1
நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒரு வாரம் இருக்கும். ஒரு
நாள் காலையில் நாற்காலியில் சாய்ந்துகொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த
நிலத்தில் பாயப் போகிறதோ என்று யோசனை செய்து பார்த்துக்கொண்டிருந்தேன். நான்
கைக்கொண்டு செய்யக்கூடிய காரியமாக எனக்கு ஒன்றும் தென்படவில்லை. தேசீய இயக்கத்திலோ
ஒரு தேக்கம்; காங்கிரஸ்
நிர்மாணத் திட்டம் அப்பொழுது சிதைவுற்றுக் கிடந்தது.
தபாற்காரன் ஒரு கற்றைத் தமிழ்ப் பத்திரிகைகளுடன் ஒரு கவரையும் கொண்டுவந்து
கொடுத்தான். ஏகாங்கியான எனக்கு இவ்வுலகில் யார் கடிதம் எழுதக்கூடுமென்று எண்ணிக்கொண்டே
அதை உடைத்துப் படித்தேன். பின் வருமாறு ஆங்கிலத்தில் அது எழுதப்பட்டிருந்தது.
குலாம் காதர் கான்,எம்.ஏ.,
ப்ரோ. டிப்டி கலெக்டர்
மதராஸ்,
19-7-30
என்னருமைத் தோழா,
நீ என்னை மறந்திருப்பாயென்று நான் நினைக்கவில்லை. இத்தனை வருஷங்களாகக் கடிதம் எழுதாததற்குக்
காரணம், எனக்கு நீ
இருக்குமிடம் தெரியாததுதான். இப்பொழுதும், இந்தக் கடிதத்திற்கும் மேலேற்படும் நமது சந்திப்பிற்கும் காரணம் என் தங்கை
‘நூருன்னிஸா’. நாம் படித்தபொழுது நம்முடன் விளையாடினவள், ஞாபகமிருக்கிறதா? தற்செயலாகச் சென்ற பத்தாம் தேதி தினசரிப்
பத்திரிகையில் உன் பெயரைக் கண்டு அதை எனக்குக் காட்டினாள். அவள் உன்
‘இனிஷியல்’களைக்கூட நினைவில் வைத்திருந்ததால்தான் நீ என்று நிச்சயிக்க முடிந்தது.
நீ அன்றுதான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுபட்டதாகப் பத்திரிகையில் கண்டிருந்தது.
உடனே அவளுடைய யோசனையின் பேரில், உன் விலாசத்தைக் கேட்டு வேலூருக்கு, ‘டெமி அபிஷியலாக’த் தந்தி அடித்துப் பதில் வரவழைத்தேன். அது இன்று கிடைத்தது.
நமது பன்னிரண்டாவது வயதில், திருச்சியில் படிக்கும் பொழுது, ஒரு சிறுபிள்ளைப் பிரதிக்ஞை பண்ணிக்கொண்டோமே, நினைவிருக்கிறதா - நாம் ஒருவரையொருவர் அறியாமல்
கலியாணம் செய்துகொள்வதில்லை யென்று? அதை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்தக் கடிதம். சென்னையில் 22-7-30-ல் எனக்குக் கலியாணம். பத்திரிகை இதனுடன்
இருக்கிறது; நீ அவசியம்
வரவேண்டும்.
உன் அன்புள்ள
குலாம் காதர்”
இந்தக் கடிதம் மின்னலைப் போல என் மனத்தின் மறதியிருளை அப்பொழுது பளிச்சென்று
போக்கிற்று. இந்தப் பத்து வருஷங்களாகப் பரதேசிபோல் திரிந்த பொழுதும் உப்புச்
சத்தியாக்கிரகத்தின் காரணமாக ஆறு மாதம் சிறையிலிருந்தபொழுதும் அடிக்கடி என்
மனத்தில் தோன்றித் தோன்றி என்னை மயக்கிய பெண்ணுருவம் யாருடையது என்று தவித்தேனே -
அப்பா, அது நூருன்னிஸாவுடையது
தான்!
