொலெட் வர்ண ரவிக்கையும் அவள் அணிந்திருந்தாள். தோட்டத்து மரங்களின் இலைகள்
வழியாக நீண்டு வந்த மாலைச் சூரியனின் கிரணங்கள் அவளுடைய வைரக் கம்மல்களில்
வீசுவதால் கிளம்பிய சுடர் அவளுடைய வெளுத்த முகத்தில் விட்டு விட்டு அடித்தது.
லேசாக முடியப்பட்டிருந்த தலைமயிர் சரிந்து அடிக்கடி காதுகளிலும் கன்னங்களிலும்
விழுந்தது; அதை அசிரத்தையாக
ஒரு கையால் அகற்றிக்கொண்டு அவள் ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.
சமையற்காரப் பையன் கொண்டுவந்த ஆகாரத்தைத் தீராது என்று உட்கொண்டாள்; தினசரியைப் புரட்டினாள்; பிறகு அதை வெறுப்புடன் மேஜைமேல்
விட்டெறிந்தாள். சுவரில் மாட்டியிருந்த விசுவேசுவரன் படத்தைச் சற்று நேரம்
பார்த்தாள்; பிறகு ஆழ்ந்த
பெருமூச்சு ஒன்றை, மூச்சுவிட மறந்துபோனதுபோல,
விட்டாள். அவளுக்கு எதிலும் உற்சாகமே
ஏற்படவில்லை என்பது அவளது ஒவ்வொரு செய்கையிலும் வெளியாயிற்று.
அன்னபூர்ணா சிறையிலிருந்து விடுபட்டு வந்து நான்கே நாட்கள் ஆகியிருந்தன. ரயில்
ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் வந்து தன்னை வரவேற்ற விசுவேசுவரன் - தன் தோழியின்
சகோதரன்-பங்களாவில் தாற்காலிகமாகத் தங்கினாள்.
சிறைவாசம் செய்துவிட்டு வெளியே வந்தாகிவிட்டது. அதனால் சரீரமும் மனமும்
தளர்ச்சி அடைந்தன. மேலே இன்னது செய்வது, இங்கே போவது என்பதுதான் அவளுக்கு விளங்கவில்லை. திகைத்துப் போய்
உட்கார்ந்திருந்தாள். பின்னால் காலடிச் சத்தம் கேட்டது. உடனே அன்னபூர்ணா
திடுக்கிட்டு எழுந்து தன் நிலைமையை ஒருவிதமாகச் சமாளித்து மறைத்துக்கொண்டு உள்ளே
வந்து விசுவேசுவரனை வரவேற்க முன்வந்தாள்.
“வாருங்கள், மன்னிக்க
வேண்டும்; எங்கேயோ ஞாபகமாக
இருந்து விட்டேன்!” என்றாள்.
“அதனால் என்ன? பாதகமில்லை,
உட்காருங்கள்” என்று அவன் அவளுக்கு
ஒரு நாற்காலியை மரியாதையாகச் சுட்டிக் காட்டினான். இருவரும் மேஜைக்கு இரு
பக்கங்களிலும் இருந்த இரண்டு நாற்காலிகளில் எதிரும் புதிருமாக உட்கார்ந்தார்கள்.
ஏதாவது பேச வேண்டுமே என்று விசுவேசுவரன், “சாரதா இங்கே இருப்பது போலவே பாவித்து நீங்கள்
கொஞ்சங்கூடச் சங்கோசமில்லாமல் இருக்க வேண்டும்” என்றான்.
“இருக்கிறேனே! தெருவில் நிற்கவேண்டியவளை ஒரு நிழல் கொடுத்து உட்கார
வைத்திருக்கிறீர்களே!” என்று அன்னபூர்ணா, தன் நிலைமையை இப்போது மறைக்க முடியாமல் கூறினாள்.