ஒரு சிறுமியின் முக்காடிட்ட குற்றமற்ற முகம்; அதில் மை தீட்டிய இமைகளிடையே குறுகுறு என்று
சஞ்சலித்த இரண்டு குறைகூறும் விழிகள்; ரோஜாக்களின் இடையே மல்லிகைபோலக் கீழிதழைச் சற்றே கடித்து வெளியே தோன்றின பல்
வரிசை - இத்தகைய உருவம் மோகினிபோல் என் மனத்தில் குடிகொண்டு ஆட்டிவைத்ததே - அது
அவளுடையது!
அவளுடைய மன நிலையும் என்னுடைய மன நிலையை ஒத்திருக்கக்கூடுமா என்ன!
இல்லாவிட்டால் இக்கடிதத்திற்கு ஏன் காரணமாகிறாள்? கூட்டத்திற் கலந்து திரியும் என்னைக் குறித்தல்லவோ
அவள் கூப்பிடுவதுபோலிருக்கிறது!
2
குலாம் காதருக்கும் எனக்குமிருக்கும் இந்தச் சிநேகம் ஆரம்பமானது மிகவும்
வேடிக்கை. எனது பத்தாவது வயதில் என்னை என் தகப்பனார் திருச்சியில் ஒரு செகண்டரிப்
பள்ளிக்கூடத்தில் மூன்றாவது வகுப்பில் சேர்த்தார். அங்கே குலாம் என் ‘பக்கத்துப்
பையன்’. பெண்சாயல் கொண்ட வளர்ந்த வாலிபன்.
ஒருநாள் கணக்குப் போடும்பொழுது குலாம் என் சிலேட்டைப் பார்த்துக் ‘காபி’
அடித்துவிட்டான். அதெப்படி வெளியாயிற்றென்றால், நான் பிசகாய்ப் போட்டிருந்த வழி அவனுடைய
சிலேட்டிலும் காணப்பட்டது. உடனே உபாத்தியாயர், நான் ‘காபி’ அடித்தேனென்று என்னைப் பிரம்பால்
அடித்தார்.
குலாம் சாயந்தரம் வீட்டுக்குப் போகும்பொழுது என்னைக் கை தட்டிக் கூப்பிட்டான்.
“நீ ஏன் என்மீது குற்றஞ்சாட்டவில்லை?” என்று கேட்டான். நான் பதில் சொல்லவில்லை.
அவனுக்கு என்ன தோன்றிற்றோ தெரியாது.
“அடே, என்னோடு, எங்க மோட்டாரில், எங்கவூட்டுக்கு வா. அப்புறம் உங்கவூட்டிலே
கொண்டுவுட்றேன்” என்றான்.
காரில் ஏறினோம். காரில் சவாரி செய்ய வேண்டுமென்ற என் ஆசை பூர்த்தியாயிற்று.
பதினைந்து நிமிஷத்தில் தென்னூரில் அரண்மனை போன்ற ஒரு வீட்டு வாசலுக்குக் கார்
விர்ரென்று போய் நின்றது.
கயாஸுடீன் ஸாஹேப் ஒரு பெரிய வர்த்தகர். ஆற்காடு நவாப் வம்சத்தைச்
சேர்ந்தவராம். வீட்டின் முன் ஹாலில் பிரும்மாண்டமான வெல்வெட்டுத் திண்டுகள்
போட்டுச் சாய்ந்துகொண்டிருந்தார். எதிரில் ஹுக்காவும் எச்சிலுமிழும்
பாத்திரமொன்றும் இருந்தன. எங்கே பார்த்தாலும் நிலைக் கண்ணாடிகள், பெரிய பெரிய மொகலாயப் படங்கள். பளிங்கு
மயில் ஒன்றில் செருகப்பட்டிருந்த ஊதுவத்திகளிலிருந்து வாசனை கம்மென்று வீசிற்று.
காலுக்கு மெத்தென்றிருந்த ரத்தினக் கம்பளங்கள் தரையில் விரிக்கப்பட்டிருந்தன.