“அம்மா, நீங்கள்
அப்படியெல்லாம் சொல்லவே கூடாது. சாரதா எல்லா விஷயங்களையும் எனக்கு எழுதிவிட்டாள்.
விடுதலையன்று உங்களை வரவேற்று வீட்டில் வைத்துக்கொள்ளும் படியாகவும் தான் காலேஜ்
மூடினதும் இன்னும் ஒரு வாரத்தில் வருவதாகவும் எனக்கு எழுதி இருக்கிறாள். நீங்கள்-”
“ஆனால் என் கதை முழுவதும் உங்களுக்குத் தெரியுமா?” என்று அவள் ஆச்சரியமற்ற தழுதழுத்த குரலில் கேட்டாள்.
“உங்கள் அநுமதியின் பேரிலோ - அல்லது-”
“பாதகமில்லை. அதைப் பற்றி நான் வெட்கப்படவில்லை. ஏனென்றால் நான் ஒரு பெண்
என்பதையே மறக்கும் நிலைமையில் இருக்கிறேன். இனிமேல்-” என்று ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு
சொன்னாள்.
அன்று மாலை அவளுடன் ஏதேதோ பேச வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே விசுவேசுவரன்
அங்கே வந்திருந்தான். கடந்த நான்கு நாட்களாக அவனுக்குச் சரியானபடி தூக்கங்கூட
வரவில்லை. அவளுடைய ஏக்கம் ஒரு புறம்; தன்னுடைய உணர்ச்சியே மற்றொருபுறம். இரண்டும் இருவருடைய மௌனத்தாலும் உள்ளத்தில்
அடைபட்டு இருவருக்கும் வேதனையை உண்டாக்கிக்கொண்டிருந்தன. வந்தவுடனேயே ஏதாவது
சொல்லி அவளைப் பயமுறுத்திவிடக் கூடாது என்றே அவன் அவ்வளவு நாள் சும்மா இருந்தான்.
சகோதரி வரும் வரையில் தன்னால் தாங்க முடியாது என்று உணர்ந்துதான் அவன் தயக்கத்துடனும்
பதற்றத்துடனும் அன்று அவளுடன் பேசிப் பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தான்.
பேச்சுப் போக்கில், சந்தர்ப்ப
மேற்பட்டால், அவள்
அறிந்துகொள்ள முடியாத வகையில், ஜாக்கிரதையாக அவளுடைய உள்ளத்தின் உணர்ச்சிச் சுமையைச் சற்று இறக்கி வைத்து
ஆறுதல் அளித்து அவள் மனப்போக்கை அவள் வாய் மூலமாகவே அறிய வேண்டும் என்று எண்ணி
அங்கே வந்து பீடிகை போட்டான் விசுவேசுவரன்.
அவளோ ‘நான் பெண் என்பதை மறக்கும் நிலைமையில் இருக்கிறேன்!’ என்று
எடுத்தவுடனேயே கொட்டிவிட்டாள் தன் உள்ளத்தை.
அந்தச் சொற்கள் ஓர் அணைபோலத் திடீரென்று குறுக்கிட்டு அவன் பேச
நினைத்ததையெல்லாம் ஒரேயடியாகத் தேக்கம் கொள்ளச் செய்தன. மேலே தான் எது சொன்னால்,
எப்படி அவளை அது பாதிக்குமோ என்று
திகைத்து நாற்காலியிலிருந்து எழுந்து அங்குமிங்கும் நடக்க ஆரம்பித்தான். அவளும்
தான் சொன்ன வார்த்தைகளிலிருந்து தோன்றின பாதையொன்றைப் பிடித்துக்கொண்டு எங்கோ
யோசனையில் சென்றுவிட்டாள்.
ஐப்பசிமாதம்; திடீரென்று
மூடம் போட்டுக்கொண்டு ‘பிசு பிசு’ என்று தூற ஆரம்பித்தது; தெருவில் ஜன நடமாட்டம் இல்லை. காக்கைகள் மழையில்
நனைந்துகொண்டே தெருவில் ஏதோ பொறுக்கிக்கொண்டிருந்தன. இயற்கையே தேக்கம் கொண்டது
போல் ஸ்தம்பித்துப் போயிருந்தது.