குலாம் குதித்துக்கொண்டு போய் அவரிடம் ஏதோ சொன்னான். பிரமித்துப் போயிருந்த
என்னைப் பார்த்து, அவர், “இங்கே வா!” என்று கூப்பிட்டார். பிற்காலத்தில் நான் மௌலானா ஷௌகத் அலியைப்
பார்க்கும்போதெல்லாம் அவர் ஞாபகம் எனக்கு வரும். குலாம் என்னை அவரிடம்
இழுத்துக்கொண்டு போனான். அவர் என்னைத் தடவிக் கொடுத்துக்கொண்டே தம் மனைவியைக்
கூப்பிட்டார். உள்ளேயிருந்து அந்த அம்மாளும் அவளுடைய இரண்டு பெண்களும் வந்தார்கள்.
இப்பொழுது ஞாபகத்திலிருந்து சொல்லுகிறேன். அந்த அம்மாளுக்குச் சுமார் முப்பது
வயதிருக்கலாம். உயர்ந்து வளர்ந்த அழகான ஸ்திரீ. அவள் மெதுவாக ஒவ்வோர் அடி எடுத்து
வைத்து வந்தபொழுதும் கால் சலங்கை கலீர் கலீரென்று சப்தம் செய்தது. மூத்த பெண்
அலிமா குட்டையாயும் ஸ்தூலமாயும் இருந்தாள். இளைய பெண் நூருன்னிஸாவோ குலாமைப் போலவே
இருந்தாள்.
அப்பொழுது அவளுக்கு எட்டு வயதிருக்கலாம். இவ்வளவு வர்ணனை செய்கிற சக்தி எனக்கு
அப்பொழுதிருந்ததா என்ற சந்தேகம் வேண்டாம்; கிடையாது. ஆனால் என் மனத்தில் ‘போட்டோ’ பிடித்ததுபோல் பதிந்திருக்கிற
அம்சங்களையே இப்போது எடுத்து எழுதுகிறேன்.
நூருன்னிஸாவின் உருவமும் என் மனத்தில் வரைந்த சித்திரம் போல் நிற்கிறது. நான்
முதன்முதலில் பார்த்த அன்று அவள் ஜரிகை மயமாயிருந்த பச்சைப் பட்டுப்பாவாடை
உடுத்திருந்தாள். லேசான மஞ்சள் பட்டு ரவிக்கையும் ரோஜாப் பட்டுத் தாவணியும்
அணிந்திருந்தாள். காலில் காப்பு, பாதஸரம், கையில் காப்புகள்,
விரல்களில் மோதிரங்கள். கர்நாடக
முகம்மதியர்போலக் குருடு முதலியன இல்லை. முகம் என் மனத்தில் அப்படியே இருக்கிறது.
நீண்ட புருவங்களும் தலைமயிரும் கன்னங்கறேலென்று இருந்தன. பின்னல் இல்லாமல்
தலைமயிரை முடிந்திருந்தாள். அது அவளுக்கு ரொம்ப அழகாக இருந்தது. அவள் உடலின்
சிவப்புக்குச் சமானமே சொல்ல முடியாது. அவள் கண்கள் - அவற்றின் தன்மையை எடுத்துச்
சொல்ல முடியவில்லை. வேண்டுமானால் தாமரை இதழ்கள் போன்றன, மீனுருவம் கொண்டன என்று கவியைப் போல் சொல்லிக்கொண்டே
போகலாம்.
கயாஸுடீன் தம் மனைவியிடம் ஏதோ சொன்னார். அவள் என்னை ஒருதரம் பார்த்துவிட்டு
அலிமாவிடம் ஏதோ சொன்னாள். அலிமா உள்ளே போய் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளைகள் நிறைந்த ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதை என்னிடம் கொடுத்தபோது
குலாமின் தாயினது முகத்தில் தோன்றிய அன்புப் பார்வையை நான் மறக்கவே முடியாது. என்
கன்னத்தை ஒரு தரம் தாய்போலத் தடவிக்கொடுத்தாள்.
குலாம் என்னைக் கூட்டிக்கொண்டு காருக்குச் சென்றான். அதில் ஏறி உட்கார்ந்தோம்.
புறப்படும்பொழுது வாசற் பக்கம் கண்ணெடுத்துப் பார்த்தேன். நூருன்னிஸா முக்காட்டைப்
பல்லால் கடித்துப் பிடித்துக்கொண்டு என் முகத்தைப் பார்த்துக்கொண்டு
நின்றிருந்தாள். என் கண்களைச் சந்தித்த நிமிஷம் உள்ளே ஓடிவிட்டாள்.