3
காங்கிரஸ் சட்டசபை இயக்கத்தில் இறங்கிவிட்டது. சத்தியாக்கிரகிகளுக்கு இனிமேல்
என்ன போக்கு? காந்திஜி
மறுபடியும் ஏதாவதொன்றை ஆரம்பித்தாலொழியத் தொண்டர்களுக்கு வேலையே இல்லை. மனமுடைந்து
மழுங்கி ‘இனி உயிர்வாழ்வது எதற்கு?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது தேசீய இயக்கம் அவள் உயிரை
மறக்கும்படியான மாற்றாக அமைந்தது. ஆனால் இப்போது அது கானல்நீர் போல
மறைந்துவிட்டதால் அவள் போக்கற்றவள் போலத் திணறினாள். அவள் சிறை சென்றபோது இருந்த
நிலைமை நாட்டில் மட்டுமல்ல, அவள்
வாழ்க்கையிலும் மாறிவிட்டது. நல்லவேளையாக விசுவேசுவரன் அன்று வந்து வரவேற்றான்.
இல்லாவிட்டால் எங்கே போவது என்ற பிரச்சினைகூடப் பெரிதாகியிருக்கும்.
பெற்றோர்கள் இளமையிலேயே இறந்துபோய்விட்டார்கள் அவளுக்கு. எடுத்து வளர்த்த
தாய்மாமனாவது இன்னும் சில வருஷங்கள் இருந்து அவளைப் பாதுகாக்கக் கூடாதா? அவரும் இறந்தபிறகு அவள் சுயேச்சை கொண்ட
படித்த பெண்ணாகச் சமூகத்தில் தனியாக நின்றாள். அழகு அப்படித் தனித்து வெகுகாலம்
இருக்க முடியுமா?
சத்தியநாராயணன் என்ற ஓவியன் அவளை எப்படியோ ஏமாற்றித் தன்னுடன் தைரியமாகக்
கல்யாணமின்றி இருக்க உடன்படச் செய்து அவளிடமிருந்து சொற்ப சொத்தையும்
அபகரித்துக்கொண்டு தெருவில் நிறுத்திவிட்டான். முதலில் அவனைப் போல இங்கிதமும்
அன்பும் உள்ளவர்கள் யாருமே இருக்க முடியாது என்று அநுபவமற்ற அன்ன பூர்ணா
நினைக்கும்படி நடந்துகொண்டான். பிறகு கைக்காசு குறையக் குறையத் தன்
மிருகத்தனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக் காட்டினான்.
சாரதா எப்படியோ அவன் தன்மையை ஊகித்துவிட்டாள். அவனிடம் ஈடுபட்டுப்போன
அன்னபூர்ணாவுக்குப் பகுத்தறிவு அப்போது மழுங்கிவிட்டது. சாரதா அவனுடைய நட்பு
வேண்டாம் என்று தடுத்தாள். அன்னபூர்ணா கேட்கவில்லை. ஒரு நாள் குடித்துவிட்டு வந்து
அவன் அவளை மிருகத்தனமாக நடத்தினவுடன்தான் அவள் விழித்துக்கொண்டாள். அந்த நிமிஷமே
கிளம்பித் தோழியுடன் போய் வசித்தாள்.
‘இனி உயிருள்ளவரையில் நான் புருஷர்களிடம் நடந்து கொள்ளும் விதமே வேறு. ஆனால்
இவர் இந்த நான்கு நாட்களில், உண்மையாகவே
மரியாதை செய்ய வேண்டிய மனிதர் என்று எனக்கே தோன்றும்படியாக நடந்துகொண்டுவிட்டார்.