அன்று முதல் நானும் குலாம் காதரும் இணை பிரியாது திரிந்தோம்; விளையாடினோம்; அரட்டைகள் அடித்தோம். ஆகாசக் கோட்டைகள் கட்டி
மகிழ்ந்தோம். ஸதா ஸர்வ காலமும் நான் அவன் வீட்டில்தான் இருப்பேன். நூருன்னிஸாவும்
எங்களுடன்தான் இருப்பாள். நாங்கள் செய்வதையும் பேசுவதையும் உற்றுக்
கவனித்துக்கொண்டிருப்பாள். தானும் கூட விளையாடுவாள். தெரியாமல் பின்னால்
ஒளிந்துவந்து, என் கண்களைப்
பொத்துவதில் அவளுக்கு ஓர் ஆனந்தம். ஏன், எனக்குந்தான் ஒருவித மகிழ்ச்சி அப்பொழுது உண்டாகும். அவள் கைகள் மிருதுவாக
ரோஜாமலர்போல இருக்கும். கைகளை எடுத்துவிட்டுக் கலகலவென்று சிரிப்பாள். அவள்
கன்னங்கள் குழிவுபடும். அச்சமயம் என் மனமென்னவோ நான் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு
சந்தோஷத்தை அடையும்.
நாலாவது பாரம் வரையில் நானும் அவனும் இப்படி இருந்தோம். திடீரென்று என்
தகப்பனாரைத் திருச்சியிலிருந்து மாற்றிவிட்டார்கள். பிறகு எனக்கும் குலாமுக்கும்
சந்திப்பே கிடையாது.
பன்னிரண்டு வருஷங்களுக்குப் பிறகு, அவனிடமிருந்து இந்தக் கடிதம் வந்திருக்கிறதென்றால் என் சந்தோஷத்தை என்னென்பது?
மறுநாள் இரவுவண்டியில் சென்னைக்குப் புறப்பட்டேன்.
3
பந்துக்கள் நிறைந்த மஹாலில் குலாம் என்னைத் தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு
பழைய நாட்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தான். முகம்மது காஸிம் என்ற
வித்துவானின் பாட்டுக்கச்சேரி நடந்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் ரோஜா
வர்ஷம்! அத்தரும் பன்னீரும் ஜலப் பிராயமாய் வழங்கப்பட்டன. ஆறு மணிக்குச் ஸபை
கலைந்தது. குலாம் என்னைப் பங்களாவின் மேல்மாடியிலிருந்த ஓர் அறைக்கு அழைத்துச்
சென்றான். வெகு நேரம் அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
குலாமின் தாய், மகனைத்
தேடிக்கொண்டு அங்கே வந்தாள். நானிருப்பதைப் பார்த்துச் சட்டென்று பின்வாங்கி
முகத்தை மூடிக்கொண்டாள்.
“அம்மா, யாரென்று
எண்ணுகிறாய்? நம்ம -” என்று
குலாம் ஆரம்பித்தான்.
“எனக்கு ஞாபகம் இருக்கிறது. சௌக்கியமா அப்பா?” என்று கேட்டுக்கொண்டு மெதுவாக அந்த அம்மாள்
முன்வந்தாள்.
“சௌக்கியம் அம்மா!”
“எங்கே இருக்கிறாய்?”
“திருச்சியில் இருக்கிறேன்.”
“கலியாணம் ஆயிற்றோ?”
“இல்லை!”
பேசும்பொழுதே அவ்வுருவிற்குப் பின்னால், இன்னும் ஓர் இளம் உருவம் நிழல்போல நிற்பதுபோன்ற
பிரமை தட்டிற்று எனக்கு. ஒரு நிமிஷம், நூருன்னிஸாவே என் முன் தோன்றுவாளோ என்ற ஆசை! மறு நிமிஷம், ‘சே! அதெப்படி முடியும்? அவள் பர்தாப் பெண் அல்லவோ? குலாமும் கடிதத்தில் எழுதினதைத் தவிர நேரில்
அவளைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லையே?’ என்ற நினைப்பு ஏற்பட்டது. அவள் யோக க்ஷேமத்தைப் பற்றிக் கேட்கக்கூட எனக்கு
யோசனையாயிருந்தது. அவளை நிச்சயமாகப் பார்க்க முடியாதென்ற எண்ணம் ஏற்பட்ட பிறகுதான்
குலாமுடன் சுயப் பிரக்ஞையுடன் பேசினேன்.