எல்லா விஷயங்களைப் பற்றியும் ஆழ்ந்து ஆலோசனை செய்திருக்கிறார் என்று தெரிகிறது.
இவருடைய இங்கிதமும் மரியாதையும் தூரத்திலிருந்து இவர் காட்டும் அன்பும் எனக்கே
ஆச்சரியமாக இருக்கிறது. நான் சங்கோசம் இல்லாமல், சங்கடப்படாமல், இங்கே இருக்க வேண்டுமென்று எவ்வளவு கவனமாக
இருக்கிறார்!...
‘அதற்காக எவ்வளவு நாள் இங்கே இருப்பது? அதுவும் சாரதா இல்லாமல் தனியாக இவருடன்? விசுவேசுவரன் களங்கமற்ற மனிதராக
இருக்கிறார். ஆனால் அவனும் முதலில் அப்படித்தான் தோன்றினான்.’
‘எப்படி இருந்தால் என்ன? எனக்கென்ன
பயம் இனிமேல்? யார் வலையில்
மறுபடியும் சிக்கப்போகிறேன் நான்?’
‘இப்போது ஏன் இங்கே வந்து என்னுடன் பேசுகிறார்? இல்லை; இங்கும் அதிகமாகத் தாமதிக்கக் கூடாது; என் பாழாய்ப்போன அழகு இவரைக்கூடக் கெடுத்துவிடும்!’
4
திடீரென்று விசுவேசுவரன் நாற்காலியில் வந்து உட்கார்ந்தான்.
“இந்தச் சிறுவயசில் நீங்கள் இப்படிப் பேசுவது மனித இயற்கைக்கு விரோதம் என்று
நான் சொல்லலாமா?”
“எது?” என்று அன்னபூர்ணா,
தன் நினைவுகளை நிறுத்திக் கேட்டாள்.
“உடலின் உண்மையை நீங்கள் நீத்துவிட்டதாகச் சொல்வது?”
“எது உண்மை?” என்று கேட்டவண்ணம்
அவள் அவன் பக்கம் திரும்பினாள்.
“உணர்ச்சிகள்!”
“நீங்கள் கற்றறிந்தவர்கள்; உணர்ச்சிகளை எப்படி உண்மை என்கிறீர்கள்?”
“நீங்கள் அப்படிக் கேட்டால் உண்மை என்பதே என்ன என்றல்லவா நான்
கேட்கவேண்டியிருக்கிறது!”
“சந்தேகமென்ன? எது
நிலைபெற்றதோ எது வீழ்ச்சியற்றதோ அதுதான் உண்மை!”
“நீங்கள் சொல்வது போன்ற நிர்க்குணமான ஸத்யம், நிர்க்குணப் பிரம்மத்தைப் போலவே உலகத்து இயற்கையுடன்
சம்பந்தப்படாதது.”
“அதைத்தான் சொல்லுகிறேன்; உயிரினிடையே காணக் கிடைக்காத ஒரு மலர்ச்சி, ஒரு நட்சத்திரப் பூ, உயிரையே உருவாக்கும் ஓர் உத்தமக் கொள்கை!”
“அது ஸாரமற்றது; கிரகங்களின்
அமைப்பை அறியாமல் கணிக்கப்பட்ட ஜாதகத்தைப் போன்றது; பயனற்றது; சுவர் இல்லாத சித்திர முயற்சி. உண்மை, ஸத்யம், உணர்ச்சி
வெள்ளமாகப் பெருகும் உயிரென்னும் ஆற்றை இருகரையைப் போல அணைத்து வழி காட்டிச் செல்ல
வேண்டும்.”
“அது காட்டாற்று வெள்ளம்; பயனற்றது!”
“ஒவ்வொரு கணமும் ஒரு நாடித்துடிப்பால் நம்மை மாய்த்தும் உயிர்ப்பித்தும்
நிறுத்துகிற ரத்தத்தை நீங்கள் பலனற்றது என்று சொன்னால், நான் என்ன பதில் சொல்வது?”