இரவு பத்து மணி சுமாருக்குக் குலாம் படுத்துக்கொள்ளச் சென்றான். எனக்கு ஒரு
தனியறை ஒழித்துத் தந்திருந்தார்கள்.
என் தனியறையின் தனிமையில் நான் படுக்கையில் படுத்துப் புரண்டேன். மின்சார
விளக்கின் வெளிச்சம் எனக்குத் தாங்க முடியாததாக இருந்ததால், அதை அணைத்துவிட்டு ஜன்னலைத் திறந்து வைத்தேன். அதன்
வழியாகப் பூர்ண சந்திரன் என் படுக்கையின் மேலே தன் ஒளியைப் பரப்பினான்.
படுக்கையில் உட்கார்ந்துகொண்டு எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினேன்.
அதே வீட்டின் ஒரு பாகத்தில் அவளும் அப்பொழுது சஞ்சரித்துக் கொண்டிருந்தாளல்லவா!
என் ஹிருதயத்தின் நிலைமையை அவள் அறிவாளோ? முடியாது. பூவின் அவா மணமாக வெளியேறி உணர்வைத்
தாக்குகிறது. நினைவில் புறப்படும் அலை எப்படி அவள் ஹிருதயக் கரையில்போய் மோத
முடியும்? ஸாத்தியமில்லை...
அக்கடிதத்தில் தன் சகோதரனைக் கருவியாகக் கொண்டு என்னை ஏன் இங்கு வரவழைத்தாள்?
பின் என்னிடத்தில் அவளுக்கோர் -
அதெப்படி நான் சொல்லுவது?
இந்தத் தினுசாக என் பேதை மனம் கேள்விகளும் மறு கேள்விகளும் போட்டுக்கொண்டு,
சமுத்திரம்போல அலையலையாய்ப்
பொங்கிக்கொண்டிருந்தது.
நடுநிசியாயிற்று. எனக்குத் தூக்கம் வரவே இல்லை. பட்டணத்தின் ஓசையும்
அடங்கிவிட்டது. தூரத்திலிருந்து சமுத்திரத்தின் ஓலந்தான் காற்றில் மிதந்து வந்தது.
திடீரென்று மனத்தில் ஓர் ஆசை உதித்தது. ‘ஒருவேளை இப்பொழுது என்னை நூருன்னிஸா
பார்க்க வரக்கூடுமோ? அல்லது,
என்னைத்தான் எங்கேயாவது
எதிர்பார்க்கிறளோ?’ என்று
நினைத்தேன்.
மெதுவான காலடிச் சத்தம் கேட்டது. ஆம், அது நூருன்னிஸாதான்! வந்து எனக்கு அருகே இருந்த ஜன்னலின் அப்புறத்தில்
நின்றாள்! அதே உருவந்தான்! வயதிற்கேற்ற வாட்டசாட்டம் மட்டுமே வித்தியாசம். நிலவில்
முகம் வியக்தமாகத் தெரிந்தது. இன்னது சொல்கிறேன் என்று அறியாமல் எழுந்து நின்று,
“எண்ணினபடி ஆயிற்றே!” என்றேன்.
ஒரு விரலால் தன் உதடுகளைப் பொத்திக் காட்டினாள். தான் மார்பில் வைத்திருந்த
ஒரு கவரை எடுத்து என் கையில் கொடுத்தாள்.
“இதை ஊருக்குப் போய்ப் படி; நாளைக் காலையிலேயே புறப்பட்டுவிடு! பார்த்தாய்விட்டது. ஒரு நிமிஷம் தாமதிக்கக்
கூடாது” என்று சொல்லித் திரும்பினாள்.
கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்த்தாள்! நிலவின் வெளிச்சத்தில் அவளுடைய
அழகான முகத்தில், கலவரத்தினால்
முத்து முத்தாய் வேர்வை துளித்திருந்ததைக் கவனித்தேன். நான் தாவியோடி அவள் கையைப்
பற்றினேன்.
ஒரு நிமிஷம் அப்படியே நின்றோம்!
மறு நொடியில் மெதுவாகக் கையை விடுத்துக்கொண்டு போய்விட்டாள்.
4
மறுநாட் காலை நான் பயணத்திற்குக் தயாராயிருந்ததைக் கண்டு குலாமின் முகம்
வாட்டமடைந்தது.
“என்ன சமாசாரம்?” என்றான்.
“அதுதான் ஒருநாள் இருந்தாயிற்றே; மற்றொரு சமயம் சாவகாசமாகச் சந்திப்போம். எனக்குக் கொஞ்சம் காரியம் இருக்கிறது”
என்றேன்.
அரை மணிக்குள் அந்தப் பங்களாவைவிட்டு வெளியேறிவிட்டேன்.
திருச்சியில் காவேரிக்கரை ஓரத்தில் என் அறையிலிருந்து ஜன்னலின் வழியாகத்
திரும்பவும் அதே சந்திரனைப் பார்த்துக்கொண்டிருந்தேன் - எவ்வளவு மாறுபட்ட மனோபாவத்துடன்!
கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தேன்.
“இக்கடிதத்தை என் வாக்காகவும் என் அடையாளமாகவும் நீ வைத்துக்கொள்ளலாம். நாம்
திருச்சியில் சிறு குழந்தைகளாக விளையாடினபோது என் மனத்தில் உன்னிடம் ஏற்பட்டப்
பற்று என்னை விட்டு இன்னும் அகலவில்லை. ஏனென்றால், ஸதா உன் உருவம் சிலைபோல என்முன் நிற்கிறது.
நான் நித்திய இளமையோடு உன்னுடன் விளையாடுவது போலவே கனவு காண்கிறேன். உன்னை
மற்றொருமுறை இந்த ஜன்மத்தில் பார்க்க வேண்டுமென்ற அவாவும் நிறைவேறிவிட்டது. இனி
என் நாட்களை முன்பு ஜெபுன்னிஸா கழித்ததுபோலக் கழிக்கப் போகிறேன். என் தாயிடம்
உனக்குக் கல்யாணமாகவில்லையென்று நீ சொன்னது எனக்குத் திருப்தியைக் கொடுத்தது.
இனிமேல் நீ வேறொரு ஸ்திரீயிடம் ஈடுபடாமல் உன் வாழ்நாட்களை என் மனத்தோடு மட்டும்
லயிக்கச் செய்து கழிப்பாயானால், நானும் சோர்வின்றி வாழ்வேன். அப்படியே செய்கிறேனென்று நீ எனக்குப் பதில் எழுத
வேண்டாம். நீ செய்வாயென்று எனக்கொரு தீவிர நம்பிக்கை இருக்கிறது. அதே என் உயிர்
நாடி.
நான் மெய்ம்மறந்து உன்னையே நினைக்கிறேன். ஆனால் நாமிருவரும் இவ்வுடலில்
ஸதிபதிகளல்ல எப்போதும். சரீர இச்சை வேண்டாம் நமக்கு. பூர்ணமாக நினைவு ஆகாசத்தில்
ஜொலிக்கும் சுக சந்திரனுக்குக் களங்கமுண்டாக்காதிருப்போம்! சரிதானே?”
உன்
நூர் உன்னிஸா
அவ்வொளி மயக்கத்தில் அவளே மதியுருவுடன் வந்து என்னிடம் வாக்கு வாங்குவது
போலிருந்தது.
என் மனமோகினியின் கட்டளைப்படி நான் உலக வழிகளில் திரிந்து வருகிறேன். நான்
செய்யும் சகல காரியங்களிலும் நான் நினைத்த மாத்திரத்தில் என் முன் தங்கப்பதுமைபோல
வந்து நின்று என்னை உத்ஸாகப்படுத்துகிறாள். என் சோர்விலும் என் மனத்தின் முன்
குதித்துக்கொண்டு வந்து நின்று என்னை ஆற்றுகிறாள்.
சுதந்திரச் சங்கு, 30-3-1934
[முதலில் எழுதிய சிறுகதை]
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.