“அந்த ரத்தவோட்டம் வேண்டாம்!”
“இப்போது நீங்கள் வாதத்தை விட்டுவிட்டீர்கள். சரி, பிறகு சாவுதான்!”
“அதுவே மேல்!”
“அது ஏற்படுவது நமது செயலில் இல்லையே!”
“அப்படி, பலவீனமாக உயிரை
உங்கள் உணர்ச்சிக்கு அடிமையாக்கி விடுவதா? சாவைத் தேடியடையும் தைரியம் வேண்டாமா?”
“அம்மா, இன்னும் ஆராய்ந்து
பாருங்கள். எல்லாம் கடைசியில் உணர்ச்சிதான்.”
“அது ஒரு நாய்க்குடை! கிளைத்த கணமே கருகுவது!”
“மறுமழையில் கிளைக்கும், திரும்ப!”
அன்னபூர்ணா மேலே வாதம்செய்ய முடியாமல், “நீங்கள் இப்போது என்ன சொல்லுகிறீர்கள்?” என்றாள்.
“இதுதான். பூப்போன்ற இந்த இளம்வயதில் நீங்கள் வாழ்க்கையில் வெறுப்புக்கொள்ளக்
கூடாது என்று சொல்லுகிறேன்.”
“அது பிறரை ஒன்றும் செய்யாதே?”
“அதற்குச் சொல்லவில்லை நான். உங்களுக்கே உயிர் இருக்கிறவரையில் அதில் ஒரு
பூரிப்பு இருக்க வேண்டும்.”
“இனிமேல் என் உயிரில் அது எப்படி வரும்? நீங்களே சொல்லுங்கள்; என் கதை முழுவதுந்தான் உங்களுக்குத் தெரியுமே!”
என்று சொன்னபோது அவள் கண்ணீர் கட்டில் அடங்கவில்லை.
விசுவேசுவரன் அந்தச் சோகத்தைக் கண்டு கலங்கிப்போனான்.
“அது வரும்படி செய்ய நான் முயற்சி செய்யலாமா?” என்று தன்னை அறியாமலேயே கேட்டுவிட்டான்.
அதைக் கேட்டதும் அன்னபூர்ணா ஒரு தரம் உலுக்கி விழுந்தாள்.
“என்னைத் திட்டுங்கள், காலால்கூட
உதையுங்கள், பட்டுக்கொள்கிறேன்.
ஆனால் ‘உன்னைக் காதலிக்கிறேன்’ என்ற வார்த்தைகளை மட்டும் சொல்லி விடாதீர்கள்!
கெஞ்சுகிறேன்; எனக்கு வேறு
போக்கிடமில்லை. ஆ, அதோ
உங்களுக்குக் கோபம் வந்துவிட்டதே! உங்கள் உறுதியைப் பற்றி நான் சந்தேகம் கொள்ளவில்லை.
காதலைத்தான் நான் நம்பவில்லை.”
“நீ, உண்மையான அன்பை -
காதல் என்ற பதம் வேண்டாம்- இது வரையில் அறிந்து அநுபவிக்கவில்லை. அது என் குற்றமா?”
என்று அவன் இளகிக் கேட்டான்.
“உண்மையான அன்பு! அப்படி ஒன்று இருக்குமா? நான் பச்சையாகக் கேட்கிறேன்; இனிமேல் என்ன? - நீங்கள் என்னுடைய அழகை அனுபவிக்க விரும்புகிறீர்கள்.”
இதைக் கேட்டதும் விசுவேசுவரன் ஆவேசம் பெற்றவன்போல் ஆகிவிட்டான்.
“நீ எண்ணுவது பிசகு, அன்னபூர்ணா!
சாரதா உன் புகைப்படத்தைக் காட்டினபோது அந்த அழகைக் கண்டு, ஒளியைக் கண்டு கண் கூசுவது போலக் கூச்சங்கொண்டேன்.
அது அப்போது, - நானும் மனம்
விட்டுச் சொல்லுகிறேன் என் மிருக உணர்ச்சியைத்தான் தூண்டிற்று.”
“இப்போது?”
“இப்போது உன் அழகு எப்படியோ நான் பார்க்கக் கூடியதாக ஆகிவிட்டது.”
“இல்லை, அது ஏமாற்றம்.
உண்மையில் நீங்கள் சற்றுமுன் பிரஸ்தாபித்த என் இளமையைப் பூப்போல, நீங்கள் சொன்ன மாதிரி - நட்புக்
கிளையிலிருந்து பறித்துக் கசக்கி மோந்து பார்க்க இச்சைப்படுகிறீர்கள். என்ன ஆகும்
தெரியுமா? பூ துவண்டு போகும்.
நீங்கள் அதை விட்டெறிந்து விடுவீர்கள்!”
“ஏமாற்றத்துக்கு இடம் கொடுக்கிறவனாயிருந்தால் நான் இவ்வளவு வருஷம் கல்யாணம்
இல்லாமல் இருந்திருக்க மாட்டேன். என் உயிரின் எண்ணங்களுடனும், ஏக்கங்களுடனும் உழன்று என் இருதயத்தில் ஒரு
பக்கம் சூன்யமாக இருப்பதை அறிந்திருக்கிறேன். அதை ஒரு பெண்தான் நிரப்பக்கூடும்
என்பதும் எனக்கு நெடுநாட்களுக்கு முன்பே தெரியும். அதற்குரியவள் நீதான் என்று
சாரதா நினைத்தாள். நான் நம்பவில்லை-”
அன்னபூர்ணா புன்னகை செய்தாள்.
“சாரதாவின் சதியாலோசனையா இது?”
“அவள் வேண்டுமென்றே நம்மைச் சந்திக்க வைத்திருக்கிறாள் என்று உண்மையாகவே எனக்கு
இப்போதுதான் தெரிகிறது. கதாபாத்திரத்தைப் போல் பேசுகிறேன் என்று நினைக்காதே. என்
தனிமையை இனிமையாக்குவாயா?”
“இனிமை அளிக்கும் சக்தியே என்னை விட்டு அகன்றுவிட்டதே! என் இருதய மலர்
அகாலத்தில் மலர்ந்து மூடிக்கொண்டுவிட்டது.”
“என் ஆர்வத்தால் அதை மறுமலர்ச்சி கொள்ளச் செய்கிறேன்; என்னை நம்பு!”
“ஐயோ, நான் என்ன செய்வேன்!
உங்கள் வீட்டில் உட்கார வைத்துக்கொண்டு தாங்கள் என்னை இப்படித் தடுமாறச் செய்வது
சரியா? என் செத்த மனத்தில்
நீங்கள் என்ன சுவையைக் காணப் போகிறீர்கள்?”
“அதைப் புனர் ஜன்மம் எடுக்கச் செய்கிறேன். இந்தா, தைரியமாகக் கையைக் கொடு!” என்று சொல்லிக்கொண்டே
எழுந்து அருகில் சென்று கையை நீட்டினான் விசுவேசுவரன்.
“வேண்டாம். நான் சொல்வதைக் கேட்கமாட்டீர்களா? நமக்கு இப்போது ஆறுதலாக இருக்கும் நட்புக்கூடப்
போய்விடும்!”
“நீ எண்ணுவது பிசகு; வா
சொல்லுகிறேன்!” என்று அவள் கையைப் பிடித்து எழுப்பி நிறுத்தினான்.
அன்னபூர்ணா மனம் தடுமாறினாள். நிற்க முடியாமல் துவண்டு தள்ளாடினாள்.
விசுவேசுவரன் அவளைத் தன்மேல் சாய்த்துக்கொண்டான்.
•••
கலைமகள், மே, 1935
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.